ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-V’ கொரோனா தடுப்பு மருந்து அளிக்கப்பட்டவர்களில் ஏழு பேரில் ஒருவருக்குப் பக்க விளைவு ஏற்பட்டுள்ளது.
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி அறிவித்தது. ”ஸ்புட்னிக்- V’ என பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசியை தனது மகளுக்கும் செலுத்தி பரிசோதனை செய்ததாக ரஷ்ய அதிபர் புதின் தகவல் தெரிவித்தார். ரஷ்யாவின் தடுப்பூசி அறிவிப்புக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பரிசோதனை கட்டத்திலேயே, அதிகாரப்பூர்வ அனுமதி அளிப்பது ஆபத்தானது என எச்சரித்தனர்.
இந்நிலையில் ‘ஸ்புட்னிக்-V’ தடுப்பூசி பெறப்பட்ட தன்னார்வலர்களில் 14% பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தான ‘ஸ்புட்னிக்-V’ மருந்தைப் பயன்படுத்திய ஏழு பேரில் ஒருவருக்குப் பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் 40,000 பேருக்குத் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி மருந்தைப் பயன்படுத்தியவர்களில் 14% பேருக்கு பக்கவிளைவு ஏற்பட்டுள்ளது. தசைப் பகுதிகளில் வீக்கம் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது.
‘ஸ்புட்னிக்-V’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3 ஆம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தங்கள் தடுப்பூசி மருந்தை மூன்றாம் கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தியது ரஷ்யா. மேலும், தங்கள் தடுப்பூசி அனைத்துக் கட்டச் சோதனைகளையும் வென்றுவிட்டதாகவும், ஐரோப்பிய நாடுகளின் கேள்விகளுக்கும் விடையளித்துவிட்டோம் என்று ரஷ்யா சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்காக மொபைல் செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர்களை உடனடியாக தொடர்பு கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.