ரஹ்மான் 25: அவர் ஏன் கொண்டாடப்பட வேண்டியவர்?

மறைக்கப்பட்ட திறமைகளின் முகமாக உயர்ந்த இசைப்புயல்

0
2349
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் திரைப் பயணம் கால் நூற்றாண்டை நிறைவு செய்துள்ளது.

1980களின் இறுதியில் சென்னை டி. நகர் ஹபிபுல்லா சாலையில் தான் 20 வருடங்கள் வசித்த வீட்டை விற்றுவிட்டு கோடம்பாக்கம் சுப்பராயன் நகரிலுள்ள வீட்டுக்கு ரஹ்மான் குடியேறிய நேரம். கையில் உள்ள பணத்தையெல்லாம் போட்டு புது வீடு வாங்கி அதற்குள் குட்டியாக ஒரு ஸ்டியோவும் கட்டிவிட்டார். “காலியாக இருக்கிற ஸ்டுடியோவுக்குள் உட்கார்ந்து யோசிக்கிறேன். இசைக் கருவிகள் எல்லாம் வாங்கிப் போடணும்.. பணத்துக்கு என்ன செய்வது? யாரைக் கேட்பது? ஒரு நாள் ஸ்டியோவுக்குள் என் அம்மா வந்தார். நான் யோசனையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். அவர் மனதையும் கஷ்டப்படுத்தக்கூடாது. என் கஷ்டத்தையும் சொல்லணும். தயங்கித் தயங்கிச் சொன்னேன். அவர் துளிகூட யோசிக்கவில்லை. ”உன் தங்கைங்க கல்யாணத்துக்காக சேர்த்து வைச்ச நகைகள் கொஞ்சம் இருக்கு. பார்த்துக்கலாம்” என்றார். அடுத்த நாளே பணத்தைத் தந்து, ‘வேணுங்கறத வாங்கிப் போட்டு வேலைய ஆரம்பி’ என்றார். என் மனசு ரொம்ப பாரமானது. அந்தப் பணத்துல வாங்கினது தான் டிராக் மிக்ஸர், ரிக்கார்டர். என் வீட்டுல இப்பவும் அது இருக்கு..” என்று தன்னைப் பற்றிய ‘A.R.Rahman-The spirit of Music’ புத்தகத்தில் அவாரிடம் உரையாடல் நடத்திய எழுத்தாளர் நஸ்ரின் முன்னி கபீரிடம் கூறியிருப்பார் ரஹ்மான். அப்போது அவருக்கு வயது 20. அந்தச் சிறிய ஸ்டுடியோ வாசலில் ஒல்லியானவர்கள் மட்டும்தான் சுலபமாக நுழைய முடியுமாம். ‘நான் பக்கவாட்டில்தான் நுழைந்து போவேன்’ என்று எஸ்.பி.பிகூட ஒரு முறை ஜாலியாக சொல்லியிருக்கிறார்.

இதையும் பாருங்கள்: தமிழ் வசந்தம்

இதையும் பாருங்கள்: நெடுவாசல்

புது வெள்ளை மழை

அந்தத் துளியூண்டு அறையிலிருந்துதான் ஒரு புது சவுண்ட் பிறக்கப் போகிறது. அது இந்தியாவையே கலக்கப் போகிறது. பிற்காலத்தில் ஆஸ்கரையும் அள்ளிவரப் போகிறது என்பதை அப்போது யார் அறிவார்?

“புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது, இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது”என்று அரவிந்த் சாமியும், மதுபாலாவும் ‘ரோஜா’வில் ஏகாந்தமாக காஷ்மீர் மலைப் பிரதேசத்தில் காதலில் மெய் மறந்த அந்தக் காட்சியை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியுமா? அந்த அற்புதமான ஒலி இந்திய சினிமா அதுவரை கேட்டிராதது. ‘அட யாரது..’ என்று இளைய தலைமுறையை தாளம் போட வைத்தது! 1970களில் இசைஞானி இளையராஜா எப்படி இசையில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கினாரோ, அதே போல் 1992-ஆம் ஆண்டு மற்றொரு இசைப் புரட்சியை ரஹ்மான் தொடங்கினார். அதாவது அவர் ஒரு டிரண்ட் செட்டர். அதன் பிறகு கடந்த 25 ஆண்டுகளாக, கோலிவுட் மட்டுமல்ல, பாலிவுட்டும் இந்தப் புத்தம் புதிய பாதையிலேயே பயணிக்கிறது என்பது ரஹ்மானின் பெருமையைச் சொல்லும். அது ஏ.ஆர். ரஹ்மான் என்ற மனிதனின் அசாத்தியமான சாதனை. இவரது வெற்றி வாகையை நான் இன்னொரு கோணத்திலிருந்தும் பார்க்கிறேன். அப்போதுதான் நம் சினிமாவில் அவர் செய்தது சாதாரணமானது அல்ல என்பது உங்களுக்குப் புரியும்.

