காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னைக்கு வந்தார். அவர் சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்குச் சென்று, அங்கிருக்கும் மாணவிகளுடன் உரையாற்றினார். இதையடுத்து அவர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். பிரதமர் மோடி குறித்து அவர் பேச ஆரம்பிக்கையில் இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் முதலிலேயே இந்த விஷயத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். பிரதமர் நரேந்திர மோடிக்கு, என்னைப் போல் செய்தியாளர்களைச் சந்திக்கும் தைரியம் இருக்கிறதா. கல்லூரி மாணவிகளை சந்தித்து, கேள்விகளுக்கு பதில் சொல்லும் துணிச்சல் இருக்கிறதா. அதுதான் நரேந்திர மோடிஜி என்றார்.

பாஜக ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்துள்ளது என்றார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

நாட்டில் பயங்கரவாதத்தைவிட வேலையின்மையை மக்கள் பெரிய பிரச்னையாக கருதுகின்றனர். பாஜக ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்துள்ளது என்று கூறிய ராகுல், நாடு முழுவதும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

புல்வாமா தற்கொலைப்படை தாக்குதல் நடக்காமல் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்றும் ராணுவ வீரர்களை காக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது எனவும் கேள்வி எழுப்பிய ராகுல், தன்னாட்சி அமைப்புகளின் உரிமையை பறிக்கும் வகையில் பாஜக அரசு செயல்படுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

அப்போது, தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகள் நாடு முழுவதும் ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். மத்திய அரசு அதனை கண்டுகொள்ளவும் இல்லை, அதற்கு தீர்வு காணவும் இல்லை.

விவசாயிகளும் விவசாயமும் இல்லாத நாடு வலிமையானதாக இருக்காது என்று தெரிவித்த ராகுல், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார்.

மேலும், அதிக வேலைவாய்ப்பை தரக்கூடிய சிறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டியால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சியில் வேலையின்மை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். சிறு, நடுத்தர தொழில்துறையை முன்னேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க திட்டமிட்டுள்ளோம். அது தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இந்த தேர்தலில் முக்கிய பிரச்சனையே இளைஞர்கள் வேலையின்மையை தவிர்ப்பதுதான் என ராகுல் காந்தி கூறினார்.

ரஃபேல் விமான ஒப்பந்தத்தின்படி, முதல் கட்டமாக சில விமானங்கள் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வரும். அப்படி வரும் பட்சத்தில், உங்கள் தலைமையிலான ஆட்சி அமைந்தால் என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்விக்கு பதிளளித்து பேசிய ராகுல் காந்தி

ரஃபேல் ஒப்பந்தத்தில் விமானங்கள் இந்தியாவுக்கு வருமானால், அது குறித்து என்ன முடிவெடுக்கப்படும் என்பது இப்போது சொல்ல முடியாது. ரஃபேல் ஒப்பந்தம் குறித்து முழுமையான ஆவணங்கள் எங்களை கைகளுக்குக் கிடைக்க வேண்டும். அதை நாங்கள் பரிசீலித்துதான் ஒரு முடிவுக்கு வர முடியும். இந்த நேரத்தில் எந்த பதிலும் சொல்ல முடியாது.

ஆனால், என்னால் இன்னொரு விஷயம் பற்றி உறுதியாக சொல்ல முடியும். ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து நாங்கள் விசாரணை நடத்துவோம். அந்த விசாரணையில் அனில் அம்பானியும், நரேந்திர மோடியும் குற்றம் செய்தார்கள் என்பது நிரூபணமாகும் என்றார்,

ஹைட்ரோ கார்பன் முதல் ஸ்டெர்லைட் வரை தமிழகத்துப் பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு தமிழக விவகாரங்கள் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் பேசினால்தான் சரியாக இருக்கும். ஆனால், நான் இதற்கு பரந்துப்பட்ட பதிலை சொல்ல விரும்புகிறேன். தமிழகத்தைத் தற்போது பிரதமர் மோடி, டெல்லியிலிருந்து ரிமோட் மூலம் ஆட்சி செய்து வருகிறார். இது தமிழக மக்களுக்கு அவர் செய்யும் துரோகம். தமிழக மக்கள், தங்களை ஆட்சி செய்து கொள்ள வேண்டும். அதற்கான முழு தகுதியும் அவர்களுக்கு இருக்கிறது. வரலாற்றில் முதன்முறையாக தமிழக மக்கள், பாஜக ஆட்சியில் கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றனர் என்றார்.

