36 ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சீலிடப்பட்ட உறையில் மத்திய அரசு அளித்த விலை விவரங்கள் மீதான அறிக்கையை உச்ச நீதிமன்றம் தவறாக விளக்கமளித்துள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைமுறைகளுக்குத் தொடர்பான உயர்மட்ட வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.

விலை விவரங்கள் சிஏஜியிடம் ‘பகிர்ந்து கொள்ளப்பட்டது’, இந்த சிஏஜி அறிக்கை மல்லிகார்ஜுன் கார்கே தலைமை பொதுக் கணக்கு கமிட்டியின் முன் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உச்ச நீதிமன்றம் ‘தவறான விளக்கத்தைப் புரிதலை சரி செய்து கொள்ள வேண்டும்’ என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.

ரஃபேல் விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் 25வது பத்தியில், “விலை விவரங்கள் சிஏஜியிடம் பகிரப்பட்டுள்ளது. சிஏஜியின் அறிக்கை பொதுக்கணக்குகள் கமிட்டி ஆராய்ந்தது. அறிக்கையின் பதிக்கப்பட்ட பகுதிதான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, அது பொதுவெளியில் உள்ளது”. என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது விலை விவரங்கள் உள்ளிட்ட விவரங்கள் சிஏஜியிடம் சமரிப்பிக்கப்பட்டு அதை பொதுக்கணக்குகள் கமிட்டி ஆராய்ந்து விட்டதாகவும் உச்ச நீதிமன்றம் புரிந்து கொண்டது, இது தவறு என்று மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. இது அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியது, அதாவது மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பொய்யான தகவல் அளித்து விட்டது, உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்திவிட்டது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர், மல்லிகார்ஜுன கார்கே நான் பிஏசி தலைவர் நான் எப்போது பார்த்தேன்? என்று குண்டைத் தூக்கிப் போட்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அத்தகைய ரிப்போர்ட் எதுவும் பிஏசி பார்வைக்கு வரவில்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரையும், மத்திய தலைமை தணிக்கை அதிகாரியையும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுக்கணக்கு குழுவின் உறுப்பினர்களிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று மல்லிகார்ஜுன கார்கேவும் சனிக்கிழமையன்று கூறியிருந்தார். மேலும் கோர்ட்டை தவறாக வழிநடத்தியதற்காக மத்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து, உச்ச நீதிமன்ற உயர்மட்ட வட்டாரம் தெரிவிக்கும் போது, “ரஃபேல் தீர்ப்பை இந்த விஷயத்தில் நீதிமன்றம் சரி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளது. இது தொடர்பான சீலிடப்பட்ட உறையில் உள்ள அறிக்கையில் சில விஷயங்கள் அமைக்கப்பட்டன. அதன் படி ரஃபேல் போர்விமான விலை விவரங்கல் சிஏஜியிடம் பகிரப்பட்டது, இது பொதுக்கணக்குகள் கமிட்டிக்கு கொடுக்கப்படவுள்ளது, பிஏசி அறிக்கை பதிக்கப்பட்ட வடிவத்தில் நாடாளுமன்றத்திலும் பொதுவெளிக்கும் சமர்ப்பிக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆகவே, சிஏஜி அறிக்கை பொதுக்கணக்கு கமிட்டிக்கு சமர்பிக்கப்படவுள்ளது என்பதற்குப் பதிலாக சமர்ப்பிக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தவறாகக் கூறிவிட்டது, என்று தவறு உச்ச நீதிமன்றத்தின் பக்கம் என்று கூறுகிறது அந்த வட்டாரம்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் முன்னிலையில் விசாரணையின் போது மத்திய அரசு வாய்மொழியாக வாக்குமூலம் எதையும் அளிக்கவில்லை. “சீலிடப்பட்ட உறை என்பதால் வாய்மொழியாகக் கூறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறப்படுகிறது.

திருத்திக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு செய்துள்ள விண்ணப்பம் மனுதாரர்களான முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.