ரஷ்ய ஆயுதங்களை இந்தியா சார்ந்திருப்பது இனி அதன் பாதுகாப்புக்கு பிரச்னையா?

0
203

Courtesy: bbc

இன்றிலிருந்து சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புறவின் புதிய சகாப்தம் தொடங்கியது. 2000 வது ஆண்டு மார்ச் மாதத்தின் அந்த ஏழு நாட்கள், அந்த சகாப்தத்தின் தொடக்கத்திற்கு சாட்சியாக ஆனது.

அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

“1998ல் இந்தியாவின் இரண்டாவது அணுகுண்டு சோதனைக்குப் பிறகு ஏற்பட்ட பதற்றத்தை அதிபர் கிளிண்டனின் இந்திய பயணம் முடிவுக்குக் கொண்டு வந்தது. இதற்கு முன், 1999ல் அவர் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே கார்கில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் விஷயத்தில் மத்தியஸ்தம் செய்தார். அப்போது இந்தியா மீதான அவரது நாட்டம் தெளிவாகத் தெரிந்தது,” என்று மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவின் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நிபுணர் புரூஸ் ரீடல் குறிப்பிட்டார்.

ஆனால் இவை அனைத்தும் அவ்வளவு எளிதல்ல. அமெரிக்கா மற்றும் ரஷ்யா இருவரையும் நண்பர்களாக வைத்திருப்பது இந்தியாவிற்கு ஒரு கடினமான சவாலாக உள்ளது. ஏனெனில் அதன் வேர்கள் பனிப்போர் காலத்திற்குச் செல்கின்றன. ஒரு நாடு அமெரிக்காவுடன் நிற்கிறதா அல்லது ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளதா என்ற தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த உலக நாடுகளுக்கு மிகுந்த நெருக்கடி இருந்தது. இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலை மிகவும் சிக்கலானது.

அமெரிக்க பாதுகாப்புத் துறையில் இந்தியாவை ஒரு பெரிய கொள்முதலாளராக மாற்றுவதற்கு, 22 ஆண்டுகளுக்கு முன்பு தான் மேற்கொண்ட பயணத்தின் போது அமெரிக்க அதிபர் முயற்சி செய்தார். ஆனால் பல தசாப்தங்களாக ரஷ்யாவை நம்பியிருந்த இந்தியாவுக்கு அது அவ்வளவு எளிதானது அல்ல.

அமெரிக்க அதிபர் டெல்லி, மும்பை, ஜெய்பூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்குச் சென்ற அதே நேரத்தில், இந்திய விமானப்படை அதிகாரிகள் குழு மாஸ்கோவில் இருந்தது. போர் விமானங்களை ஓட்டவும், அந்த விமானங்களில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி பெறவும் அவர்கள் மாஸ்கோ சென்றிருந்தனர்.

இப்படியாக, பாதுகாப்புத் துறையில் மிக நீண்டகாலமாக இந்தியா ரஷ்யாவையே சார்ந்திருப்பதால், இப்போது ரஷ்யாவின் யுக்ரேன் மீதான படையெடுப்பு இந்தியா மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியா ரஷ்யாவின் ஆயுதங்களையே அதிகமாகச் சார்ந்திருக்கிறது

இந்தியா ஆயுதங்களுக்காக எந்தளவுக்கு ரஷ்யாவைச் சார்ந்துள்ளது?

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய ஆயுத விற்பனையாளராக ரஷ்யா உள்ளது.

ரஷ்யாவின் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை, உலகிலேயே மிக அதிகமாக கொள்முதல் செய்வது இந்தியாதான். இந்திய விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவத்தின் ஆயுதங்களில் 85 சதவீதம் ரஷ்ய ஆயுதங்களே. கூடவே பாதுகாப்பு சாதனங்கள் இறக்குமதியின் 60 சதவிகிதம் ரஷ்யாவிலிருந்து செய்யப்படுகின்றன.