இதையும் பாருங்கள்: என்.டி.ஆர்

இதையும் படியுங்கள்: வந்து சேராத பணமும் நடக்காத தேர்தலும்

அன்றும் இன்றும்

Golden Globe விருது, BAFTA விருது, கிராமி விருது, என்று அவரது சர்வதேச விருதுகளை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம். அப்புறம் அமெரிக்காவிலுள்ள பிரபல பெர்க்கிலி இசை கல்லூரியில் டாக்டர் பட்டம், புகழ்பெற்ற அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர், அண்ணா பல்கலைக்கழக டாக்டர், Fellow of the Trinity College of Music என்று ரஹ்மான் பெற்ற கௌரவங்களைப் பட்டியலிடலாம். இதற்கெல்லாம் மகுடம் சூட்டினாற்போல, ஒன்றல்ல.. இரண்டு ஆஸ்கரை அவர் தட்டி வந்தது நாடறியும். என்னைப் பொறுத்தவரை இந்தச் சர்வதேச விருதுகளை விட, மரியாதைகளைவிட இந்த எளிமையான மனிதரிடம் வியக்க வைக்கும் விஷயம் ஒன்று உண்டு! அதற்கு நீங்கள் ஒரு ‘ஃப்ளாஷ் பேக்’ போக வேண்டும்.

இதையும் படியுங்கள்: வரலட்சுமி சரத் குமார் சொன்னது என்ன?: வீரமான பெண் பதிவின் முழு விவரம்

இதையும் படியுங்கள்: ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்திக்காதது ஏன்?

ரஹ்மான் 1992 ஆம் ஆண்டு ‘சின்ன சின்ன ஆசை’ என்று ‘ரோஜா’ மூலம் கோடம்பாக்கத்தில் நுழைவதற்கு முன்பு; வட இந்தியாவில் மங்கேஷ்கர் சகோதாரிகள் லதா, ஆஷா, உஷா திரை இசையில் தனிக்காட்டு ராஜ்யம் நடத்திக் கொண்டிருந்த நேரம். அதே போல் பாடகர்கள் என்றால் கிஷோர் குமார், மன்னா டே, முகமது ரஃபி, முகேஷ் போன்றவர்கள்தான். நம் இசையமைப்பாளர்களோ, பாடகர்களோ, பாடகிகளோ அங்கே தலைக்காட்டிவிட முடியாது. வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, ரேகா போன்ற நமது புகழ் பெற்ற கவர்ச்சி நாயகிகளுக்கு மட்டும் இது விதிவிலக்கு. அழகிற்கு வடக்கு தெற்கு ஏது! நமது ஜேசுதாஸ், எஸ்.பி.பி போன்றவர்கள் எப்போதாவது ஒரு பாட்டு பாடுவார்கள். அதில் கூட தென்னிந்தியத் தொடர்பு இருக்கும்.

இதையும் பாருங்கள்: மதவெறியைப் பரப்பும் பத்திரிகைகள்

தமிழில் ‘சினிமா பைத்தியம்’ என்றொரு படம் வந்தது.. நினைவிருக்கிறதா? அதன் இந்தி அசல் ‘குட்டி’. அதில் ‘போலி ரே பப்பி’ என்றொரு பாடலை வாணி ஜெயராம் பாடினார் (இப்போது வெளிவந்துள்ள மணிரத்தினத்தின் ‘காற்று வெளியிடை’ படத்தில்கூட அந்தப் பாடலை ஹீரோயின் அதிதி ராவ் இரண்டு வரி பாடுகிறார்). மனதை மயக்கும் சோகப் பாடலான ‘போலி ரே பப்பி’ வடக்கே சூப்பர் ஹிட்டாக வாணி ஜெயராமுக்கு எக்கச்சக்க பாராட்டு. பத்திரிக்கைகள் போட்டி போட்டுக் கொண்டு அவரைப் பேட்டி கண்டன. இதன் பிறகு நியாயமாக வாணி ஜெயராம் மும்பை படவுலகில் பெரிய ரவுண்ட் வந்திருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக அடுத்த மாதமே ஓசைப்படாமல் கோடம்பாக்கம் திரும்பினார். காரணம், மும்பையின் ‘பெரிய’ பாடகிகள் ‘வாணி பாடினால், அப்புறம் உங்கள் படங்களில் பாடமாட்டோம்’ என்று பகிரங்கமாக் சொல்லியதாக செய்திகள் வந்தன. ஏன்.. வாணியே ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில் எப்படி வடக்கே நம்மவர்களை உள்ளே விடக் கூடாது என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு உள்ளார்கள் என்பதைக் கண்ணீருடன் கூறினார்.

