ரங்கநாதன் தெருவுக்கு விடுமுறை

0
743
நேற்று இருந்தவர் இன்று இல்லை என்கிற நிலையில்லா உலகம் இது

சமீபத்தில் புறநகர் ரயில் ஒன்றில் யதேச்சையாக சந்தித்த நண்பரிடம் கேட்டேன், “என்ன, இவ்வளவு தூரம்?” என்று. “தி.நகருக்குத்தான். பொண்ணுங்க ரெண்டு பேரும் ஜெயச்சந்திரனுக்குப் போயிருக்காங்க: அங்கே டிவி விலை சரவணாஸைவிட ஆயிரத்து ஐநூறு குறைச்சலாம்; விவேக்ஸைவிட இரண்டாயிரத்து ஐநூறு குறைவாம்” என்றார். யதார்த்தமாக இதுபோன்ற சாதாரண மனிதர்கள் சஞ்சரிக்கும் கடைத்தெரு தியாகராய நகர்.

சென்னையில் பேருந்தில் பயணிக்கும்போது தியாகராய நகர் வந்தால் ஜேஜே என்றாகி விடும்; ரங்கநாதன் தெருவை கொஞ்சம் எட்டிப் பார்த்தால் மனிதத் தலைகள்தான் தெரியும். கொஞ்சம் நிதானித்துக் கவனித்தால் பெரிய மற்றும் சிறிய கடைகளின் பெயர்ப் பலகைகளும், அலங்காரமாய்த் தொங்கவிடப்பட்ட துணி வகைகளும் கண்களுக்குத் தெரியும்.

ஆள் நடமாட்டம் இல்லாத ரங்கநாதன் தெருவைப் பார்க்க வேண்டும் என்றால் நள்ளிரவு 12 மணிக்குத்தான் வர வேண்டும். நாள் முழுக்கத் தேங்கிய மனித வியர்வையும் குப்பைக்கூளமுமாகக் காட்சி தரும். மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து உஸ்மான் சாலைக்குச் செல்வோரையும் வருவோரையும் மட்டுமே அதிகாலை நேரங்களில் இந்தத் தெருவில் பார்க்கலாம். ஒன்பது மணிக்கு மேல் மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கிவிடும். பின்னர் நடக்கக்கூட இடம் இருக்காது. ஒருவர் காலை மற்றவர் மிதித்துத்தான் கடக்க வேண்டும்.

வாரத்தில் ஏழு நாட்களும் வாடிக்கையாளர்களின் ஏதாவது ஒரு தேவையைப் பூர்த்தி செய்துகொண்டே இருக்கும், ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் அனைத்தும் வியாழக்கிழமை திடீரென மூடப்பட்டுக் கிடந்தன.

இதனால் வழக்கம்போல் காலை 10 மணிக்கு ரங்கநாதன் தெருவிற்குச் சென்று பொருட்களை வாங்கி வீடு திரும்பலாம் என்று நினைத்து தியாகராய நகருக்கு வந்தவர்களுக்குப் பெருத்த ஏமாற்றம். சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் யோகரட்னம் காலமானதையடுத்து அனைத்துக் கடைகளின் கதவுகளிலும் ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளே வாடிக்கையாளர்களை வரவேற்றன.

ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸிலும் அருகிலுள்ள ஜெயச்சந்திரன் ஸ்டோர்சிலும் குறைந்த விலைக்குப் பொருட்கள் விற்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் நம்புவதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் அங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். யோகரட்னம் இறப்பையொட்டி சரவணா ஸ்டோர்ஸில் அனைத்துக் கிளைகளும் மூடப்பட்டன. கடைக்குப் பொருட்களை வாங்க வந்த வாடிக்கையாளர்கள் அடுத்து எங்கு செல்வது என்று முழித்துக் கொண்டு நின்றனர். ஒரு கடையின் நிறுவனர் இறந்துவிட்டதால் அவருக்குச் சொந்தமான கடைகள் மூடப்பட்டிருந்தன. அது மட்டுமில்லாமல், ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்துக் கடைகளும் மரியாதை நிமித்தமாக மூடப்பட்டன. இதனால் ரங்கநாதன் தெருவுக்கு வந்த மக்களுக்கு வேறு எங்கு செல்வது என்றும் புரியவில்லை.

