ரயில்வே சிற்றுண்டியில் வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சமைக்கும் முறைகளை மாற்றியமைக்க உள்ளதாகவும், சிற்றுண்டி உணவின் தரத்தின் குறைகளைத் தெரிவிக்க அவசரத் தொலைத் தொடர்பு வசதி செய்யப்படுவதாகவும் ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரை ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால் அதன் அடிப்படை வசதிகளான கழிப்பறை சுகாதார வசதியும், உணவு சகாதாரமும் மிகவும் மோசமாக உள்ளது. இந்நிலையில் மத்திய ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ்
பிரபு, ரயில்வே சிற்றுண்டிகளில் தயாராகும் உணவுகளின் தரம், சமைக்கப்படும் முறைகள் பாரம்பரிய முறைப்படி மாற்றியமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய சுரேஷ் பிரபு, ”ரயில்வே சிற்றுண்டிகளில் உணவுகள் தயாரிக்க அடிப்படை சமையலறைகள் உருவாக்கப்படும். இந்த அடிப்படை சமையலறைகள் தரமான அனுபவமிக்க உணவு நிறுவனங்கள் மூலம் கட்டமைக்கப்படும். இதனால் ரயில் உணவுகளின் தரம், சுவை இரண்டும் உறுதி செய்யப்பட்ட பின்னரே பயணிகளுக்கு வழங்கப்படும். இது ரயில் பயணிகளின் ஆரோக்கியத்தைக் கணக்கில் கொண்டு செய்யப்படுகிறது. மேலும், அந்தந்த மாநில பயணிகளின் பாரம்பரிய உணவு வகைகள் ரயில்வே சிற்றுண்டிகளில் இனி கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. உணவு தரம் மற்றும் சுவையில் பயணிகளுக்கு குறைவுகள் இருந்தால் உடனடியாக ரயில்வே நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் வகையில் அவசரத் தொலைத் தொடர்பு வசதிகளும் செய்யப்படவுள்ளது. விரைவில் இத்திட்டத்தை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தும்” என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : ரயில் பெட்டி சுத்தமாக இல்லையா? எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்