ஏன் இந்தப் பழைய கதை என்றால், தென்னிந்திய இசைக் கலைஞர்கள் யாரையும் உள்ளே விடக்கூடாது என்று காலம் காலமாக பூட்டி வைத்திருந்த இரும்புக் கோட்டையை உடைத்துக் கொண்டு உள்ளே நுழையவும், அதில் வெற்றிக் கொடி நாட்டவும் மிகப் பெரிய தன்னம்பிக்கையும், தெய்வ பலமும் வேண்டும். ரஹ்மானுக்கு இரண்டும் இருந்தது. இன்று உதித் நாராயணனும், சுக்வீந்தர் சிங்கும், சுப்ராயன் நகரில் காத்துக் கிடக்கிறார்கள். நமது மனோவும், ஸ்ரீனிவாஸூம், சித்ராவும் இந்தியில் பாடுகிறார்கள். யாருக்கும் எந்த முட்டுக்கட்டையும் இல்லை. உங்களுக்குத் திறமையும், ஸ்ருதி சுத்தமான குரலும் இருந்தால் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பாடலாம். மொழி தடையில்லை. ஆக, ஆஸ்கரை விட கோல்டன் குளோபை விட, பெர்க்கிலி கல்லூரி டாக்டர் பட்டத்தைவிட ரஹ்மானின் இந்தச் சாதனைதான் என்னைப் பொறுத்தவரை மிகவும் பெரிதாக பிரமிக்க வைக்கிறது. சொல்லப் போனால் இது ஒரு அமைதியான இசைப் புரட்சி!

தொழில்நுட்பம் மட்டுமா?

‘வெறும் தொழில் நுட்பத்தை வைத்துக் கொண்டு அவர் ஜாலம் செய்கிறார்’ என்ற ஒரு விமர்சனமும் அவரைப் பற்றி உண்டு. உண்மையில் ஆழ்ந்த சங்கீத ஞானமும், தொழில்நுட்பமும் இணைந்த ஒரு அதிசயம் என்பதே அவரைப் பற்றிய ஒரு சரியான பார்வை. டிராயர் போட்ட வயதிலேயே அவருக்குச் சவுண்ட் மீது அலாதியான ஈர்ப்பு இருந்ததை அவரே ஒப்புக் கொள்கிறார். “டெக்னாலஜி என்பது ஒரு மிருகம். அதை சரியான பாதையில் நாம்தான் அழைத்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அது வழிக்கு நம்ம இழுத்துக் கொண்டு போய்விடும்” என்று அண்மையில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். தவிர, நம் சினிமாவில் என்ன வெற்றிடம் இருக்கிறது என்பதை உணர்ந்து அதை நோக்கி அழகாக காய்களை நகர்த்தியதுதான் அவரது வெற்றி. குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டக் கூடாது என்பதில் எப்போதும் தெளிவாக இருந்தவர். திரை இசை ஜாம்பவான்கள் எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன், இளையராஜா போன்றவர்கள் ஆளுக்கொரு பாதையில் சென்று பெரிய புகழை அடைந்தபோது ரஹ்மான் அடுத்த கட்டத்திற்கு ரசிகர்களை நகர்த்தினார். தமிழ் சினிமாவில் குறைந்த அளவே இருந்த ஹிந்துஸ்தானி இசை மற்றும் அரபியர்களுக்கு பிடித்தமான சூஃபி சங்கீதம் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தியது அவரது சாமர்த்தியம். இசைத் தாகம் கூட! அதே போல் ஆப்பிரிக்கர்களின் கோரஸ், தென் அமெரிக்கர்களின் இசை போன்ற இங்கே அவ்வளவு காணமுடியாத இசை வடிவங்களையும் அறிமுகப்படுத்தியது அவரது துணிச்சலைக் காட்டியது. ரோஜாவில் வரும் ‘ருக்குமணி ருக்குமணி’ யில் ஆரம்பத்தில் வரும் கோரஸ் இசை, ஆப்பிரிக்கர்களின் கோரஸைக் கேட்டு, அதை நம்மவர்களுக்கு ஏற்றமாதிரி கொண்டு வந்ததை அவரே கூறியிருக்கிறார்!

