ரஜினி முதலில் தமிழ் சினிமாவை காப்பாற்றட்டும் – கோலிவுட் வேதாளம்

0
361
Rajinikanth

“ரஜினி இன்னொரு சுதந்திரப் போராட்டப் புரட்சி நடத்தணும்னு சொல்லிருக்காரே” என்றேன் வேதாளத்திடம். அதன் பிபி ஏறும் என்பதை தெரிந்து கொண்டே கேட்டேன்.

“என்னோட வாயை கிளறணும்னு கேட்கிற. நல்லா கேளு ஆசை தீர சொல்றேன்” என்று அதுவே ஆரம்பித்தது.

“ரஜினியோட பேச்சு, செயல், எண்ணம் எல்லாமே ஜனநாயக விரோதமானது. தனிநபர் வழிபாட்டையும், சினிமா கவர்ச்சியையும் மூலதனமா கொண்டது” என்றது வேதாளம்.

“எப்பிடி?”

“தேர்தல்ல நிற்கிறதுன்னா முதல்ல மக்கள்கிட்ட போகணும், மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசணும், அதுக்காக போராடணும், மக்களோட நம்பிக்கையை பெறணும். ஆனா, ரஜினிக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. சினிமாவில் நடிச்சு நல்லவர்னு ஒரு இமேஜை ரசிகர்கள்கிட்ட ஏற்படுத்தி வச்சிருக்கார். அது மட்டும் போதும்னு நினைக்கிறார். அதனாலதான் இப்போதைக்கு எதுவும் பண்ண மாட்டேன், தேர்தல் வரும்போது கட்சி ஆரம்பிச்சு 234 தொகுதியிலயும் போட்டியிடுவேன்னு, தேர்தல் முதலமைச்சர் பதவின்னு நேரா பதவிக்கு குறி வைக்கிறார்.”

“எனக்கு பதவி ஆசை இல்லைன்னு சொல்லியிருக்கிறாரே?”

“பதவி ஆசையினால அரசியலுக்கு வந்தேன்னு எந்த அரசியல்வாதி சொல்லியிருக்கார்? பதவி ஆசை இல்லைன்னா உங்க ரசிகர்கூட்டத்தை வச்சு அரசியல்ல இறங்காமலே சிஸ்டத்தை சரிபண்ண முயற்சி பண்ணியிருக்கலாமே. ஆனா, பிரச்சனை அதில்லை. ரஜினி எதை எதை எதிர்க்கிறாரோ, விமர்சிக்கிறாரோ அதையெல்லாம் செய்தது அவர்தான்.”

“என்னப்பா சொல்ற?”

“சிஸ்டம் சரியில்லைன்னு சொல்றார். அந்த சரியில்லாத சிஸ்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்டதுல ரஜினிதான் நம்பர் ஒன். கோச்சடையான் படம் வெளியானப்போ முப்பது சதவீத கேளிக்கைவரி விலக்குக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதிச்சிருந்தது. கோச்சடையான் ஒரு கோடி வசூலித்தால் 30 லட்சம் கவர்மெண்டுக்கு போகணும். அது நஷ்டமில்லையா? அதனால ஜெயலலிதா கவர்மெண்டில் தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி கோச்சடையான் படத்துக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கிற மாதிரி புதிய அரசாணையே போட வச்சார். இதே மாதிரி கேரளா, கர்நாடகாவில் பண்ண முடியுமா? சிஸ்டம் கெட்டுப்போனதனாலதானே இப்படி பண்ண முடிஞ்சது? கெட்டுப்போன சிஸ்டத்தை தனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டதுல தமிழ் சினிமால ரஜினிதான் நம்பர் ஒன். சரி, அவரோட கொள்கை என்ன?”

“உண்மை உழைப்பு உயர்வுன்னு தெளிவா சொல்லியிருக்கிறாரே.”

“ஆட்டோ பின்பக்கத்துலயிருந்து சரவணா ஸ்டோர் விளம்பரம்வரை நாம பார்க்கிற விஷயம்தான் இந்த உண்மை உழைப்பு உயர்வு. இதுவா கொள்கை? இதெல்லாம் சும்மா ஜம்பம். அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறாங்கன்னு சொல்றார். சினிமாவில் சட்டத்துக்குப் புறம்பா பார்வையாளர்களின் பணத்தை கொள்ளையடிக்கிறதில் முதல் ஆள் ரஜினிதான்.”

