ரஃபேல் ஒப்பந்தத்தில் பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதால் விமானத்தின் விலை அதிகமாகியுள்ளது . காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மிகக் குறைந்த விலையை மேற்கோள்காட்டி 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை பிரான்ஸின் டஸ்ஸால்ட் நிறுவனம் பெற்றது. ஆனால் அதன்பிறகு வந்த மோடி அரசு பல்வேறு விதிமுறைகளை மீறி 36 விமானங்கள் வடிவமைக்க 130 கோடி யூரோ என்ற விலையை ஒத்துக்கொண்டது. இந்த ரஃபேல் போர் விமானம் ஒவ்வொன்றின் விலையும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிர்ணயித்த விலையைக் காட்டிலும் 41.42 சதவீதம் அதிகமாகும் என்று தி இந்து ஆங்கிலத்தில் என் ராம் எழுதிய புலனாய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

டஸ்ஸால்ட் நிறுவனத்தின் ரஃபேல், யூரோஃபைட்டர் நிறுவனத்தின் டைஃபூன் வகைப் போர் விமானங்கள் உகந்தவையாக இருக்கும் என இந்திய விமானப்படை 2011-இல் தெரிவித்தது. இதில் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் குறைந்த விலை கோரியிருந்ததால் அந்த நிறுவனத்துடன் 2012- இல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டது.

ரூ.54,000 கோடி (79.3 மில்லியன் யூரோ )மதிப்பில், 126 விமானங்கள் தயாரிக்கப்படும் என்றும் அதில், 18 விமானங்கள் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டுப் பறப்பதற்குத் தயாரான நிலையில் இந்தியாவிடம் அளிக்கப்படும் என்றும், எஞ்சியுள்ள 108 விமானங்கள், தொழில்நுட்பப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் (ஹெ.ஏ.எல்.) நிறுவனத்தால் தயாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டன.

பாஜக கூட்டணி அரசு 2014-இல் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், இந்த விமானக் கொள்முதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி சிறப்புக் கவனம் செலுத்தினார். பிரான்ஸுக்கு 2015, ஏப்ரல் 15- இல் சென்ற மோடி, காங்கிரஸ் ஆட்சியின்போது செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, அதாவது 126 போர் விமானங்களுக்கு பதிலாக 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்தார்.

இதையடுத்து, பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் 2016, செப்டம்பர் 23-இல் கையெழுத்தானது. இதில், விமானங்களை நீண்ட காலத்துக்கு பராமரிக்கும் பொறுப்பையும் பிரான்ஸ் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கவுன்சிலின் (Defence Acquisition Council)
ஆலோசனைகளும் இந்த ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

காங்கிரஸ் ஆட்சியில் 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் பிரதமர் மோடியின் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒவ்வொரு ரஃபேல் விமானத்தின் விலையும் 41.42 சதவீதம் அதிகமாக போடப்பட்டது. 36 விமானங்களை வடிவமைக்க 130 கோடி யூரோ என்ற விலையை மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏற்றுக்கொண்டது.

இந்த 36 ரஃபேல் போர் விமானங்களும் வானில் பறப்பதற்குத் தயாராக முழுத் தகுதியடைதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரஃபேல் போர் விமானம் ஒவ்வொன்றின் விலையும் முந்தைய விலையைக் காட்டிலும் 41.42 சதவீதம் அதிகமாகும்.

இந்திய விமானப்படை கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்தியாவுக்கு மட்டும் பிரத்தியேகமான வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அம்சங்களுக்காக 140 கோடி யுரோவை டஸ்ஸால்ட் நிறுவனம் கேட்டது. அதன்பின் பேச்சுவார்த்தைக்குப் பின் விலை 130 கோடி யூரோவாகக் குறைக்கப்பட்டது.

இதன் மூலம் 36 ரஃபேல் போர் விமானங்களின் 13 சிறப்பு அம்சங்கள், வடிவமைப்புக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு ஒவ்வொரு விமானத்துக்கும் 11.11 மில்லியன் யூரோ என்ற நிலையில் இருந்து 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் ஒவ்வொரு விமானத்தின் விலையும் 36.11 மில்லியன் யூரோவாக அதிகரித்தது. அதாவது 2007 ஆம் ஆண்டு விமானத்தின் விலை 100.85 மில்லியன் யூரோ, 13 சிறப்பு அம்சங்கள், வடிவமைப்புக்கு 11.11 மில்லியன் யூரோ (18 விமானங்களுக்கு மட்டும்) . 2016 ஆம் ஆண்டில் விமானத்தின் விலை 91.75 மில்லியன் யூரோ,13 சிறப்பு அம்சங்கள், வடிவமைப்புக்கு 36.11 மில்லியன் யூரோ (36 விமானங்களுக்கு ).

