இந்தியாவிடம் முதல் ரஃபேல் போர் விமானத்தை வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி ஒப்படைக்கப்படுகிறது. இந்திய விமானப் படைக்காக பிரான்ஸில் இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் விமானப் படை தலைமைத் தளபதி ஆகியோர் பிரான்ஸ் சென்று அந்த விமானத்தை முறைப்படி பெற்றுக் கொள்கின்றனர். 

இதுதொடர்பாக டெல்லியில் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவுக்கென தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் விமானத்தை பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப் படை தலைமைத் தளபதி பி.எஸ். தனோவா ஆகியோர் தலைமையிலான குழு பிரான்ஸ் செல்கிறது. செப்டம்பர் 20ஆம் தேதி முதல் ரஃபேல் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிரான்ஸின் போர்டியக்ஸ் நகரில் ரஃபேல் விமானம் தயாரிக்கப்படும் தொழிற்சாலையிலேயே இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. 

செப்டம்பர் 20 ஆம் தேதி ரஃபேல் விமானம் முறைப்படி ஒப்படைக்கப்படும் போதிலும், அடுத்த ஆண்டு மே மாதமே அந்த விமானம் இந்தியா கொண்டுவரப்படும். இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரஃபேல் விமானங்கள், பிரான்ஸ் விமானப் படையில் இருக்கும் ரஃபேல் விமானங்களைக் காட்டிலும் நவீனமானவையாகும். ரஃபேல் விமானத்தை இயக்குவதற்காக இந்திய விமானப் படையைச் சேர்ந்த 24 விமானிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிரான்ஸ் விமானப் படையில் உள்ள ரஃபேல் விமானம் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தியாவுக்கு வழங்கப்படும் ரஃபேல் விமானத்தை இயக்குவதற்கு அடுத்த ஆண்டு மே மாதம் வரையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

கடந்த 2016 செப்டம்பர் மாதம் பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.62,000கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)