ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரியுள்ள வழக்கில் மனுதாரர்கள் தாக்கல் செய்திருக்கும் ஆவணங்கள் தேசப் பாதுகாப்பு குறித்து முக்கியத்துவம் வாய்ந்தவை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

அத்தகைய ஆவணங்களை நகலெடுத்து வெளியிட்டிருப்பது, திருட்டுக்கு சமமானது என்றும், அவற்றை கசியவிட்டதன் மூலமாக தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் இருந்து ரகசிய ஆவணங்கள் எடுக்கப்பட்டது தொடர்பாக கடந்த மாதம் 28-ஆம் தேதி உள் விசாரணை தொடங்கியிருப்பதாகவும், எந்தப் பகுதியில் ஆவணக் கசிவு நடைபெற்றது என்பதைக் கண்டறிவது மிக முக்கியமானது என்றும் உச்சநீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்திய விமானப்படைக்கு ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், கொள்முதல் நடைமுறைகளில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, மத்திய முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாதுகாப்புத்துறை அமைச்சகச் செயலாளர் சஞ்சய் மித்ரா தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் அனுமதி அல்லது ஒப்புதல் இல்லாமல், ரகசிய ஆவணங்களை நகல் எடுத்து மறுஆய்வு மனுவோடு தாக்கல் செய்திருப்பவர்கள் திருட்டு வேலை செய்ததாகக் கருதப்பட வேண்டும். தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு ஆகியவற்றை பாதித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணர்வுபூர்வமான ஆவணங்கள் ‘பரவலாக விநியோகிக்கப்பட்டு’ விரோதிகள் கையில் சிக்கியது எப்படி என்று இந்தப் பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரகசிய ஆவணங்களின் மிக முக்கியமான 14 பக்கங்களை சீராய்வு மனுவுடன் சேர்க்கப்பட்டுள்ளது, இதில் ஒரு 4 பக்கங்கள் ‘ரகசியம்’ என்று குறியிடப்பட்டதாகும். இந்தக் கசிவு ரஃபேல் ஒப்பந்தத்தின் கூறுகளை பாதித்துள்ளது என்கிறது இந்தப் பிரமாணப்பத்திரம்.

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆவணங்களைக் கொண்டு ஒப்பந்தம் பற்றிய ஒரு முழுமையற்ற பார்வையை வெளியிட்டுள்ளனர் என்றும் விவகாரங்கள் எப்படிப் பேசப்பட்டன, எப்படி தீர்வு காணப்பட்டன என்பது மனுதாரர்கள் சேர்த்த இந்த ஆவணங்களில் இல்லை என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் முயற்சியெல்லாம் நீதிமன்றத்தை திசைத்திருப்புவதற்காகவே என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆகவே ரஃபேல் ஒப்பந்தம் குறித்த விசாரணை தேவை என்ற மனுதாரர்களின் சீராய்வு மனு முழுதும் தள்ளுபடி செய்வதற்கு உரியதே.

முக்கிய ஆவணங்களை மனுதாரர்கள் அரசிடமிருந்து அனுமதி பெறாமல் தாக்கல் செய்துள்ளனர். இந்த ஆவணங்கள் ‘தகவலுரிமைச் சட்டம், 2005’-ன் கீழும் வெளிப்படுத்துவதற்கு உரியதல்ல என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here