பிரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்து வெளிவரும் படம் கோமாளி. இத் திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், கோமாளி படத்தின் டிரெய்லர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அதில் சில சர்ச்சை காட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஒரு காட்சியில் ஜெயம் ரவி 16 வருடங்கள் கோமாவில் இருந்து பின்னர் அவர் குணமாகி எழுந்து பார்க்கும்போது இது எந்த வருடம் என்று கேட்கிறார். அதற்கு யோகிபாபு இது 2016ஆம் ஆண்டு என்கிறார். அப்போது டி.வி.யில் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று பேசும் காட்சி ஓடிக்கொண்டு இருக்கும். அதை பார்த்ததும் ஜெயம் ரவி இது 1996ஆம் வருடம்தான் 2016 அல்ல என்பார். இந்த காட்சி ரஜினிகாந்தை கேலி செய்வது போல் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவரும், ரஜினியின் நீண்டகால நணபருமான கமல்ஹாசன் கோமாளி பட டிரெய்லரை பார்த்த பின்னர் படத்தின் தயாரிப்பாளருக்கு போன் செய்து தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நம்மவர் அவர்கள் இன்று காலை கோமாளி டிரெய்லரை பார்த்தார். அதில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார்.

‘நட்பின் வெளிப்பாடா, நியாயத்தின் குரலா’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள இப்படத்தின் இயக்குநர் பிரதீப், “நான் தீவிர ரஜினி ரசிகன், ரஜினியின் லிங்கா படம் வெளியானபோது நான் பாலாபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறேன். இந்த படம் அனைவருக்கும் படம் பார்த்த திருப்தியை கொடுக்கும். ரஜனி சார் சீக்கிரமாக அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காகவே இந்த காட்சியை படத்தில் வைத்தேன்” என்று கூறியிருக்கிறார். 

இருப்பினும், பலத்த எதிர்ப்பு காரணமாக படத்தில் இருந்து அந்த காட்சி நீக்கப்படுமா? என்ற பரபரப்புரஜினி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.