ரஃபேல் மறுசீராய்வு மனு; பதட்டத்தில் மோடி அரசு

0
407

2019 மார்ச் 6 ஆம் தேதி , உச்ச நீதிமன்றத்தில் ரஃபேல் மறுசீராய்வு மனுக்கள் மீதான விவாதம் ஆரம்பித்தது . மனுதாரர்களான பிரசாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டவர்களின் வாதங்கள் கேட்கப்பட்டன. ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் டிசம்பரில் அளித்தத் தீர்ப்பில், ஏன் தகவல் மற்றும் சட்டப்பிழைகள் இருந்தன என்பதை மனுதாரர்கள் தங்களின் வாதங்களாக முன்வைத்தனர்.

ரஃபேல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்கிற தனது, சின்ஹா மற்றும் ஷோரியின் முக்கியக் கோரிக்கையை நீதிபதிகள் பரிசீலிக்கவில்லை என்று கூறினார். தனது இந்த வாதத்தினை பரிசீலித்து இந்தத் தீர்ப்பினை மறு சீராய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று அவர் வாதிட்டார்.

மத்திய அரசு நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தியது என்றும், நீதிபதிகளிடமிருந்து தகவல்களை மறைத்துள்ளது என்று பிரசாந்த் பூஷன் வாதிட்டதுமே விசாரணை முற்றிலும் எதிர்பாராத திசையில் செல்லத் தொடங்கியது.

தி இந்து , தி கேரவன் போன்ற ஊடகங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு வெளிவந்த கட்டுரைகளை பிரஷாந்த் பூஷன் ஆதாரங்களாக (ஆவணங்களை) முன்வைத்தார். முத்திரையிடப்பட்டு பாதுகாக்கப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தின் விவரங்கள், நடைமுறைகள் மற்றும் விலை நிர்ணயம் போன்றவற்றை அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்பதை ஆதாரங்களோடு அந்த ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் மனு தாக்கல் செய்வதற்கு இதுவும் அடிப்படையாக அமைந்தது.

இந்த ஆவணங்களை முன்வைத்ததும் விவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்தது .

அரசு தலைமை வழக்கறிஞர் கே கே.வேணுகோபால் இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார் . இந்த ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து திருடப்பட்டவை என்றும், [ரஃபேல் விமான கொள்முதல் ஆவணங்கள் திருடப்படவில்லை என்றும் மனுதாரர்களால் அதன் நகல்கள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பின்னர் கே கே வேணுகோபால் தெரிவித்தார்]
இப்படிச் சட்ட விரோதமாக பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மறுசீராய்வு மனு மற்றும் மத்திய அரசுக்கு எதிரான மனு ஆகியவற்றை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஊடகங்கள் பயன்படுத்திய இந்த ஆவணங்கள் மிகவும் ரகசியமானவை என்பதால், இவற்றைப் பயன்படுத்துவதும், வெளியிடுவதும் ரகசியப் பாதுகாப்புச் சட்டத்தை மீறுவதாகும் என்று கே கே.வேணுகோபால் தெரிவித்தார். எனவே, சட்டத்தை மீறியதற்காக நாளிதழ் மீதும் மனுதாரர்கள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்கப் பரிசீலிப்பதாக அவர் தெரிவித்தார்.

ஆனால், இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? ஆவணங்களில் இருந்த தகவல்கள் உண்மையா, பொய்யா? முறைகேடுகளையும், சட்ட மீறல்களையும் வெளிக்கொணரும் பத்திரிகையாளர்கள் மீது இந்த அரசு ஏன் கிரிமினல் வழக்கு போடுவதாக மிரட்டுகிறது? திருடப்பட்ட ஆவணங்கள் என்பதால் அதில் உள்ள முக்கியத் தகவல்களை நீதிமன்றம் பார்வையிடாதா?

