ரஞ்சித்தும் அவரது தலித் விரோத சினிமாவும்

0
806

தலித்களுக்கு எதிராக இருப்பது ஆண்டை மனோபாவம். நான்தான் எல்லாம், நான் சொல்வதே சட்டம், என்னால்தான் எல்லாம், என்னுடைய வரையறைக்கு அப்பால் எதுவும் இல்லை என்ற ஆதிக்கச்சாதியின் அதிகாரமே தலித்துகளின் முக்கிய எதிரி. சினிமாவில் இந்த எதிரி தொழில்படுவது ஹீரோ என்ற அடையாளத்துடன்.

ஹீரோ என்பவன் அனைத்தையும் ஆளப்பிறந்தவன், அவனே எல்லாம், அவன் சொல்வதே சட்டம், அவன் மொழிவதே உண்மை. அவனைத்தாண்டி எதுவுமில்லை.

ஒரு உண்மையான தலித் போராளி சினிமாவில் நுழைந்தால் அவன் செய்யக் கூடிய முதல் மற்றும் முதன்மையான விஷயம், சமூகத்தில் நிலவும் ஆண்டை மனோபாவத்தை சினிமாவிலும், அதன் வழியாக சமூகத்திலும் ஊட்டி வளர்க்கும் நாயக வழிபாட்டை இல்லாமல் செய்வதே ஆகும். அதாவது நாயக வழிபாட்டை கேள்விக்குட்படுத்துவது.

ரஞ்சித்தின் முதல் படம் அதைத்தான் செய்தது. மெட்ராஸ் படத்தில் நாயகனின் பெயர் முதலில் வராமல் ஆல்பபெடிக் ஆர்டரில் வந்த போது மகிழ்ச்சியடைந்தோம். அதிலும் நாயகன் அதிசூரனல்ல, எல்லோரையும் போல் ஒருவன். ஆனால், கபாலியில் நரைத்த கிழம் என்றாலும் ஹீரோ பாட்ஷா போல் அனைத்தையும் செய்யக் கூடியவன். ஹீரோயிசம் அதில் தூக்கிப் பிடிக்கப்பட்டது. அதுவும் எப்படி? இளவயது பாட்ஷா செய்யும் அனைத்து சாகஸங்களையும் நரைத்த கபாலியும் செய்தார். அந்த ஒற்றை நபரை நம்பியே ஒட்டு மொத்த மலேசிய தமிழர்களும் நோன்பு நோற்றார்கள். ஆண்டை மனோபாவத்துக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. காலா டீஸர், டிரைலரும் இதையேத்தான் சொல்கிறது.

தலித்களுக்கு இந்த சமூகத்தில் எதிரியாக இருக்கும் ஆண்டை மனோபாவத்தை ஊட்டி வளர்க்கும் சினிமாவையும், அதனை எடுக்கும் ரஞ்சித்தையும் தலித் போராளி என்று அடையாளப்படுத்துவதைவிட கேடு வேறில்லை. சமூகத்தில் தொழில்படும் ஆண்டை மனோபாவத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருப்பது தமிழ் சினிமாவின் நாயக பிம்பம்தான். அதனை ஊட்டி வளர்க்கும் ஒரு நபரை, அவரது சினிமாவை தலித்துகளின் மீட்சி என்று சொல்வதைவிட அபத்தம் வேறில்லை.

ரஞ்சித்தின் கபாலி, காலா இரண்டும் தலித்துகளுக்கு எதிரானவை. இன்னும் சரியாகச் சொன்னால் சுயமரியாதைக்கு எதிரானவை. இவ்விரு குப்பைகளையும் புறக்கணிப்போம், ரஞ்சித்தின், தனி நபரே எல்லாம், நாயகன் இன்றி அணுவும் அசையாது என்ற ஆண்டை மனோபாவ சினிமாவை எதிர்ப்போம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்