லோக்பால் அமைப்பை ஏற்படுத்தியிருந்தால், ரஃபேல் முறைகேட்டை தடுத்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். மேலும், லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, வரும் 30-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:

லோக்பால் அமைப்பை ஏற்படுத்தியிருந்தால், ரஃபேல் போன்ற முறைகேடுகள் நிகழ்ந்திருக்காது. ரஃபேல் விவகாரம் தொடர்பான பல ஆவணங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை ஆராயவிருக்கிறேன். இரு தினங்களுக்கு பிறகு மீண்டும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவேன். ரஃபேல் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தை, இந்த ஒப்பந்தத்தில் கூட்டாளியாக சேர்த்தது எப்படி என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
லோக்பால் மற்றும் லோக்ஆயுக்த சட்டத்தை அமல்படுத்துவோம்; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதுடன், விளைபொருள்களுக்கு ஒன்றரை மடங்கு அதிக விலை கிடைக்கச் செய்வோம் என்று எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு உறுதிமொழி அளித்திருந்தது. ஆனால், அந்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. எனவே, எனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் வரும் 30-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். எனது உடலில் உயிர் இருக்கும் வரை உண்ணாவிரதம் தொடரும்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தாமல் இருப்பதை பார்க்கும்போது, நமது நாடு ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதாக தோன்றுகிறது. தற்போதைய மத்திய அரசுக்கு விவசாயிகளின் நலனில் எந்த அக்கறையும் இல்லை. பெரும் தொழிலதிபர்கள் மீதுதான் அக்கறை. எனவேதான், அவர்களது கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர். விளைபொருள்களை வீதியில் கொட்டி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

எனது ஆதரவாளர்கள் யாரும் ராலேகான் சித்திக்கு வர வேண்டாம். உங்களது இடங்களிலேயே நீங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளுங்கள் என்றார் ஹசாரே. அவரது போராட்டத்துக்கு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
லோக்பால் அமைப்பை ஏற்படுத்த வலியுறுத்தி, கடந்த 2011, ஏப்ரலில் தில்லி ராம்லீலா மைதானத்தில் அன்னா ஹசாரே முதல்முறையாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். இரண்டாவது முறையாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு வாரம் உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here