“எப்பிடி சொல்ற?”

“ரஜினியோட கபாலி படத்துக்கு முதல்நாள் டிக்கெட் இரண்டாயிரம் ரூபாய் போனது. அது கொள்ளையில்லையா? ரஜினி படம் வெளியாகிற போதெல்லாம் இதேதான் நடக்குது. இந்த அதிகபடி கொள்ளையாலதானே ரஜினிக்கு 60 கோடிக்கு மேல சம்பளம் கிடைக்குது? ரசிகர்களிகிட்டயிருந்து சட்டத்துக்குப் புறம்பா கொள்ளையடிக்கிற ரஜினிக்கு அரசியல்வாதிகளின் கொள்ளையைப் பத்தி பேச என்ன அருகதை இருக்கு?”

“ஆனா, படம் நஷ்டமானா பணத்தை திருப்பித் தர்றாரே?”

“சாதாரணமா ஒரு படத்துல நஷ்டம் வந்தா தயாரிப்பாளர்கிட்டதான் நஷ்டஈடு கேட்பாங்க. அஜித், விஜய், ரஜினி படங்கள் நஷ்டமானால் நடிகர்கிட்டதான் கேட்பாங்க. ஏன்னா, இவங்க படங்களில் அதிகபட்ச லாபம் கிடைக்கிறது நடிகர்களுக்குதான். அஜித், விஜய் 25 முதல் 30 கோடிகள்வரை சம்பளம் வாங்குறதா சொல்றாங்க. ரஜினிக்கு 60 க்கும் மேல. அதாவது படத்தோட லாபத்தில் 60 சதவீதம் இவருக்கே போகுது. அப்போ நஷ்டமானா யார்கிட்ட கேட்பாங்க? அதுவுமில்லாம அவர் நஷ்டஈடு தந்த லிங்கா படத்துல ராக்லைன் வெங்கடேஷ் வெறும் பேருக்குதான் தயாரிப்பாளர். ரஜினிதான் உண்மையான தயாரிப்பாளர். 100 கோடிக்கு மேல இவரே எடுத்துகிட்டா மத்தவங்களுக்கு நஷ்டம் வரத்தானே செய்யும்? 100 கோடியில 6 கோடியை திருப்பித் தந்தா அவரு தியாகியா?”

“ஊழல் பண்ண மாட்டேன், எனக்கு பணத்துல அக்கறை இல்லைன்னு சொல்றாரே?”

“ஆழ்வார்பேட்டையில நாலுக்கு நாலு பாத்ரூமே பத்தாயிரம் ரூபா வாடகை போகுது. அந்த இடத்துல ஒரு பெரிய ட்ராவல்ஸை வச்சு ரஜினியோட மனைவி லதா ரஜினிகாந்த் நடத்துறாங்க. கடந்த 25 வருஷமா அவங்க தந்த வாடகை மாசத்துக்கு வெறும் மூவாயிரத்து சொச்சம். இப்போ 21 ஆயிரமா ஏத்தியிருக்காங்க. அதை தர முடியாதுன்னு கோர்ட்டுக்கு போயிருக்காங்க. அந்த இடத்துல ஐம்பதாயிரம் கொடுத்தாலும் அப்படியொரு கடை கிடைக்காது. இவங்கதான் பணத்தாசை இல்லாத பேமிலி.”

“அப்போ நீ ரஜினியோட சுதந்திரப் போராட்டத்துல கலந்துக்கப் போறதில்லையா?”

“சுதந்திரப் போராட்டம்னா என்னன்னு அவருக்கு தெரியுமா? வீட்டையும், சொத்தையும் விட்டுட்டு வெள்ளைக்காரனோட அடியையும், சித்திரவதையையும் தாங்கிட்டு மக்களுக்காக மக்களோடு நின்னு போராடுனது சுதந்திரப் போராட்டம். நான் உங்கப் பிரச்சனை எதையும் பார்க்க மாட்டேன், பேச மாட்டேன், உங்களுக்காக ஒரு துரும்பையும் எடுத்துப் போட மாட்டேன். ஆனா, எலெக்ஷன் வந்தா எனக்கு ஓட்டுப்போட்டு முதலமைச்சராக்கணும். இதுதான் சுதந்திரப் போராட்டமா? எனக்கு வாயில என்னென்னவோ வருது.”

