முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருக்கும் விவகாரம் தொடர்பாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை சந்தித்து பேசியதால் மத்திய அரசு அதிருப்தி அடைந்திருக்கிறது .

சிபிஐ இயக்குநரை அரசியல் தலைவர்கள் சந்தித்து பேசுவது என்பது அரிதாகவே நடைபெறும். கடந்தவாரம் அருண் ஷோரியும், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் சிபிஐ இயக்குநரைச் சந்தித்து ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதற்கான ஆவணங்களை சமர்பித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

சிபிஐ அலுவலகத்தில் அரசியல் தலைவர்கள் சிபிஐ இயக்குநரை சந்தித்து பேசியது இதுதான் முதல் முறையாகக் கூட இருக்கலாம்.

ஏதேனும் புகார் அளிக்க வேண்டுமானாலும் சிபிஐ தலைமை அலுவலகத்தின் வரவேற்பு பிரிவில் மனுவை அளித்துவிட்டு செல்வார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை உள்ளது.

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து சட்டப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனில் அம்பானிக்கு ஆதரவாக மோடி அரசு செயல்பட்டுள்ளது என்பது குறித்தும் நடவடிக்கை எடுக்கக் கோரி சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவிடம் அருண் ஷோரி மற்றும் பிரஷாந்த் பூஷன் வலியுறுத்தியுள்ளனர்.

ஏப்ரல் 10, 2015-இல் அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஹோலன்டை பாரிஸில் சந்தித்துப் பேசிய இந்திய பிரதமர் மோடி, 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் 2016, செப்டம்பர் 23-இல் கையெழுத்தானது. இதில், விமானங்களை நீண்ட காலத்துக்கு பராமரிக்கும் பொறுப்பையும் பிரான்ஸ் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கவுன்சிலின் (Defence Acquisition Council) ஆலோசனைகளும் இந்த ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

இந்த விமான கொள்முதலில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் படி விமானங்களின் உதிரிப் பாகங்களைத் தயாரிக்க இந்திய நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்காமல் , ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்த்துக்கு கொடுக்கப்பட்டது .

ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை இந்திய அரசு தான் பரிந்துரைத்தது என்று முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹோலன்ட் தெரிவித்தார்.

Courtesy : NDTV

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here