ராஜஸ்தான் அரசியல் குழப்பம்; சச்சின் பைலட் காங்கிரசை விட்டுப் போவாரா? நடப்பது என்ன?

0
146

மத்தியப் பிரதேசத்தில் நடந்ததைப்போல ராஜஸ்தான் காங்கிரஸ் அரசும் சிக்கலில் உள்ளதாகத் தோன்றுகிறது.

திங்கள்கிழமை நடந்த மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்கவில்லை. ஆனாலும், ஆட்சிக்கு ஏதும் பிரச்சனை இல்லை என்று முதல் கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

கூட்டத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது. கூட்டத்தில் இருந்து வெளியே வந்த ஒரு எம்.எல்.ஏ., எல்லாம் நல்லபடியாக இருப்பதாக கூறினார் என்றும் ஏ.என்.ஐ. தெரிவிக்கிறது.

முன்னதாக, தமது அரசைக் கவிழ்க்க பாஜக முயல்வதாக மாநில முதல்வர் அசோக் கெலாட் சனிக்கிழமை குற்றம்சாட்டினார்.

ஆனால், இந்தக் கூட்டத்துக்குப் பிறகு ட்வீட் செய்த பாஜக ஐ.டி. பிரிவுத் தலைவர் அமித் மாளவியா, உண்மையில் காங்கிரஸ் அரசுக்குப் பெரும்பான்மை இருந்தால், அவர்கள் உடனடியாக தங்கள் பலத்தை சட்டப் பேரவையில் நிரூபிக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் அவர்கள் எம்.எல்.ஏ.க்களை விடுதிக்கு அழைத்துச் சென்றால், அவர்களுக்குப் பெரும்பான்மை இல்லை என்று பொருள் என்று கூறினார் அவர்.

துணை முதல்வரும் அதிருப்தி தலைவருமான சச்சின் பைலட் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், அவருக்காக காங்கிரஸ் கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்றும், பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கலாம் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில், சச்சின் பைலட் காங்கிரசில் இருந்து வெளியேறுவாரா? அவருக்கு என்ன பிரச்சனை, அவரது பலம், பலவீனம் என்ன என்று அலசுகிரார் செய்தியாளர் தரேந்திரகுமார் கிஷோர்.

கொரோனாவை சமாளிக்கப் போராடும்போது…

தாம் மாநிலத்தில் கொரோனா பிரச்சனையை சமாளிக்கப் போராடிக்கொண்டிருக்கும்போது பாஜக அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதில் தீவிரமாக இருப்பதாக குற்றம்சாட்டிய கெலாட், பாஜக தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

குதிரை பேரம் நடப்பதாக கூறப்படுவது குறித்து விசாரிக்கும் பொறுப்பு சிறப்பு நடவடிக்கைக் குழு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட், சட்டமன்றத் தலைமைக் கொறடா மகேஷ் ஜோஷி ஆகியோரிடம் விசாரணை நடத்த எஸ்.ஓ.ஜி. எனப்படும் இந்த சிறப்பு நடவடிக்கைக் குழு அழைப்பானை (சம்மன்) அனுப்பியது.

இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு இடையே ஏற்பட்ட மோதலைப் போல ராஜஸ்தானில் முதல்வர் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் மோதல் உருவாகியுள்ளது. ராஜஸ்தானில் கடைசியில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ராஜஸ்தானில் முடிவு எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.

தம்மிடம் 30 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும், கெலாட் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ், சட்டமன்ற கட்சிக் கூட்டம், அதாவது எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கவிருந்த நிலையில் பைலட் தம் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

எவர் பெயரையும் குறிப்பிடாமல் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் “என் கட்சி குறித்து கவலைப்படுகிறேன். எல்லா குதிரைகளும் லாயத்தைவிட்டு சென்ற பிறகுதான் விழிப்போமா?” என்று குறிப்பிட்டுள்ளார்.

2018ம் ஆண்டு ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றவுடனேயே பதவிக்கான போட்டி தொடங்கிவிட்டது. மூத்த தலைவர் அசோக் கெலாட், காலம் சென்ற மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் பைலட்டின் மகனான சச்சின் பைலட் இருவருக்குமே முதல்வர் பதவி மீது ஆசை ஏற்பட்டது. இறுதியாக அசோக் கெலாட் வென்றார். முதல்வரானார். சச்சின் பைலட் துணை முதல்வர் ஆனார். இந்த அரசு 18 மாதம் பதவியில் இருந்த பிறகு, இந்த இரு தலைவர்களுக்கு இடையில் மீண்டும் போட்டி தலைதூக்கியுள்ளது.

எனவே மத்தியப் பிரதேசத்தில் நடந்தது அப்படியே ராஜஸ்தானிலும் நடக்குமோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இதைப் போலவே தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு, இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் மூத்த தலைவரான கமல்நாத்துக்கும் இடையே முதல்வர் பதவி தொடர்பாகப் போட்டி ஏற்பட்டது. மூத்த தலைவர் கமல்நாத் முதல்வரானார். பிறகு, சிறிது காலத்தில் கமல்நாத்துக்கும் சிந்தியாவுக்கும் மோதல் ஏற்பட்டு, சிந்தியா பாஜகவுக்கு சென்றார். கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் விவகாரம் குறித்து சிந்தியா ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், எனது பழைய காங்கிரஸ் சகாவான சச்சின் பைலட் முதல்வர் அசோக் கெலாட்டால் ஓரம் கட்டப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுவது கண்டு நான் வேதனைப்படுகிறேன். திறமைக்கு காங்கிரசில் இடமில்லை என்பதை இது காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார் சிந்தியா.

சச்சின் பைலட் காங்கிரசை விட்டுப் போவாரா?