இந்த விசாரணையில் தெரியவரும் முக்கிய விஷயங்கள் கீழே

1. ஆவணங்கள் உண்மையானவை

ஊடகங்கள் வெளியிட்ட இந்தக் கட்டுரைகளில் வெளியான வெவ்வேறு ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்து விசாரணையின் எந்தக் கட்டத்திலும் அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கேள்விகுள்ளாக்கவில்லை. இந்த ஆவணங்கள் திருடப்பட்டது என்று சொல்வதன் மூலமாக அவர் இது பாதுகாப்புத் துறையிடமிருந்து வெளிவந்த ஆவணங்கள் தான் என்றும் அது ஜோடிக்கப்பட்டதல்ல என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இது முக்கிய நிகழ்வாகும். ஏனெனில் இது பல விஷயங்களை உணர்த்துகிறது:

*பிரதமர் அலுவலகம் இந்த ஒப்பந்தத்திலும் பேச்சுவார்த்தைக் குழுவின் நிலைப்பாட்டிலும் தலையிட்டதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கருதியுள்ளனர்.

*இந்த ஒப்பந்தம் குறித்து தீர்மானம் மேற்கொள்ள பாதுகாப்பு கேபினெட் குழு (சிசிஎஸ்) கூட்டம் கூட்டப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பே பிரதமர் அலுவலகம் இறையாண்மையையும் வங்கி உத்தரவாதத் தேவைகளையும் விட்டுக் கொடுக்க முடிவு செய்திருக்கிறது.

* அரசாங்கம் ஊழலுக்கு எதிரான சட்ட விதியினைக் கைவிட ஒப்புக் கொண்டிருக்கிறது. இது ஆகஸ்ட் 2016இல் சிசிஎஸ் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த பிறகு நடந்துள்ளது.

*பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினர்கள் ஒப்பீடு விலை, விமானங்களை ஒப்படைப்பதில் டஸ்ஸால்ட்டின் திறன் மற்றும் இறையாண்மை உறுதிப்பாடு போன்றவை குறித்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிரது. இருந்தாலும் இவற்றுக்கு சரியாகத் தீர்வு காணப்படவில்லை.

2. அரசிடமிருந்து தேவையான எல்லாத் தகவல்களும் உச்ச நீதிமன்றத்திற்குக் கிடைக்கவில்லை

அரசிடமிருந்து தேவையான எல்லாத் தகவல்களும் உச்ச நீதிமன்றத்திற்குக் கிடைக்கவில்லை. இந்த ஆவணங்கள் உண்மையானவையாக இருக்கும் பட்சத்தில் , அவை ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து தற்போது எதுவும் கூறமுடியாது . ஏனெனில் இவற்றில் இடம்பெற்றிருக்கிற தகவல்கள் மத்திய அரசால் உச்ச நீதிமன்றத்திடம் வழங்கப்படவில்லை .

2016 ஆகஸ்ட்டில் சிசிஎஸ் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்த பிறகு, 2016 செப்டம்பரில் ஊழலுக்கு எதிரான சட்ட விதி கைவிடப்பட்டது என்பது மிகவும் தீவிரமான பிரச்சனையாகும். ஏனெனில் இதனால் பாதுகாப்பு கொள்முதல் விதிமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. நீதிபதிகள் இது “பரவலாக பின்பற்றப்பட்டதாக” கருதுகின்றனர்.

இதே போன்று டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி ஏழுபேர் கொண்ட இந்திய பேச்சுவார்த்தைக் குழு (ஐஎன்டி – INT) இந்த ஒப்பந்தத்தின் வணிக அம்சங்களை பரிசீலித்து ஜூலை 2016 இல் சிசிஎஸ் க்கு அனுப்பியுள்ளது. அந்த சமயத்தில் தான், அதாவது ஆகஸ்ட் 2016 இல் சிசிஎஸ் இறையாண்மை உறுதிப்பட்டினைக் கைவிட ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். இதில் பிரதமர் அலுவலகத்தின் பங்கு இருந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை.