திருமணத்திற்குத் தேவையான நகைகள், பாத்திரங்கள், துணி வகைகள் என மொத்தமாக அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கிச் செல்ல வந்த திருச்சியைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் கடை மூடப்பட்டு இருந்ததால் முகம் வாடிப்போய் அதே இடத்திலேயே உட்கார்ந்து விட்டனர். அவர்களைப்போன்றே பலர் அந்த வாசலில் உட்கார்ந்து இருந்ததைப் பார்க்க முடிந்தது. அதே போன்று மீனம்பாக்கம், திண்டிவனம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து வந்த பல வாடிக்கையாளர்கள், எப்போது கடைகள் திறக்குமோ அதுவரை காத்திருந்து பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்று ரங்கநாதன் தெருவையே சுற்றிச் சுற்றி வந்தனர். மரணித்தவரின் உடல் மயானத்திற்குச் சென்ற பின்னர் பிற்பகல் மூன்று மணிக்கு மேல் கடைகள் திறக்கப்படலாம் என்று ஒரு செய்தி அங்கே உலவியதும் இதற்குக் காரணம்.

பல்வேறு புதிய கடைகள், அறியப்பட்ட பிரபலமான கடைகளின் கிளைகள் தமிழ்நாட்டின் பல இடங்களில் தொடங்கப்பட்டு இருந்தாலும், வாடிக்கையாளர்கள் ஏன் ரங்கநாதன் தெருவுக்கே படை எடுக்கிறார்கள் என்பது பெரிய கேள்வி. ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், ரத்னா பாத்திரக்கடை, இந்தியா டெக்ஸ்டைல்ஸ், சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ் ஆகிய பெரிய கடைகளுக்கு நடுவில் நூற்றுக்கணக்கில் சிறிய மற்றும் நடுத்தரக் கடைகள் உள்ளன. இது தவிர கையில் பொருட்களை வைத்துக்கொண்டு கூவி விற்போரும் அதிகம். துணிமணிகள், பாத்திர பண்டங்கள் இன்னும் இதர பொருட்களை வாங்க வருவோர் பெரிய கடைகளுக்குத்தான் போவார்கள். என்றாலும் சின்னக் கடைகளுக்கென தனி மவுசு மக்களிடம் உண்டு.

பெரிய கடைகளுக்குப் போகும் வாடிக்கையாளர்கள், சின்னச் சின்ன தெருவோரக் கடைகள், கைகளில் பொருட்களை வைத்துக் கொண்டு கூவி விற்போரிடம் பேரம் பேசி குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதில் பெரிய மன நிறைவை அடைந்துவிடுகிறார்கள். இதுமட்டுமல்லாமல் நிறைய கடைகள் இருப்பதால் கடைக்காரர்களும் போட்டியின் காரணமாக பொருட்களின் விலையை உயர்த்தாமல் ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்கள். இதுவும் வாடிக்கையாளர்களை ரங்கநாதன் தெரு ஈர்ப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
அதனால்தான் குரோம்பேட்டை, வேளச்சேரி, புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் சரவணா ஸ்டோர்ஸ் தனது கிளைகளைத் திறந்து வைத்திருந்தாலும் அங்கு வாடிக்கையாளர்கள் குறைவாகவே செல்கிறார்கள்.

இந்த நிலையில்தான், இதுபோன்ற திடீர் மரணம், விபத்து போன்ற சம்பவங்கள் நடந்தது தெரியாமல் மொத்தமாக தேவையானதை ஒரே இடத்தில் வாங்கிச் செல்லலாம் என்று குடும்பமாக, கும்பலாக, குழுவாக ரங்கநாதன் தெருவிற்கு வந்தவர்கள் கடை வாசலிலேயே காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது.

அதே நேரத்தில் ரங்கநாதன் தெரு கடைகளுக்கு என உருவாக்கப்பட்ட சங்கத்தில் சிக்காத தெருவோர வியாபாரிகள் ஒரு சிலர் மட்டும் தங்களது கடைகளைத் திறந்து வைத்திருந்தார்கள். வந்ததற்கு இதையாவது வாங்கிச் செல்வோமே என்று பல வாடிக்கையாளர்கள் சாலையோரக் கடைகளில் வழக்கத்தைவிட அதிகமாகக் குவிந்திருந்தார்கள்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்