Courtesy : The Hindu
Courtesy : The Hindu

காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு மட்டுமான பிரத்யேக வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அம்சங்களுக்கான தொகை 126 இல் 18 விமானங்களுக்கானது. 36 ரஃபேல் விமானங்களுக்கும் பிரத்யேக வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு அம்சங்களுக்கான தொகையையும் பாஜக அரசு ஏற்றுக் கொண்டு ஒப்பந்தம் செய்தது . இதனால்தான் ஒவ்வொரு விமானத்தின் விலையும் 41.42 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதே இப்போதைய பேச்சு.

இந்தியாவுக்கான பிரத்யேக வடிவமைப்புகளுக்கான தொகை காங்கிரஸ் ஆட்சி ஒப்பந்தத்தில் 126 விமானங்களுக்குமானது, ஆனால் பறக்ககூடிய நிலையில் வாங்கும் 36 ரஃபேல் விமானங்களுக்கும் அதே தொகை, அதாவது சற்றே குறைக்கப்பட்ட தொகை, இதுதான் 41% விலை அதிகமானதற்குக் காரணம்.

தி இந்து (ஆங்கிலம்) – க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தியாவின் சார்பில் இந்திய பேச்சுவார்த்தைக் குழு Indian Negotiating Team (INT) -இல் இருந்த 7 பேர் கொண்ட குழுவில் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் 3 மூத்த அதிகாரிகள் இந்த விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ராஜிவ் வர்மா(இணைச் செயலாளர் மற்றும் கொள்முதல் மேலாளர்), அஜித் சுலே(நிதி மேலாளர்), எம்.பி. சிங்(ஆலோசகர்) ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கு மட்டுமே உரிய 13 சிறப்பு அம்சங்கள் வடிவமைப்புக்காக டஸ்ஸால்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ள விலை மிக அதிகமாகும் என்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

ரஃபேல் விமான விலை குறித்த இந்திய பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருந்த 7 பேரில் 3 பேர் விலை உயர்வுக்கு எதிர்த்த நிலையில், 4 அதிகாரிகள் ஆதரித்துள்ளனர்.

அதாவது, இந்திய விமானப்படையின் துணைத் தலைவர், இணைச் செயலாளர்(பாதுகாப்பு மேலாண்மை), இணைச் செயலாளர் மற்றும் கூடுதல் நிதி ஆலோசகர், மற்றும் ஏர் ஸ்டாப் துணைத் தலைவர் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

7 பேர் கொண்ட குழுவில் 4 பேர் இதற்கு ஆதரவு தெரிவித்ததால், 3 பேரின் எதிர்ப்பு பெரிதாக பேசப்படவில்லை .

2009-ஆம் ஆண்டு 126 விமானங்களுக்குக் கோடிட்ட 140 கோடி யூரோவைக் காட்டிலும், 2015-ஆம் ஆண்டு மே மாதம் நிர்ணயிக்கப்பட்ட 130 கோடி யூரோ சிறந்தது என அதிகாரிகள் 4 பேர் ஆதரவு தெரிவித்துவிட்டனர்.

இதுபோல் 10 விதமான கேள்விகள் எழுப்பப்பட்டபோதும், 4-3 என்ற வாக்குகளின் அடிப்படையில் முடிக்கப்பட்டு, இந்திய பேச்சுவார்த்தை குழு தங்களின் அறிக்கையையும் கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி தாக்கல் செய்தனர்.

பாதுகாப்பு துறை கொள்முதல் குழு (Defence Acquisition Council )

பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் விதிகளின் கீழ் கொள்முதல் செய்ய அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் குழு அமைக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தனது பொறுப்பில் இருந்து விலகி அந்தப் பொறுப்பை பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக்கு மாற்றிவிட்டார்.

