ராஜமௌலி ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடிக்கும் இந்தப் படம் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய இரு சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றியது. இந்தப் படத்துக்கு இன்ஸ்பையராக, தி மோட்டார் சைக்கிள் டைரிஸ் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் அமைந்ததாக ராஜமௌலி கூறியுள்ளார். தி மோட்டார் சைக்கிள் டைரிஸ் திரைப்படம், 23 வயதான எர்னெஸ்டோ குவேரா தனது நண்பனுடன் தென்அமெரிக்கா நாடுகளை மோட்டார் சைக்கிளில் நான்கரை மாதம் சுற்றிய அனுபவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இந்தப் பயணமே எர்னெஸ்டோ குவேராவின் மனதில் மாற்றத்தை விதைத்து பிற்காலத்தில் அவர் சே குவேரா என்ற போராளியாக மாற காரணமாக அமைந்தது.

எர்னெஸ்டோ குவேரா 1952 இல் தனது 23 வயதில் பல் மருத்துவருக்கான படிப்பின் இறுதிக்கட்டத்தில் தனது நண்பன் ஆல்பெர்டோ கிரானடோவுடன் தென்அமெரிக்க நாடுகளை மோட்டார் சைக்கிளில் சுற்றிவரும் முடிவை எடுக்கிறார். அதிகபடியான இடங்களை பார்ப்பது, அதிகபடியான மனிதர்களுடன் பழகுவது, விதவிதமான உணவுகளை ருசி பார்ப்பது இதுவே அவர்களது நோக்கம். ஆல்பெர்டோவுக்கு கூடுதலாக, அதிகளவு பெண்களுடன் பழகுவது என்ற உதிரி நோக்கமும் இருந்தது. இந்தப் பயணத்தில் நண்பர்கள் எதிர்கொண்ட அனுபவங்கள் அவர்களை வேறெnரு மனிதர்களாக மாற்றியது. கம்யூனிஸ சிந்தையையும், அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்ற உந்துதலையும் இந்தப் பயணங்களிலிருந்தே குவேரா பெற்றார். அவர் தனது அனுபவங்களை எழுதி வைத்த டைரிக் குறிப்பு, தி மோட்டார் சைக்கிள் டைரிஸ் என்ற பெயரில் வெளியானது. அதனடிப்படையில் அதே பெயாpல் 2004 இல் எடுக்கப்பட்ட திரைப்படமே தி மோட்டார் சைக்கிள் டைரிஸ்.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்தே ஆர்ஆர்ஆர் படத்தை எடுப்பதற்கான உந்துதல் கிடைத்ததாக ராஜமௌலி கூறியுள்ளார். அல்லுரி சீதாராமராஜு, கொமரம் பீம் என்ற இருவேறு சுதந்திரப் போராட்ட வீரர்கள் எப்படி வெளிச்சத்துக்கு வருகிறார்கள், அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களாக அறியப்படும்முன் என்னவாக இருந்தார்கள், எது அவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்களாக மாற்றியது என்பதை ஆர்ஆர்ஆர் படத்தில் பிரதானமாக சொல்லவிருக்கிறார் ராஜமௌலி. இந்த கதைக்கு தி மோட்டார் சைக்கிள் டைரிஸ் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் இன்ஸ்பிரேஷனாக அமைந்தது ஆரோக்கியமான வரவேற்க வேண்டிய நிகழ்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here