ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது தொடர்பாக மத்திய தலைமை பொது கணக்காயரிடம் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு புகார் மனு அளித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஏராளமான விதிமுறை மீறல்கள் நடந்துள்ளன என எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த ஒப்பந்தத்தினை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளித்த விவகாரத்தில் தனியார் நிறுவனத் தலைவர்களும், அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டுள்ளனர். இது ஒரு கூட்டு ஊழலுக்கு வழி வகுத்துள்ளது என்றும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக, மத்திய தலைமை பொது கணக்காயரிடம் காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு புகார் மனு அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் ஷர்மா தலைமையிலான இந்த குழுவில் ஏ.கே .அந்தோணி, அஹமது படேல், குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜிவாலா, ராஜிவ் சுக்லா மற்றும் விவேக் தன்ஹா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

ரஃபேல் போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து விவரங்களையும், ஆவணங்களையும் நாங்கள் கோரிக்கை மனுவாக சிஏஜி அதிகாரியிடம் அளித்துள்ளோம். நாங்கள் அளித்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் விரிவான அறிக்கையாகத் தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் அளிப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டு விட்டார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.ஆண்டனி விமர்சனம் செய்திருந்தார். அத்துடன் மத்திய பாதுகாப்புத்துறையின் கட்டுப்பாட்டில் வரும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் லிமிட்டட் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் புறக்கணிக்கப்பட்டதாகவும் , அந்நிறுவனத்தின் திறனைப் பற்றி நிர்மலா சீதாராமன் சந்தேகம் எழுப்பியிருந்ததாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here