எழுவர் விடுதலை குறித்து என்ன முடிவெடுக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு எழுவர் விடுதலை குறித்து சட்ட ரீதியாக என்ன சாத்தியம் என்பதைப் பார்க்க வேண்டும். நீதிமன்றம் எப்படி வழிகாட்டியுள்ளதோ, அதன்படிதான் நாங்கள் முடிவெடுப்போம். நாங்கள் கருணையுடவர்கள். மன்னிக்கும் மனோபாவம் கொண்டவர்கள். எனது தந்தை ராஜீவ் காந்தி கொலை என்பது எனது தனிப்பட்ட பிரச்சினையா? ராஜீவ் காந்தி கொலை வழக்கு சட்டப் பிரச்னை தொடர்பானது. நீதிமன்றம்தான், ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும். சிறையில் இருக்கும் 7 பேர் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை என்றும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல்காந்தி கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கல்வி மீண்டும் பொதுப் பட்டியலுக்குக் கொண்டுவரப்படுமா? என்று கேட்ட போது

கல்வி குறித்து தற்போது பல்வேறு சர்ச்சைகள் இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சொல்வதுதான் இந்திய கல்விப் பாடங்களில் திணிக்கப்படுகிறது. அது மாற்றப்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். கல்விக்கு எங்கள் தலைமையிலான ஆட்சி அதிக நிதி ஒதுக்கும். மாநிலங்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எந்த அரசு அமைப்பும் ஒரு இடத்தில் அடைபடுவதை நாங்கள் விரும்பமாட்டோம்

நீட் தேர்வு குறித்து என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பியபோது நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன. அது குறித்து எங்களால் பேசி ஒரு சுமூக முடிவை கொண்டு வர முடியும். பள்ளிக் கல்வி மாநிலங்களிடமும், உயர்கல்வியில் சில அதிகாரங்கள் மத்திய அரசிடமும் இருக்க வேண்டும் என்றார்.

தே.ஜ.கூ கூட்டணியில் பிரதமர் மோடிதான், மீண்டும் பிரதமர் வேட்பாளர் என்று தெரிவித்துள்ளார்கள். உங்கள் கூட்டணி சார்பில் அப்படி யாரும் அறிவிக்கப்படவில்லையே என்று கேட்டபோது
ஆளுங்கட்சிக் கூட்டணிக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். பாஜக தலைமையிலான ஆட்சியை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்புவதுதான் எதிர்கட்சிகளான எங்களின் முதல் குறிக்கோள். அதைச் செய்வதற்கு பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் என்பது அவசியமில்லை. அப்படித் திணிப்பதும் சரி கிடையாது என்றார்.

பெண்களுக்கு இந்தத் தேர்தலில் காங்கிரஸ், இட ஒதுக்கீட்டை அமல் செய்யுமா என்ற கேள்விக்கு
லோக்சபா மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடங்களை காங்கிரஸ் ஒதுக்கும். பெண்களுக்கு அரசு வேலைகளில் 33 சதவிகித இடங்களை உறுதி செய்யும் சட்டத்தையும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நடைமுறை படுத்துவோம் என்றார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு உங்கள் கோஷம் என்ன என்று கேட்ட போது வேலைவாய்ப்பு, விவசாயிகள், ஒற்றுமையான முன்னேற்றமுள்ள இந்தியாதான் நாடாளுமன்றத்துக்கு எங்களின் கோஷமாக இருக்கும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here