பிரதமர் மோடி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்து  நாட்டின் பொருளாதாரத்தை அழித்தார், நாங்கள் பொருளாதாரத்தை சீரமைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார்.

இதுதொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி சீரழித்துவிட்டார். குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டு மக்களிடம் இருந்த பணம் காணாமல் போனது. அதிலும் பணமதிப்பிழப்பு மற்றும ஜிஎஸ்டி வரி ஆகியவற்றால் மிகப்பெரிய பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்யும் விதமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 2 அம்ச நியாய திட்டம் கொண்டுவரப்படும். அதன்மூலம் முதலில் 20 சதவீத ஏழைக்குடும்பங்களின் குறைந்தபட்ச வருவாய் உறுதிசெய்யப்படும். இரண்டாவதாக பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பொருளாதார சரிவு சரிசெய்யப்பட்டு மீண்டும் உயர்வு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்த நியாய திட்டம் என்பது பிரதமர் மோடி ஏழைகளிடம் இருந்து பறித்துக்கொண்டதை மீண்டும் அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதுதான். விவசாயம், வேலைவாய்ப்பு மற்றும் சிறு, குறு தொழில்களின் பாதிப்புகள், நாட்டின் தாய்மார்களும், சகோதரிகளும் வைத்திருந்த சேமிப்பு என அனைத்துக்கும் நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நியாய திட்டம் மூலம் ஏழ்மை ஒழிக்கப்பட்டு, மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தப்படும். தனக்கு வேண்டிய 15 பேருக்கு மட்டுமே பிரதமர் மோடியால் ரூ. 3.5 லட்சம் கோடி வழங்க முடியும் என்றால், 20 சதவீத குடும்பங்களின் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தை ஏன் செயல்படுத்த முடியாது என்று தெரிவித்தார். 

பொருளாதார வல்லுநர்களிடம் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் நியாய திட்டத்துக்காகப் பெற்றோம். இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.3.60 லட்சம் கோடி செலவாகும். இந்த திட்டத்தால், நாட்டின் நிதிப்பற்றாக்குறை எந்தவிதத்திலும் மோசமடையாது என்பதை கூறுகிறேன்.

பொருளாதாரத்தில் மோசமான நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஏராளமான பொருளாதார வல்லுநர்கள், ஆய்வாளர்களிடம் கருத்துக்களைக் கேட்டு, அவர்களின் ஆய்வறிக்கையை ஆய்வு செய்து, திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் அரசின் நிதிநிலை எவ்வாறு செல்லும் என்பதற்கான முன்னோட்ட ஆய்வுகள் நடத்திதான் எங்களுடைய தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளோம்.

இந்த திட்டத்தை முதல் கட்டமாக பல்வேறு கிராமங்களில் செயல்படுத்தி முடிவுகளை அறிவோம். உண்மையான பயனாளிகளை நாடுமுழுவதும் கண்டறிந்து பின்னர் நாடு முழுவதும் அமல்படுத்துவோம்.

இந்த சோதனை திட்டம் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்தான் செயல்படுத்தப்படுமா என்பதை திட்டத்தை செயல்படுத்தும் வல்லுநர்கள் முடிவு செய்வார்கள். கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 14 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீண்டுள்ளார்கள். எங்கள் நோக்கம் நாட்டில் ஏழ்மையை, வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதுதான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here