டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்து பேசி வருகின்றனர். இந்தியா – ரஷ்யா இடையிலான இருதரப்பு உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த மாநாடு நடக்கவில்லை. இந்நிலையில் இன்று டெல்லியில் இந்த மாநாடு நடைபெறுகிறது. அதனால், தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கே ஷோய்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஆகியோரும் வந்துள்ளனர்.

முன்னதாக இன்று காலை 10.30 மணிக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் – ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கே ஷோய்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் மட்டத்திலான ‘2+2’ நிலையிலான பேச்சுவார்த்தைகள் நடந்தன. இன்று மாலை மாஸ்கோவில் இருந்து டெல்லி வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைமையிலான 21வது ஆண்டு இந்தியா – ரஷ்யா உச்சி மாநாடு நடக்கிறது.

அப்போது பேசிய பிரதமர் மோடி; இந்தியா ரஷ்யா இடையேயான நட்பு நிலையானது, நம்பகமானது, தனித்துவமானது. இந்தியா ரஷ்யா இடையேயான உறவுகளின் வளர்ச்சி வேகத்தில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா தொற்று சவால்களை ஏற்படுத்திய போதிலும் இருநாடுகளின் உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது என கூறினார். தொடர்ந்து பேசிய ரஷ்ய அதிபர்; இந்தியா வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவை வலுவான நாடாகவும், நம்பகமான நண்பனாகவும் கருதுகிறோம். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதமும், தீவிரவாதத்திற்கு நிதி அளிப்பதும் அச்சுறுத்தலாக உள்ளது. ஆப்கானில் நிலவி வரும் சூழல் குறித்து கவனித்து வருகிறோம் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here