ரஹ்மான் முதல் ரஜினிவரை இந்தி திணிப்பை எதிர்ப்பது ஏன்? இதில் அரசியல் உள்ளதா?

0
210

Courtesy: bbc

தமிழ் சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களில் சிலர், இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் இந்த விவகாரத்தில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா “அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும்,” என்று கூறியிருந்தார்.

அமித் ஷாவின் பேச்சு வெளிவந்த மறுநாளே அது குறித்து திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானிடம் கேள்வி எழுப்ப, ‘தமிழ் தான் இணைப்பு மொழி’ என அவர் கருத்து வெளியிட்டார். இதையடுத்து அவரது கருத்தை தமிழ்நாட்டில் சமூக ஊடக பயனர்கள் பலரும் வரவேற்று இடுகைகளை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் புதன்கிழமை விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” படத்தில் விஜய் “உனக்கு வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு வா. எல்லா தடவையும் தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ண முடியாது,” என்று பேசிய வசனமும் வைரலாகி வருகிறது.

பெரும்பாலான தமிழ் நடிகர்களிடையே ‘இந்தி’ இந்தியாவின் ஆட்சி மொழி அல்ல, தென்னிந்தியாவில் ‘இந்தி’ அல்லாத மொழிகளை மக்கள் பேசுகிறார்கள் என்பதை உணர்த்த, பல்வேறு தளங்களில் இந்தி திணிப்பை எதிர்க்கும் கருத்துக்களை சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

இதில், தமிழ் சினிமா உலகைச் சேர்ந்த பிரபலங்கள், பல்வேறு காலகட்டங்களில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

ஏ.ஆர்.ரஹ்மானும் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பும்

இந்தி திணிப்பிற்கு எதிராக ஏஆர். ரஹ்மான் குரல் கொடுப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே அவர் பல முறை இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் ‘தமிழ் பற்றாளர்’ என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆஸ்கார் விருது வாங்கிய பிறகு அதே மேடையிலேயே “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று அவர் தமிழில் பேசிய காட்சி, அவரது தாய்மொழிப் பற்று மற்றும் அதன் பெருமையை உலக அரங்கில் பதிவு செய்த செயலுக்கு மிகுதியான வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

2019ஆம் ஆண்டு வெளியான ’99’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானும் படத்தின் கதாநாயகனும் மேடையில் இருக்கும்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் இந்தியில் பேசினார். அப்போது, “இந்தி” யா என கேட்டுவிட்டு, மேடையை விட்டு இறங்கினார் ரஹ்மான்.

வெகு சமீபமாக சில தினங்களுக்கு முன் டிவிட்டரில், ‘தமிழுக்கும் அமுதென்றுபேர்!’ என்ற பாரதிதாசனின் கவிதையில் வரும் ‘தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!’ என்ற வரிகளை குறிப்பிட்டு இசையமைப்பாளர் ரஹ்மான் பதிவிட்டிருந்தார்.

டாப்ஸி பண்ணு

இந்தி திணிப்பு அமித் ஷா
அமித் ஷா, இந்திய உள்துறை அமைச்சர்

டாப்ஸி பண்ணு தமிழில் ‘ஆடுகளம்’ படத்தில் அறிமுகமாகி காஞ்சனா 2, அனபெல்லா சேதுபதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட திருவிழாவில் செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்தார்.

அது குறித்து விளக்கம் அளித்த அவர், ”இந்தியா முழுவதிலும் இருந்து பலர் இங்கே வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இந்தி மொழி தெரியாது. ஆங்கிலத்தில் பேசினால் தான் அனைவருக்கும் புரியும்,” என்று கூறினார்.

இதையடுத்து அவரிடம் ‘நீங்கள் இந்தி நடிகை தானே, இந்தியில் பேச மறுக்கிறீர்களே’ என ஒரு செய்தியாளர் கேட்டதற்கு, ‘நான் இந்தி நடிகை அல்ல, நான் இந்திய நடிகை. நான் தென்னிந்திய தமிழ், தெலுங்கு படங்களிலும் நடிக்கிறேன். அந்த ரசிகர்களுக்கு ஆங்கிலத்தில் பேசினால் தான் புரியும் எனக் கூறி, கடைசி வரை இந்தியில் பேச மறுத்தார்.

ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி
ஆர்.ஜே. பாலாஜி

ரேடியோ ஜாக்கியாக இருந்து பின்பு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே.பாலாஜி.

இவரும் இந்தி திணிப்பை எதிர்த்து பல இடங்களில் கருத்துக்களைப் பதிவு செய்து வருபவர். இவர் கதாநாயகனாக நடித்த அரசியலை கதைக்களமாக கொண்ட ‘எல்.கே.ஜி’ திரைப்படத்தில் இவர் ஒரு அரசியல்வாதியாக நடித்து இருப்பார். அந்த படத்தில் இவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நேரலை விவாதத்தில் கலந்து கொள்வது போல சித்திரிக்கப்பட்டிருக்கும்.

அதில் தொகுப்பாளர் இவரிடம் இந்தியில் கேள்வி கேட்க, “நான் தென்னிந்தியன். தென்னிந்தியாவில் தமிழ்,தெலுங்கு , மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளை பேசுவோம். இதையெல்லாம் தமிழ்ல சொன்னா உனக்குப் புரியுமா?” என தமிழில் கேட்பது நகைச்சுவையாக இருந்தாலும் அதில் அவரின் இந்தி திணிப்பு எதிர்வினையை பிரதிபலிப்பதாக பார்க்கப்பட்டது.

யுவன்ஷங்கர் ராஜா

யுவன்சங்கர் ராஜா
யுவன் ஷங்கர்

இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த பேட்டி அளிக்கையில், “நான் தமிழ் பேசும் இந்தியன். ஆனால், சென்னை விமான நிலையத்திலேயே ஊழியர்கள் அனைவரும் இந்தியில் பேசுவது வருத்தமாக உள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள விமான நிலையங்களில் நாம் தமிழில் பேசினால் அங்கு உள்ளவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ் ட்விட்டர்
பிரகாஷ் ராஜ்

“கில்லி” போன்ற பல வெற்றிப் படங்களில் வில்லனாகவும், சிறந்த துணை நடிகராகவும் பல படங்களில் நடித்த பிரகாஷ் ராஜ் சமீபமாக ஹிந்தி திணிப்பை எதிர்த்து வருபவர்.

“ஏன் இந்தியை எங்கள் மீது திணிக்கிறீர்கள்? உங்கள் அஜெண்டா தான் என்ன? எனக்கு தேவை ஏற்பட்டால் நான் எந்த மொழியை வேண்டுமானாலும் கற்றுக் கொள்வேன். அது என் உரிமை. நான் என்ன உண்ண வேண்டும், என்ன உடுத்த வேண்டும், என்ன மொழி பேச வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?” என்ற அவர் கேள்வி எழுப்பி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் ஹிந்தி திணிப்பை எதிர்த்து வெளியிட்ட காணொளியில் “பல ராஜாக்கள் தங்கள் ராஜ்ஜியங்களை விட்டுக் கொடுத்து உருவானது தான் இந்தியா. ஆனால் விட்டுக்கொடுக்க முடியாது என பல மாநிலங்களின் தலைவர்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும், கலாசாரமும்தான்.

1950இல் இந்தியா குடியரசு ஆனபோது அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை திடீரென்று எந்த ஷாவோ சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றி விட முயற்சிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம். எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால் அது அதைவிடப் பன்மடங்கு பெரியதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவிற்கோ தமிழ் நாட்டிற்கோ தேவையற்றது. இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழியில் பாடுவது இல்லை, வங்காளிகளைத் தவிர. இருப்பினும் அதை சந்தோஷமாக நாங்கள் பாடிக்கொண்டுதான் இருக்கிறோம், இருப்போம். காரணம் அதை எழுதிய கவிஞர் எல்லா மொழிகளுக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார். இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து. அதைக் கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டி விடும். தயவு செய்து அதை செய்ய நினைக்காதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும்,” என கூறி இருந்தார்.

