ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2007-இல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைக் காட்டிலும் தேசிய ஜனநாயக் கூட்டணி மேற்கொண்ட ஒப்பந்தத்தில் 36 போர் விமானங்களின் விலை 2.86% குறைவாக உள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான அரசில் செய்யப்பட்ட ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தைத் காட்டிலும் நாங்கள் செய்த ஒப்பந்தத்தில் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று பாஜக தலைமையிலான அரசு கூறி வருகிறது. ஆனால் அதைக் கடுமையாக எதிர்த்துவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டுப் பேசிவருகிறார்.

ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கேட்டு முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தார். மேலும் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது குறித்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) தலைமைத் தணிக்கைக் குழு (சிஏஜி) அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில், ”இந்தியாவுக்கு மட்டுமே உரிய சிறப்பு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அம்சங்களை (India Specific Enhancements) பார்க்கும்போது பாஜக அரசின் ஒப்பந்தம் 17.08% மலிவாக உள்ளது. பொறியியல் சார்ந்த அம்சங்கள் மற்றும் தடவாளங்களை அடிப்படையாகக் கொண்ட செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது ரஃபேல் ஒப்பந்தம் 6.54% விலை அதிகமாக உள்ளது.

மொத்தத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2007-இல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைக் காட்டிலும் 36 போர் விமானங்களின் விலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் 2.86% குறைவாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ரஃபேல் ஒப்பந்தத்தை பாஜகவின் மெகா ஊழல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகிறது.

முன்னதாக, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்துக் கோப்புகளையும் கையாள தலைமைத் தணிக்கைக் குழுவுக்கு (சிஏஜி) முழு அனுமதி வழங்கப்பட்டிருந்தது .