“ரஜினியால தமிழ்நாட்டை காப்பாத்த முடியாதுன்னு சொல்ற?”

“முதல்ல அவரை அவர் இருக்கிற சினிமாவை காப்பாத்த முடியுமான்னு பார்க்கச் சொல்லு. தயாரான படங்கள், தயாராகிட்டு இருக்கிற படங்கள்னு 300 க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் சிக்கல்ல மாட்டிகிட்டிருக்கு. எப்படி படத்தை வெளியிடறதுன்னு தெரியாம சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் கலங்கிப் போயிருக்காங்க. 30 கூட வேண்டாம். வெறும் மூணே மூணு படத்தை ரஜினியால ரிலீஸ் பண்ணி காட்டச் சொல்லு? தான் இருக்கிற சினிமாவுக்கே துரும்பையும் கிள்ளிப் போடாதவர், அதுல ஒரு பிரச்சனை வந்தா ஓடி ஒளியறவர், இவரு தமிழ்நாட்டு சிஸ்டத்தை மாத்தப் போறாராம். அதுவும் யாரை வச்சு? போஸ்டர் ஒட்டி விசிலடிச்சு ஜீப்பை கால்ல கட்டி இவர் நிறுத்துறதைப் பார்த்து தலைவான்னு கத்துற அரைகுறைகளை வச்சு. பேசப் பேச எனக்கு வாமிட்டா வருது.”

“அரசியல் கெட்டுப் போச்சு, சிஸ்டம் கெட்டுப் போச்சு அதனாலதான் அரசியலுக்கு வர்றேன்னு சொன்னதை நீ நம்பலையா?”

“அரசியல், சமூகம், சிஸ்டம் எல்லாம் கெட்டுத்தான் போச்சு. மக்கள் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கு. கதிராமங்கலம், இப்போ ஒகி புயல்னு எத்தனையெத்தனை பிரச்சனை. எத்தனை நூறு மீனவர்கள் காணாமல் போய் அவங்க உறவுகள் துடியா துடிச்சது. அதையெல்லாம் பார்க்க மாட்டேன், அது பத்தி பேச மாட்டேன்னு ஒதுங்கி இருந்திட்டு, தேர்தல் வந்தா கட்சி ஆரம்பிப்பேன், 234 தொகுதியிலயும் போட்டியிடுவேன், சிஸ்டத்தை மாத்துவேன்னு ஒருத்தர் சொன்னா, கேள்வியே இல்லாம பட்டாசு வெடிச்சு, இனிப்பு வழங்கி, டிவியில டிபேட் வைக்கிற அளவுக்கு இந்த சமூகம் கெட்டுத்தான் போயிருக்கு. இப்படி கெட்டுப்போனதாலதான் ரஜினியால தைரியமா முதலமைச்சர் பதவியை கனவு காண முடியுது. ரஜினி மாதிரியான ஆள்கள் அரசியல்ல நுழைய பயப்படுற அளவுக்கு இந்த சொஸைட்டி ஆரோக்கியமானதா மாறணும். அது ரஜினியையும், அவர் தொடங்கப் போற கட்சியையும் 234 தொகுதியிலயும் ஓட ஓட அடிக்கிறப்போ நடக்கும். நம்ம சமூகம் சொரணையுள்ளது, இன்னும் கெட்டுப் போகாம ஆரோக்கியமானதா இருக்குங்கிறதை நிரூபிக்க, ரஜினியையும், அவரது கட்சியையும் ஒரு சதவீத ஓட்டுகூட கிடைக்காத அளவுக்கு விரட்டி அடிக்கணும். சிஸ்டத்தையும், சமூகத்தையும் புனரமைக்கிற பணியை ரஜினியின் தோல்வியிலிருந்து தொடங்குவோம்.”

இதையும் படியுங்கள்: கால்நடை தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கான தண்டனை விவரம் ஒத்திவைக்கப்பட்டது ஏன்?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்