இந்த விஷயங்களைக் கவனியுங்கள் – இந்திய விமானப்படை, ரஷ்ய சுகோய் Su-30MKI, MiG-29 மற்றும் MiG-21 போர் விமானங்களைச் சார்ந்துள்ளது, மேலும் Il-76 மற்றும் Antonov An-32 போக்குவரத்து விமானங்கள், Mi-35 மற்றும் Mi -17V5 ஹெலிகாப்டர்களும் உள்ளன .சமீபத்தில் வாங்கப்பட்ட S-400 வான் பாதுகாப்பு அமைப்பும் ரஷ்யாவினுடையதே.

இந்திய ராணுவம் ரஷ்ய T72 மற்றும் T90 போர் பீரங்கிகளை பயன்படுத்துகிறது. கடற்படையின் INS விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல், முன்பு அட்மிரல் கோர்ஷ்கோவ் என்ற பெயரில் இருந்தது.

இந்தியாவின் கடற்படையிடம் IL-38 கடல்சார் கண்காணிப்பு விமானம் மற்றும் Kamov K-31 ஹெலிகாப்டர்கள் உள்ளன. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை குத்தகைக்கு எடுத்துள்ளது. மேலும் இந்தியா தனது சொந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கவும் ரஷ்யா உதவுகிறது.

இந்தியா ரஷ்யாவின் ஆயுதங்களையே அதிகமாகச் சார்ந்திருக்கிறது

இவ்வளவு அதிகமாக ரஷ்ய ஆயுதங்களை நம்பியிருக்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை மீது, யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

கிளிண்டனுக்குப் பிறகு எல்லா அமெரிக்க அதிபர்களுமே இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்க கடுமையாக முயன்றனர். ஆனால் அவர்களின் வெற்றி குறிப்பிடும்படியாக இல்லை.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இந்தியாவுக்கு உதவி செய்வதாக மீண்டும் கூறியுள்ளார்.

யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடர்பாக இந்தியா ரஷ்யாவை கண்டிக்க வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது.

இந்தியா ரஷ்யாவின் ஆயுதங்களையே அதிகமாகச் சார்ந்திருக்கிறது

ரஷ்யா-யுக்ரேன் மோதல் நீண்ட காலம் நீடித்தால், தூதரக மட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க இந்தியா மீது அழுத்தம் கொடுக்கப்படும். கூடவே பாதுகாப்பு மட்டத்திலும் அதன் சிரமங்கள் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியா நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு என்று இரண்டு பெரிய சிரமங்களை எதிர்கொள்கிறது: முதலாவதாக, ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக ஆயுத ஆர்டர்களை இந்தியாவிற்கு வழங்குவது ரஷ்யாவுக்கு கடினமாக இருக்கும். பொருளாதாரத் தடைகள் காரணமாக ரஷ்யாவுடன் டாலரில் வர்த்தகம் செய்வது எப்படி என்பது இந்தியாவுக்கு இருக்கும் இரண்டாவது பிரச்சனை.

இந்தியாவின் T-72 மற்றும் T-90 பீரங்கிகளின் பாகங்கள் யுக்ரேனில் இருந்து வருகின்றன. ஆனால் இப்போது அவற்றின் வரத்து கேள்விக்குரியதாகியுள்ளது.
இந்தியாவின் T-72 மற்றும் T-90 பீரங்கிகளின் பாகங்கள் யுக்ரேனில் இருந்து வருகின்றன. ஆனால் இப்போது அவற்றின் வரத்து கேள்விக்குறியாகியுள்ளது.

இந்திய விமானப்படைக்கு AN விமானம் மிகவும் முக்கியமானது, இதன் உதிரி பாகங்கள் யுக்ரேனில் இருந்து வருகின்றன என்று பாதுகாப்பு பத்திரிகையாளர் அம்ரிதா நாயக் கூறுகிறார்.

இது தவிர, T-72 மற்றும் T-90 பீரங்கிகளின் பாகங்களும் யுக்ரேனில் இருந்து வருகின்றன, ஆனால் இப்போது அவற்றின் சப்ளை கேள்விக்குறியாகியுள்ளது.

“ஆயுத அமைப்புகளுக்கான உதிரிபாகங்கள் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் இந்திய விமானப் படைகளுக்கான பராமரிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கான உதிரிபாகங்கள் கிடைப்பதில் நீண்டகால தாமதம் ஏற்படுவது குறித்து கவலை கொண்டுள்ளதாகவும் அதற்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்க மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் ராணுவ உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்,” என்று அவர் கூறினார்.