ஜோதிராதித்ய சிந்தியா போலவே சச்சினும் காங்கிரஸ் கட்சியை விட்டுச் செல்வாரா? மூத்த பத்திரிகையாளர் நீரஜா சௌதாரி இதற்குப் பதில் தருகிறார். “சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவார் என்று தோன்றவில்லை. கட்சியில் நெருக்கடிக்குள்ளாவதாக அவர் கூறியிருந்தாலும், கட்சியை புத்துணர்வு செய்யவைப்பது பற்றியும் அவர் பேசுகிறார். காங்கிரஸ் தலைமையுடன் அவர் பேசுவார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், துணை முதல்வரான அவருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியவிதம், எல்லா எல்லைகளும் கடந்துவிட்டதாகவே தோன்றுகிறது. நீண்ட நாட்களாகவே இறுக்கம் கூடிக்கொண்டிருக்கிறது” என்கிறார் நீரஜா.

சச்சின் முதல்வராக விரும்பினார். அவரால் ராஜஸ்தான் தேர்தலில் கட்சிக்கு வெற்றியை வாங்கித் தரமுடிந்தால், அவர் முதல்வராக்கப்படுவார் என்று ராகுல் அவரிடம் கூறினார். ஆனால், வெற்றி பெற்றவுடன், அசோக் கெலாட் முதல்வராக்கப்பட்டார் என்கிறார் நீரஜா.

கெலாட்டுக்கு நல்லபெயர் உள்ளது. அனுபவம் மிக்கவர். ஆனால், ராஜஸ்தானில் காங்கிரஸ் வெல்வதற்கு சச்சின் கடுமையாக உழைத்தார். அவர் ஓரம்கட்டப்பட்டார் என்பது உண்மைதான். இது போன்ற நேரத்தில் முதல்வர் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்கிறார் நீரஜா.

ஒரு குறிப்பிட்ட வகை அரசியல் மூலம் தனது நிலையை ராஜஸ்தானில் கட்டமைத்தார் சச்சின் பைலட். அதைக் கொண்டு பார்க்கும்போது, மீண்டும் அவர் சமரசம் செய்துகொள்ளமாட்டார் என்று தோன்றுகிறது. அவர் காங்கிரசில் இருந்தால், முதல்வர் பதவிக்கு குறைவாக எதையும் ஒப்புக்கொள்ளமாட்டார் என்கிறார் விவேக் குமார்.

அவருக்கு முதல்வர் பதவி கிடைக்காது என்றால் அவர் பாஜகவுக்குத் தாவ முடிவு செய்யலாம். அல்லது, மூன்றாவது அணி அமைக்கலாம் என்றும் கூறுகிறார் விவேக். மூன்றாவது அணி என்பது, ஜாட்டுகள், குஜ்ஜர்களின் கூட்டணியாக இருக்கும். ஜாட் சாதித் தலைவர்கள் சச்சின் பைலட்டுக்கு ஆதரவு தர வாய்ப்பு அதிகம் என்பதும் விவேக்கின் பார்வை. இப்போதைக்கு இந்தக் கூட்டணி என்பது எட்டாத கூட்டணி போலத் தோன்றினாலும், இதற்கு வாய்ப்பு இல்லாமல் இல்லை என்பது அவரது பார்வை.

பாஜகவின் வசுந்தரா ராஜே தமது ஆதரவை எப்படிப் பெருக்கிக்கொண்டாரோ அதே பாணியில் தமது ஆதரவைப் பெருக்கிக்கொண்டவர் சச்சின் பைலட் என்கிறார் விவேக்.

சச்சின் பைலட் – ஜோதிராதித்ய சிந்தியா: ஆளுமை வேறுபாடு என்ன?

ஒரு காலத்தில் சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா இருவரும் காங்கிரசில் புதிய நட்சத்திரங்களாகப் பார்க்கப்பட்டார்கள். அவர்கள் தந்தையர் ராஜேஷ் பைலட், மாதவராவ் சிந்தியா ஆகியோர் இருவரும சம காலத்தைச் சேர்ந்த வலிமையான காங்கிரஸ் தலைவர்கள்; தமது மாநிலங்களில் காங்கிரசுக்குத் தலைமை வகித்தவர்கள்.

ஆனால், மத்தியப் பிரதேசத்தில் தொடர்ந்து நடந்த அதிகாரப் போட்டிக்குப் பிறகு பாஜக பக்கம் சாய்ந்தார் ஜோதிராதித்ய சிந்தியா.

ஜோதிராதித்ய சிந்தியா அரச குடும்பத்தை சேர்ந்தவர். சச்சின் பைலட் தமது தந்தையின் மரணத்துக்குப் பிறகு காங்கிரசில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், எல்லாவற்றையும் அவர் தமது சொந்த முயற்சியிலேயே அடைந்தார் என்கிறார் நீரஜா.

இந்த இருவருக்கும் இடையில் உள்ளதில் இன்னொரு முக்கிய வேறுபாடு, சச்சின் பைலட் மண்ணின் மைந்தராகப் பார்க்கப்படுவதும், சாமானியர்கள் மத்தியில் வேலை செய்ய முடிவதும், தேவை ஏற்பட்டால் சாதாரண கட்டிலில் மக்களோடு மக்களாக உறங்கக் கூடியவர் என்பதும்தான்.

ஆனால், ஜோதிராதித்ய சிந்தியா சாதுர்யமானவர், திறமையானவர். அவரது குடும்பம் பாஜகவுடன் நெருக்கமாக இருந்தது. அவர் ராகுல்காந்தியோடு நெருக்கமாக இருந்தார். அவரும்கூட அவரது அரசியல் அடித்தளமாக இருக்கும் பகுதிகளில் அவர் நீண்ட பயணம் மேற்கொண்டார் என்கிறார் நீரஜா.

  https://www.bbc.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here