ரஜினி காந்த்

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் 2019இல் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இந்தி திணிப்பு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ரஜினி, “இந்தியா அல்ல எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டிற்கென பொது மொழி இருந்தால் அது அந்த நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். ஆனால் துரதிருஷ்டவசமாக நமது நாட்டில் ஒரு பொது மொழியைக் கொண்டு வர முடியாது. எந்த மொழியையும் திணிக்க முடியாது. குறிப்பாக இந்தியை திணிக்க முடியாது. அப்படி திணித்தால் இங்கு மட்டும் அல்ல வட இந்தியாவில் கூட பல மாநிலங்களில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்,” என பதில் அளித்திருந்தார்.

காரணம் என்ன?

தென்னிந்திய திரையுலகின் பெரும்பாலான பிரபலங்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு போன்ற சில சமூதாய பிரச்னைகள் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது பற்றி பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் ஆ.சிவசுப்ரமணியனிடம், பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு பேசினோம். “இந்த பழக்கம் இப்போது தோன்றியது அல்ல. விடுதலை இயக்க காலத்தில் இருந்த நாடக குழுக்கள் மூலம் விடுதலை போராட்ட உணர்வை மக்களிடம் தூண்டும் வகையில் நாடகங்கள் அமைந்தபோதே இது தொடங்கி விட்டது. உதாரணமாக தியாகி விசுவநாத தாஸை கூறலாம். அவர் நாடகத்தில் தேசிய இயக்க பிரசாரங்களை செய்துள்ளார். முருகன்-வள்ளி கதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. வள்ளி, குறவர் இனத்தை சேந்த பெண். அவள் காட்டில் தினை விதைத்து அந்த தினையை பறவைகள் உண்பதை தவிர்க்க அங்கு பரணில் இருந்து பறவைகளை விரட்டுவது மரபு.

இந்த கதையில் அவர், “கொக்கு பறக்குதடி பாப்பா வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா, தேம்ஸ் நதி கரையில் இருந்து வந்த கொக்கு” என வசனம் இடம்பெறச் செய்திருப்பார். இதில் வெள்ளைக் கொக்கு என்பது வெள்ளைக்காரர்கள். ‘தேம்ஸ் நதி’ என்பது லண்டனில் ஓடும் ஆறு. இப்படித்தான் மறைமுகமாக அப்போதே விடுதலை வேட்கையை மக்கள் மனதில் நாடகம் மூலம் ஏற்படுத்தினார்கள்.

மேலும் தீண்டாமை ஒழிப்பு போன்ற தேசிய இயக்க ஆதரவு கருத்துக்களை பரப்பினார்கள். திராவிட இயக்கத்தவர்களும் நாடகத்தைப் பயன்படுத்தி பிராமணர் எதிர்ப்பு மற்றும் சமூக சீர்திருத்த கருத்துக்களைப் பரப்பினார்கள். பின்பு திரைப்படம் வந்த பிறகு நாடக நடிகர்கள் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார்கள். அந்த அடையாளத்தை இங்கும் கொண்டு வந்தார்கள். இதற்கு உதாரணமாக எம். ஆர். ராதவைக் கூறலாம்,” என்கிறார் சிவசுப்ரமணியன்.

மேலும் அவர், “இன்றைய காலகட்டத்தில் எல்லா திரைத்துறையினரும் சமூக பிரக்ஞையோடு இருக்கிறார்கள் என்று கூற முடியாது. சிலர் பார்வையாளர்களாக மட்டுமே உள்ளார்கள்.

தற்போது சில புது இளம் இயக்குநர்களில் குறிப்பாக கடந்த காலங்கலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய சமூகத்தின் அடையாளம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுகிறார்கள். அவர்கள் கூட இன்று இந்த பெரு நடிகர்களின் தோள்களில் ஏறி இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

திரைப்படத்திற்கும் அரசியலுக்கும் தமிழ்நாட்டில் தொடர்பு உள்ளது. அதனால் திரைப்படத்தை ஒரு ஏணியாகப் பயன்படுத்திக் கொண்டு சிலர் அரசியலில் உயர்நிலைக்கு போகலாம் என்ற நோக்கத்திலும் இத்தகைய கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here