புதுப்புது அர்த்தங்கள்:

அடுத்தது இங்கே பல்லவி, முதல் சரணம், இரண்டாம் சரணம் என்று இருந்த அமைப்பை உடைத்தார். அவரது பாடல்களை உற்றுக் கவனித்தால் நான் சொல்வது புரியும். ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு மாதிரி அமைப்பதும் அவரது சிறப்பம்சம். சிலவற்றில் முழுக்க முழுக்க ரிதமிற்கு முக்கியத்துவம் தந்திருப்பார். நமது பாரம்பரிய நாட்டுப்புற இசையில்கூட அழகான நகாசு வேலைகளை செய்து புருவங்களை உயர வைப்பார். உதாரணமாக, பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் ‘மதுரைக்குப் போகாதடி’ என்று ஒரு பாட்டு வரும். மாமூல் ட்யூன்தான்.. ஆனால் அதில் தன் கைவரிசையை அட்டகாசமாக காட்டியிருப்பார். அவ்வளவு ஏன், அண்மையில் வெளிவந்த ‘காற்று வெளியிடை’ படத்தில் ‘சரட்டு வண்டியிலே’ என்றொரு பாடல்.. அதுவும் நாட்டுப்புற ஸ்டைல்தான். ஆனால் அதற்கு டெக்னாலஜி முலாம் பூசி புதுவிதமாக தந்திருப்பார். குறிப்பாக ‘அதுதாண்டி தமிழ் நாட்டுப் பாணி’ என்று திடீரென மேல் ஸ்தாயியில் பெண்குரல் இழுப்பது இசைப்புயலின் பிரமாதமான கற்பனை!

ஓ.கே. கண்மணியில் ‘நானே வருகிறேன்’ என்ற பாடலில் தர்பாரி கானடா ராகத்தை அவர் தந்த விதம் நம்மைச் சிலிர்க்க வைக்கும். ஒரு ட்யூன் அமைந்துவிட்டால் அத்தோடு விடமாட்டார். அதைப் புதுவிதமாக எப்படி மக்களுக்குத் தருவது என்பதில் அவருக்கு நிகர் அவரே.. இயக்குனர் ஷங்கருக்கும் அவருக்கும் அற்புதமான ‘கெமிஸ்ட்ரி’ உண்டு என்பதை சினிமா உலகம் அறியும். அவர்கள் கூட்டணியில் வந்த பாடல்களே அதற்கு சாட்சி. முகாபுலா, உசிலம்பட்டி, என் வீட்டுத் தோட்டத்தில், சஹானா சாரல் தேடுதே, தீ தீ.. ஜகஜ்ஜோதி.. என்று அத்தனையும் அக்மார்க் ரஹ்மான் பிராண்ட்! அப்புறம் பாரதிராஜாவிற்காக அவர் அமைத்த ‘தென் மேற்குப் பருவக் காற்று’ இன்றுவரை நம் காதுகளை வருடுகிறதே! இன்னும் எத்தனை எத்தனை அருமைகள் இந்த 25 வருடங்களில்!

இதையும் படியுங்கள்: ஜிஷாவும் அம்பேத்கரும்

குரல் தேடல்

அடுத்தது ரஹ்மானுக்கு குரல் ஆராய்ச்சியில் மிகப் பெரிய ஈடுபாடு உண்டு. சாஷா, சித்து ஸ்ரீராம், ஹரிசரண், சத்திய பிரகாஷ் என்று அவரது அறிமுகங்கள் எத்தனையோ பேர் இன்று புதிய பாடகர்களாக வலம் வருகிறர்கள்! தவறுகளை சரிப்படுத்த தொழில்நுட்ப வசதி இருக்கும்போது மாறுபட்ட குரல்களை அறிமுகப்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது என்பது அவரது வாதம். திரும்பத் திரும்ப டி.எம்.எஸ், சுசீலா, ஜானகி, எஸ்.பி.பி, ஜேசுதாஸ் போன்ற பழம்பெரும் பாடகர்களின் பாடல்களைக் கேட்டு கேட்டு அந்தப் போதையிலிருந்து மீள முடியாதவர்களுக்கு ரஹ்மானின் இந்தக் குரல் ஆராய்ச்சியைப் புரிந்துகொள்ள முடியாதுதான். அவரோடு இணைந்து பயணிக்கவும் அவரை அறிந்துகொள்ளவும் நமக்கும் ஒரு ஞானம் வேண்டும்.

