ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அரசு செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். ஆனால், டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமும், ரிலையன்ஸ் நிறுவனமும் கைகோர்த்ததில் அரசின் தலையீடு இல்லை என்று காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. 

இந்நிலையில், ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசு ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை மட்டுமே பரிந்துரைத்ததாக முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹோலன்ட் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஃபிரான்கோய்ஸ் கருத்தும், பாஜக மறுப்பும் முற்றிலும் முரணாக இருப்பது இந்த ஒப்பந்தத்தில் உள்ள சர்ச்சையை மேலும் வலுப்படுத்துகிறது .

பாஜக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்து, பிரான்ஸுக்கு 2015, ஏப்ரல் 15- இல் மோடி சென்றார். அந்நாட்டுஅரசிடம் இருந்து, ஆயுதங்கள் பொருத்தப்பட்டு பறப்பதற்கு தயார் நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கவுள்ளதாக அறிவித்தார். 
இதையடுத்து, பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் 2016, செப்டம்பர் 23-இல் கையெழுத்தானது. இதில், விமானங்களை நீண்ட காலத்துக்கு பராமரிக்கும் பொறுப்பையும் பிரான்ஸ் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கவுன்சிலின் (Defence Acquisition Council)   
ஆலோசனைகளும் இந்த ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. 
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுமார் ரூ.12,600 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், விமானத்தின் விலை விவரங்களை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்படி, இந்த விமானங்களின் உதிரிப் பாகங்களைத் தயாரிக்க இந்திய நிறுவனங்களைப் பயன்படுத்த வேண்டும். அந்த நிறுவனங்களை டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமே தேர்ந்தெடுக்கலாம் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ரஃபேல் விமானங்களின் உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் ரூ. 21,000 கோடிக்கான ஒப்பந்தத்தை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துக்கு டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் வழங்கியது. இந்நிலையில், ஒப்பந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவதற்கு சுமார் 10 நாள்களுக்கு முன்புதான் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டதாகவும், இதற்கு மத்திய அரசு உதவியுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதற்கு, டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தாங்கள் விரும்பும் எந்த இந்திய நிறுவனங்களுக்கும் ஆர்டர்களை வழங்கலாம் என்பது ஒப்பந்தம்… அது அவர்களது உரிமை. இந்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பில்லை” என்று மத்திய அரசு மறுத்தது.


ரிலையன்ஸ் நிறுவனத்துடன்தான் இப்போது ரஃபேல் விமானங்களுக்கான உதிரிபாகங்களை தயாரித்து வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது . 
126 போர் விமானங்களை ரூ.54,000 கோடியில் கொள்முதல் செய்ய காங்கிரஸ் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இப்போது, ரூ.60,000 கோடியில் 36 விமானங்களை மட்டுமே வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here