பிரதமர் அலுவலகத்தின் தலையீடு குறித்த பாதுகாப்பு அமைச்சகத்தின் குறிப்பு தெளிவாகச் சுட்டிக்காடடுகிறது. பிரான்ஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து தான் உறுதிப்பாடுகளை பிரதமர் அலுவலக அதிகாரிகள் கைவிட்டனர் என்கிறது குறிப்பு. ஏர் மார்ஷல் எஸ்பிபி சின்ஹாவும் பிரதமர் அலுவலகத்தைக் காப்பாற்ற முயற்சி செய்தார் என்றாலும் அவரே நவம்பர் 2015இல் இவ்வாறு நடைபெற்றதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

விதிமுறைகள் எல்லாம் சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை நீதிபதிகள் தீர்மானிக்க இந்தத் தகவல்கள் தேவையானவை. எனவே இந்தத் தகவல்களை நீதிமன்றத்திற்கு அளிக்காதது மத்திய அரசுக்குப் பிரச்சினைதான்.

3. தகவல் கசிவுகள், சீராய்வு மனுக்கள் ஆகியவற்றால் மோடி அரசு தடுமாறுகிறது
இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் , இந்தத் தகவல்கள் பொருத்தமானவை அல்ல என்றோ அல்லது அது தொடர்பாகச் செய்தி வெளியிடுவது அர்த்தம் இல்லாதது என்றோ மத்திய அரசு சார்பில் வாதிட்டிருக்கலாம். அல்லது இது குறித்த ஊடகக் கட்டுரைகள் பின்புலத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத்தகாதவை, ஆவணங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு எழுதப்பட்டவை என்றும் அரசு வாதிட்டிருக்கலாம்.

ஊடகங்களில் வெளியானவற்றை ஆதாரங்களாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என்று அரசு வாதிட்டது . அத்துடன், இந்த ஆவணங்களை வெளியிட்டதற்காக பத்திரிகையாளர்களையும், நீதிமன்றத்திடம் சமர்பித்ததற்காக மனுதாரர்களையும மிரட்டியது.

இவ்வாறு மிரட்டியது தகவல் கசிவுப் பிரச்சினையைக் கையாள்வதற்கான மோசமான அணுகுமுறை. இதிலிருந்து அரசு எதையோ மறைக்கிறது என்று நினைக்க தோன்றுகிறது . இந்த அணுகுமுறை பின்பற்றப்பட்டால், வெளிப்படையான தன்மைக்கு இது சாவு மணியாக அமையும். உண்மையைப் பேசினாலும்கூட, அவர்களின் வாயை மூடுவதில்தான் அரசு அக்கறை கொண்டுள்ளது என்பதை இது உணர்த்துகிறது.

இதில் மோசம் என்னவென்றால் இதே வாதத்தை மறு சீராய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்யவும் பயன்படுத்துகின்றனர். உச்ச நீதிமன்ற நீதிபதி அரிஜித் பசயத்தின் 2004ஆம் ஆண்டின் தீர்ப்பு தனக்கு பக்கபலமாக இருப்பதாக வேணுகோபால் கூறினார். என்றாலும் சட்ட விரோதமான முறையில் பெறப்பட்டது என்பதற்காகவே பொருத்தமான ஆதாரங்களைப் பரிசீலிக்க முடியாது எனும் வாதத்தை நீதிபதிகள் ஏற்கத் தயாராக இல்லை.

ஊடகங்களின் ஆதாரங்களை எடுத்துக் கொள்ளக்கூடது என்றதற்கு நிதீபதி கே.எம்.ஜோசப்தான் முதலில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். பொருத்தமாக இருந்தால் இத்தகைய ஆதாரங்கள் ஏற்கப்படும் என்றார். எந்த மாதிரியான குற்றம் நடைபெற்றிருந்தாலும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பானது என்பதால் நீதிமன்றம் பரிசீலிக்க முடியாதா எனத் தலைமை நீதிபதி கோகாய் கேள்வி எழுப்பினார். நீதிபதி எஸ்.கே.கவுல், அரசு தலைமை வழக்கறிஞர் கூறுவது சரி என்றாலும்கூட, இது ஒட்டுமொத்தமான தடையாகிவிட முடியாது என்றார்.

ஆதாரம் வெளியான விதம் தொடர்பான வாதங்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான வாதங்கள் மத்திய அரசின் நிலையை பலவீனமாக்கின.இந்த வாதங்களினால் அரசு தரப்பில் பதற்றம் தெரிந்தது . இது தலைமை வழக்கறிஞர், அரசுத் தரப்பு ஆகியோரின் வாதத்தை பலவீனமாக்கியது.

