மக்களவையில் ரஃபேல் விமான ஒப்பந்தத்தைப் பற்றி ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

மக்களவையில், தெலுங்கு தேச கட்சி கொண்டு வந்த மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராகுல் காந்தி மக்களவையில் பேசும் போது , “ரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்தான தகவல்களை வெளியிட இருநாடுகளுக்கு இடையில் ரகசிய காப்பு ஒப்பந்தம் இருப்பதாக மோடி அரசு கூறுகிறது. பிரான்ஸ் அதிபர் மாக்ரூனுடன் நான் உரையாடிய போது இருநாடுகளுக்கு (இந்தியா மற்றும் பிரான்ஸ்) இடையில் எந்த ரகசிய காப்பு ஒப்பந்தமும் இல்லை என்றார். மோடியின் நெருக்கடியினால் நிர்மலா சீதாராமன் பொய் கூறியுள்ளார்” என்றார்.

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பிரான்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரான்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்திய நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் அறிக்கையை கவனித்தோம். இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் 2008-ஆம் ஆண்டு ரகசிய காப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி பங்குதாரர் கூறும் உரிய தகவலை இரு நாடுகளும் சட்டப்பூர்வமாக ரகசியம் காக்க வேண்டும்.

அதன்படி இந்தியா அல்லது பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு உபகரணம் மற்றும் அதன் செயல்பாட்டு திறன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். செப்டம்பர் 23, 2016-இல் 36 ரஃபேல் விமானங்கள் மற்றும் அதற்கான ஆயுதங்களுக்கான இருநாட்டு அரசின் ஒப்பந்தத்துக்கும் இந்த ரகசிய காப்பு ஒப்பந்தம் பொருந்தும்.

மார்ச் 9, 2018-இல் பிரான்ஸ் அதிபர் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், ‘இந்தியா – பிரான்ஸுக்கு இடையிலான ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், அது குறித்தான தகவல்களை வெளியிட முடியாது’ என்று கூறியிருந்தார்” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, மக்களவையில் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கையில், “இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான ரகசிய காப்பு ஒப்பந்தம் ஜனவரி 25, 2008 கையெழுத்தாகியுள்ளது. இந்த ரகசிய காப்பு ஒப்பந்தத்துக்கு அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏகே அந்தோணி கையெழுத்திட்டுள்ளார்” என்றார்.

மேலும், ரஃபேல் விமான ஒப்பந்தத்துக்கும் இந்த ரகசிய காப்பு ஒப்பந்தம் பொருந்தும் எனவும் இந்தியா டுடேவுக்கு அளித்த பிரான்ஸ் அதிபரின் பேட்டியையும் அவர் சுட்டிக்காட்டினார்.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here