ரஷ்யா-சீனா நெருக்கம் கவலை அளிக்கக்கூடியதா? யுக்ரேன் விஷயத்தில் பாரபட்சமற்றதாக இருப்பதன் மூலம் ரஷ்யா, யுக்ரேனுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் இந்தியா மத்தியஸ்தம் செய்ய வாய்ப்புள்ளதா?

ராஜீய மட்டத்தை நாம் கவனித்தால், ரஷ்யா இந்தியாவின் நம்பகமான கூட்டாளி என்பது நமக்குத் தெரியும்.

இந்தியாவின் எதிரி நாடான சீனாவின் நெருங்கிய நண்பர் ரஷ்யா. அதை இந்தியா புறந்தள்ள முடியாது என்று வாஷிங்டனைச் சேர்ந்த சிந்தனைக் குழுவான யுனைடெட் ஸ்டேட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் உடன் தொடர்புடைய சதீஷ் புனியார் கூறுகிறார்.

இந்தியா ரஷ்யாவின் ஆயுதங்களையே அதிகமாகச் சார்ந்திருக்கிறது

“இந்தியாவின் வடக்கு அண்டை நாடுகளுடன் (சீனா மற்றும் பாகிஸ்தான்) ரஷ்யா எவ்வாறு வலுவான ராஜீய உறவுகளைக் கொண்டுள்ளதோ அந்த அளவிற்கு இந்தியாவின் எந்த குவாட் கூட்டாளி நாடும் சீனாவுடன் ஆழ்ந்த நட்பைக் கொண்டிருப்பதாகச் சொல்லமுடியாது. இந்தியா மற்றும் சீனாவின் வீரர்களுக்கு இடையே கல்வான் எல்லைப் பகுதியில் நடந்த மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் பேச்சுவார்த்தை 2020 ஜூன் மாதம் மாஸ்கோவில் நடத்தப்பட்டது. அமெரிக்காவை ஒப்பிடும்போது சீனாவுடன் ஆழமான உறவுகளை ரஷ்யா பேணி வருகிறது.

மறுபுறம், எதிர்காலத்தில் அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய நாடுகளும் யுக்ரேனும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பும்போது, இந்தியா இதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்ற எண்ணம் இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் உள்ளது.

ரஷ்யா, யுக்ரேன் மற்றும் அமெரிக்காவுடன் இந்தியாவின் உறவு வலுவாக உள்ளது. இந்தியா மத்தியஸ்தம் செய்ய பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும் என்று வாதிடலாம்.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்குமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. தன்னை இந்தியா கண்டிக்கவில்லை என்று ரஷ்யா இப்போது திருப்தி அடைந்துள்ள நிலையில், இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று யுக்ரேன் விரும்புகிறது.

மூன்று நட்பு நாடுகளுடன் நட்புறவைப் பேணுவது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் முக்கியமான சோதனையாக இருக்கும்.

இந்தியா ரஷ்யாவின் ஆயுதங்களையே அதிகமாகச் சார்ந்திருக்கிறது

ரஷ்யாவிடன் இருந்து ஆயுதங்கள் வாங்குவதைக் குறைக்க இந்தியா செய்ய வேண்டியது என்ன?

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவதை குறைக்க இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது. இந்திய அரசின் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு மட்டுமே சரியான கொள்கையாக இருக்கும் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஆனால் இதற்கு நீண்ட காலம் ஆகும். இப்போதைக்கு ரஷ்யாவை தொடர்ந்து சார்ந்து இருப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் உள்ளன.

இந்த விஷயத்தை விளக்க கைபேசியை உதாரணமாகக் காட்டும் சதீஷ் புண்ணியார், “மடிக் கணினி, கைபேசி, கணினி போன்றவற்றை நீங்கள் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயக்கினால், ஆப்பிள் ஐஃபோன், மடிக்கணினி, கணினி போன்றவை உங்களுக்குப் பிடிக்காது.

அவற்றின் விலை அதிகம் என்றும் உங்களுக்குத் தோன்றும். பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் சார்பு நிலையும் இதைப் போன்றதுதான்,” என்று சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here