ரகசியக் காப்புச் சட்டம் மீறப்பட்டிருந்தாலும்கூட, அரசு கிரிமினல் வழக்கு தொடரலாமே தவிர, மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்ய முடியாது. இந்த எதிர்ப்புகளால் ஒப்பந்தம் தாமதம் ஆகாது . ஏனெனில் அதை நிறுத்த முயற்சிக்கவில்லை என நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. மனுதாரரும் இதைக் கோரவில்லை.

ஆவணங்களை யார் அளித்தது என மனுதாரர்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் கே கே வேணுகோபால் வலியுறுத்தினார். ஆவணங்கள் உண்மையானவை என ஒப்புக்கொண்ட பிறகு இவ்வாறு கேட்டது சரியானது அல்ல . ஆதாரம் பொய்யாக இருந்தால் மட்டுமே, தகவல்களை ஜோடித்திருந்தால் மட்டுமே, ஆதாரம் வழங்கியவர் தொடர்பான கேள்வியை கேட்டிருக்க வேண்டும் .

உண்மையான பிரச்சனையை சரியாக எதிர்கொள்ள தெரியாமல் அரசு இவ்வாறு தவறான வழிகளில் ஈடுபடத் தயாராக இருப்பதையே உணர்த்துகின்றன. அது மட்டும் அல்ல, இதைவிட வலுவான, சாட்சிகள் சட்டம் 123இன் கீழ், இந்த ஆவணங்கள் பிரத்யேகமானவை என வாதிடுவதற்கும் அரசு வழக்கறிஞருக்கு போதுமான நேரம் இருக்கவில்லை.

4 .அரசியல்மயமாக்கல் என கூறியது நீதிமன்ற அவமதிப்பாகலாம்

தேசியப் பாதுகாப்பை மட்டும் பேசுவதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. ரஃபேல் விவகாரத்தை அரசியல் மயமாக்கிவிட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். இது நாடாளுமன்றம் கவனிக்க வேண்டிய விஷயம், நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும் கே கே வேணுகோபால் கூறினார்.

இந்த ஒப்பந்தம் குறித்து நீதிமன்றம் ஏற்கனவே விசாரித்திருப்பதாலும், இந்த எதிர்ப்பு அப்போது எழுப்பப்படவில்லை என்பதாலும், இந்த வாதம் குழப்பம் தருகிறது. அது மட்டுமல்ல,நீதிபதிகளே உங்களுடைய ஒவ்வொரு வரியும் எதிர்க்கட்சிகளால் அரசை நிலைகுலைய வைக்கப் பயன்படுத்தப்படும். மேதகு நீதிபதிகள் இதற்கு நீங்கள் உடன்படப்போகிறீர்களா?’ என கே கே வேணுகோபால் கேட்டது மோசமாக தெரிந்தது .

இதன் மூலம் தலைமை வழக்கறிஞர் என்ன சொல்ல வருகிறார்? சட்டத்தின் அடிப்படையில் ஒரு பிரச்சினையைத் தீர்மானிக்கும்போது, உச்ச நீதிமன்றம் எப்போது அரசியல் நோக்கங்களைக் கருத்தில் கொண்டிருக்கிறது? 2013இல், 2ஜி உரிமங்களை ரத்து செய்தபோது, அதற்கான தீர்ப்பு வழங்குவதற்கு முன் பாஜக அதை எப்படி பயன்படுத்தும் என்று நீதிமன்றம் பரிசீலித்ததா? மத்திய அரசு சட்டத்தை மீறி இருந்தாலும்கூட, அதை எதிர்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காக நீதிபதிகள் ஆளுங்கட்சிக்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கக் கூடாதா?

இதுபோன்ற வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படுவது கவலை அளிக்கிறது. கே கே வேணுகோபால், தேசத்தைச் சீர்குலைப்பது பற்றிப் பேசவில்லை, எதிர்க்கட்சிகளால் அரசு பாதிக்கப்படுவது பற்றிப் பேசுகிறார். நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் இத்தகைய அரசியல் நோக்கிலான கருத்திற்கு எந்த இடமும் இல்லை. முக்கியமாக அரசியல் சாசனப் பொறுப்பு வகிக்கும் தலைமை வழக்கறிஞர் இவ்வாறு பேசக்கூடாது.