ரங்கீலா

ரஹ்மானிடம் நான் வியந்த மற்றொரு விஷயம், கோடம்பாக்கத்திலிருந்து தன் ஞான சிறகுகளை விரித்த வேகம். ‘ரோஜா’ வுக்கு இசையமைத்த மூன்றே வருடங்களில் – அதாவது 1995இல் அவருக்கு இந்தியில் ‘ரங்கீலா’ வுக்கு வாய்ப்பு வர, சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். மும்பை படவுலகில் முதல் படமே ராம் கோபால் வர்மாவுடையது! அதற்கு முந்தைய அவரது தமிழ்ப் படங்கள் எல்லாம் இந்தியில் ‘டப்’ செய்யப்பட்டவை. தமிழில் இப்போதுதான் காலூன்றி இருக்கிறோம், அகலக்கால் வைத்து உள்ளதையும் விட்டுவிடக்கூடாது என்று பாதுகாப்பாக அவர் சிந்திக்கவே இல்லை. அதாவது ‘தேடல்’ என்பது இக்கலைஞனுக்கு எப்போதுமே இருந்துள்ளது. ரங்கீலாவில் யாயிரே.. யாயிரே, தனகா தனகா யாஹன் பிஜீனா உள்பட எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்டாயின. சொல்லப் போனால் பாட்டுக்காகவே சக்கைபோடு போட்ட படம் அது. மும்பை படவுலகிலுள்ள அத்தனை பெரிய தலைகளும் மூர்த்தி சிறிய இந்த இளைஞனை அண்ணாந்து பார்த்தன. இவன் கீர்த்தி பெரியது.. அவ்வளவு சுலபமாக இந்த இளைஞனை ஓரங்கட்டிவிட முடியாது என்பதை உணர்ந்து கொண்டன. அப்புறம் லஹான், தாள், ராக்ஸ்டார், புகார், ரங்குதே பஸந்த், குரு, மீனாட்சி என்று ரஹ்மான் காட்டில் ஆலங்கட்டி மழைதான்- நேற்றைய ‘ஹைவே’ வரை!

தொடரும் ஆச்சர்யம்

இந்தியில் தன் இடத்தை, தக்கவைத்துக் கொண்ட அடுத்த நிமிடமே ‘பாம்பே ட்ரீம்ஸ்’ ‘எலிஸபெத்’ என்று ஹாலிவுட் பக்கம் பறந்தது, ரஹ்மானின் அடுத்த கட்ட ஆச்சர்யம். அதன் தொடர்ச்சிதான் அவர் இரண்டு ஆஸ்கர்களைப் பெற்ற ‘ஸ்லம் டாக் மில்லியனர்’. அவரது படைப்புகள் இந்த ஆண்டு கூட ஆஸ்கருக்குப் போனது. அண்மையில் அவரைச் சந்தித்த போது, சியாட்டில் சிம்போனிக்காக ‘ஒரு பீஸ்’ எழுதிட்டிருக்கேன் என்றார். எதையோ தேடிக் கொண்டே இருக்கிறார் இந்த மகா கலைஞர்! அவருக்கு வானமே எல்லை.

இன்ஷா அல்லாஹ்

தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த இறை நம்பிக்கை உடையவர். எல்லாமே அவருக்கு ‘இன்ஷா அல்லாஹ்’தான். அதாவது அவனிடம் பரிபூரண சரணாகதி! அப்புறம் அம்மாவிடம் அளவு கடந்த பாசம். நீங்கள் அவரை எவ்வளவுதான் சீண்டுவது போல் பேசினாலும், கேள்வி கேட்டாலும் சாந்தமாக பதிலளித்துவிட்டு புன்னகைப்பார். ‘ஐயோ.. இவரிடம் இப்படி கேட்டுவிட்டோமே என்று நீங்கள்தான் பிறகு வருத்தப்பட வேண்டும். இளம் வயதிலேயே வாழ்வின் அத்தனை சோகங்களையும், அத்தனை செல்வத்தையும் வெற்றிகளையும் பார்த்தவர். அதனாலேயே வாழ்வைத் தத்துவார்த்தமாக பார்க்கிறார். அனாவசியமாக குதிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அது அல்லாஹ் அவருக்கு காட்டிய பாதை. நிஜமான ஆன்மிகவாதிகள் அப்படித்தான் இருப்பார்கள்.

அதனால்தான் முதலிலேயே சொன்னேன்.. ‘ரஹ்மானைப் புரிந்துகொள்ள நமக்கும் ஒரு ஞானம் வேண்டும்!’

இதையும் படியுங்கள்: டிசிடபிள்யூவின் வேதிக் கழிவுகளால் அழியும் மக்கள்

இதையும் படியுங்கள்: எண்ணூர் கழிமுகத்தைப் பாதுகாக்காமல் சென்னையைப் பாதுகாக்க முடியாது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்