ரஷ்யாவில் ஓர் விமானம், அவசரமாக தரையிறங்க முயன்ற போது, தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. 

ரஷ்ய நேரப்படி மாலை 6 மணிக்கு மாஸ்கோவின் ஷீரமெத்யேவோ விமான நிலையத்திலிருந்து முர்மான்ஸ்ட் நகரத்துக்கு புறப்பட்டுள்ளது பயணிகள் விமானமான சுகாய் சூப்பர்ஜெட் 100. ஆனால், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சிக்கலால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் ஷீரமெத்யேவோவிற்கே வந்துள்ளது. அவசர அவசரமாக விமானம் தரையிறங்கியுள்ளது. ரன்-வேயில் விமானம் தரையிறங்கியபோது, திடீரென்று அதன் பின்புறம் தீப்பிடித்துள்ளது. இந்த அவசரத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. 

இந்த விபத்தில் இதுவரை 41 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானக் குழுவில் இருந்த ஒருவரும் இதில் அடக்கம். ரஷ்ய அரசு அதிகாரிகள், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். 

இது குறித்து விசாரணை செய்யும் அதிகாரிகள் தரப்பு, ‘விமானத்தில் 78 பேர் பயணித்துள்ளனர். இதுவரை 37 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது’ என்று மட்டும் கூறியுள்ளது. 

சம்பவம் நடக்கும் போது விமான நிலையத்தில் இருந்த அல்யோனா ஓசோகினா, ‘நடந்தவற்றை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. திடீரென்று விமானம் தீப்பற்றி எரிந்தது. நெருப்பை அணைக்க தீயணைப்பு வண்டிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தபோதும், அதை கட்டுக்குள் கொண்டு வர வெகு நேரம் ஆனது. 
 

விபத்தில் தப்பியவர்கள், விமானத்தில் இருந்து விமான நிலையத்துக்கு மிகவும் அதிர்ச்சியான முகங்களுடன் வந்தனர்’ என்று ரெயின் டிவி-யிடம் கூறியுள்ளார். 

விமானத்தில் 73 பயணிகள் மற்றும் விமானக் குழுவைச் சேர்ந்த 5 பேர் இருந்துள்ளனர். 

விபத்து குறித்து விமான நிலைய தரப்பு, ‘உள்ளூர் நேரப்படி மாலை 6:02 மணிக்கு சு-1492 விமானம் டேக்-ஆஃப் ஆனது. விமானத்தில் ஏதோ பிரச்னை இருப்பதாக கூறி, 6:30 மணிக்கெல்லாம் அவசரமா தரையிறக்கப்பட்டது’ என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here