ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்படும் குடிநீர் சேவை திட்டம் [அக்-8] இன்றுடன் நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.  

சென்னைக்கு கடந்த ஜூலை 12-ஆம் தேதி முதல் 50 வேகன்கள் கொண்ட ரயில் மூலம் நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லும் பணி தொடங்கியது. ஜூலை 22-ஆம் தேதி முதல் 2 ரயில்கள் மூலம் நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்பட்டது. இதுவரை 159வது ரயிலுடன் 39 கோடியே 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின்கீழ் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து விரைவில் அந்தத் தண்ணீரை புழல் ஏரிக்கு பிரித்து அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 899 மில்லியன் கனஅடியாக உள்ளது. 

வடகிழக்கு பருவ மழையும் நெருங்கி வரும் நிலையில், சென்னை ஏரிகளில் உள்ள நீர் இருப்பு மேலும் அதிகரித்து சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக  நிரம்பும் என்பதால் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்படும் குடிநீர் சேவை திட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி இன்று ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்படும் குடிநீர் சேவை திட்டம் நிறுத்தப்படுகிறது.