கே கே வேணுகோபால் அவ்வாறு பேசியது நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971, பிரிவு 2(c)(ii)இன் கீழ் இது கிரிமினில் அவமதிப்பாகவும் விளங்கும். இந்தப் பிரிவின்படி எந்த நீதிமன்றச் செயல்முறையிலும் குறுக்கிடும் விதத்திலோ அல்லது தலையிடும் வகையிலோ அல்லது நீதிமன்றத்தின் மீது சார்பு கற்பிப்பதாகவோ இருக்கும் எந்தக் கூற்றும் நீதிமன்ற அவமதிப்பாகும்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் நீதிமன்றத்தின் எந்த ஒரு கருத்தும் அரசை பாதிக்கும் என்று சொல்வது நீதிமன்ற அவமதிப்பாகவே அமையும் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

5 . நீதிமன்றம் தொடர்பாக விமர்சனக் கருத்துக்களைக் கூறுவதில் மனுதாரர்கள் கவனமாக இருக்க வேண்டும்

நீதிமன்ற நிகழ்வுகளில் மேலும் ஒரு நிகழ்வு சரியான கவனத்தைப் பெறவில்லை. நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தவர்களில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கும் ஒருவர். விசாரணையின் துவக்கத்தில், சிங்கின் வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவிடம், தலைமை நீதிபதி, அவரது மனுவை விசாரிக்க முடியாது ஏனெனில் அவர் ரஃபேல், அலோக் வர்மா வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் மீதும் அதன் நீதிபதிகள் தொடர்பாகவும் தரக்குறைவான கருத்துகளைக் கூறினார் எனத் தெரிவித்தார்.

எந்தக் கருத்துகளால் அதிருப்தி அடைந்தனர் என நீதிபதிகள் தெளிவுபடுத்தவில்லை. ஆனால், அவரது மனுவை ஏற்காதது குறைந்தபட்ச நடவடிக்கைதான் என்றும் அவர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

நீதிபதிகளின் இந்த முடிவின் சட்டபூர்வத் தன்மை தெளிவாகவில்லை. பொதுவாகப் பார்த்தால், சஞ்சய் சிங்கின் மறு சீராய்வு மனுவும், அவமதிப்புப் பிரச்சினையும் வேவ்வேறானவை. நீதிமன்றம் அவரை அவமதிப்புக்காகத் தண்டித்துக்கூட, மனுவை விசாரிக்கலாம்.

இந்த முடிவு சரியா, தவறா என்பதைத் தாண்டி, நீதிமன்றம் மற்றும் வழக்குகள் தொடர்பான பத்திரிகைச் செய்திகளை தலைமை நீதிபதி கோகாய் கவனிக்கிறார் என இதன் மூலம் தெரிகிறது. அலோக் வர்மா வழக்கிலும் இது ஒரு பிரச்சினையாக இருந்தது. வர்மாவும் மனுதாரர்களும் தகவல்களை பத்திரிகைகளுக்கு கசியவிடுவதாகத் தோன்றியதால் அடுத்துப் பல வாரங்களுக்கு அவர் விசாரணையைத் தள்ளிவைத்தார்.

பிரசாந்த் பூஷன், ஷோரி, சின்ஹா, எம்.எல்.சர்மா உள்ளிட்ட மனுதாரர்கள் இந்த வழக்கு பற்றி என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. சிபிஐ இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் நியமனம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களால் பிரஷாந்த் பூஷன் ஏற்கனவே அவமதிப்பு புகார் நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறார்.

பிரஷாந்த் பூஷனும் , அருண் ஷோரியும், பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக இந்த வழக்கில் சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிடாமல் கவனமாக இருக்கின்றனர். இந்த வழக்கை தொடர்ந்து எடுத்துச் செல்ல அவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம் .

VAKASHA SACHDEV

Courtesy : The Quint

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here