பிரதமர் மோடி ஏற்கனவே எந்த விதமான முன்அறிவிப்பும் இன்றி 2015-ஆம் ஆண்டு 36 ரஃபேல் போர்விமானங்கள் வாங்குவதற்குப் போட்டுவிட்ட நிலையில், அதை மீற முடியாது என்பதால், இதைப் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் குழுவுக்கே மாற்றப்பட்டது.

ஆனால், ரஃபேல் போர்விமானங்களில் இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான 13 சிறப்பு அம்சங்கள், வடிமைப்புகள் என்ன என்பது பாஜக அரசு தேசிய பாதுகாப்பு கருதி வெளியிட மறுத்துவிட்டது. சில தகவல்கள் அதுதொடர்பாக முன்கூட்டியே வெளியானது. குறிப்பாக தி இந்து (ஆங்கிலம்) சிறப்பு நிருபர் தினகர் பெரி இதை 2018 நவம்பரில் வெளியிட்டிருந்தார்.

Dinakar Peri, in a November 2018 report

(https://www.thehindu.com/news/national/india-specific-rafale-add-ons-after-delivery-of-all-36-fighters/article25532159.ece),

அந்த 13 சிறப்பு அம்சங்களும் மற்ற நாடுகளின் போர்விமானங்களில் இல்லாத அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக அதிநவீன ரேடார்கள், ஹெல்மெட்டில் டிஸ்ப்ளே, உயர்வாக பறந்தவாரே தாக்கும் வசதி, அதிநவீன சென்சார், ஜாம்மர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதா?

பிரான்ஸின் டஸ்ஸால்ட் நிறுவனம் தவிர்த்து வேறு நிறுவனங்களும் குறைந்தவிலையில் போர்விமானங்களை அளிக்க இந்திய அரசிடம் கோரியுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை உள்ளடக்கிய யூரோபைட்டர் டைப்பூன் கன்சோர்டியம்(இஏடிஎஸ்) Eurofighter Consortium (formerly EADS) தொடர்பு கொண்டுள்ளது.

20 சதவீதம் தள்ளுபடி விலையில் 126 போர் விமானங்களை வழங்குவதாகக் கூறியும் அது நிராகரிக்கப்பட்டது.

ஆனால், இஏடிஎஸ் அமைப்பு தங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி விலையில் விமானங்கள் வழங்குவதாகக் கூறியுள்ளது என்ற விஷயத்தைக் கூறி டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் இந்திய பேச்சுவார்த்தைக் குழு பேரம் பேசி இருக்க வேண்டும். ஆனால், இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் 4-3 என்ற வாக்குகள் அடிப்படையில் மட்டுமே ரஃபேல் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது.

இது தவிர அருண் ஜெட்லி பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, Airbus Defence and Space ஏர்பஸ் நிறுவனமும் போர் விமானங்களை 20 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய முன்வந்தது. ஆனால், அந்தச் சலுகையும் இந்திய அரசு பயன்படுத்திக்கொள்ளவில்லை.

36 விமானங்கள் – 130 கோடி யூரோ

2007-ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி 126 விமானங்களில் சிறப்பு அம்சங்கள், மேம்பாட்டுக்காக 140 கோடி யுரோ விலையை டஸ்ஸால்ட் நிறுவனம் நிர்ணயித்து இருந்தது. ஆனால், பாஜக அரசில் 2016-ஆம் ஆண்டு செய்யப்பட்டஒப்பந்தத்தில் 36 ரஃபேல் போர்விமானங்களில் சிறப்பு அம்சங்கள், மேம்பாட்டுக்காக 130 கோடி யூரோ என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஒவ்வொரு விமானத்தின் விலையைக் காட்டிலும் 25 மில்லியன் யூரோ அதிகமாக பாஜக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் 9 சதவீதம் விலையைக் குறைத்துவிட்டதாக பாஜக அரசு கூறிவருகிறது. ஆனால், 9 சதவீதம் விலை குறைப்பைக் காட்டிலும், ஒவ்வொரு விமானத்தின் மீதும் 25 மில்லியன் யூரோ விலை உயர்வு என்பது மிக அதிகமாகும்.

2018-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அளித்த விளக்கத்தில் காங்கிரஸ் அரசு ரஃபேல் போர் விமானத்துக்கு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் நாங்கள் 9 சதவீதம் விலையைக் குறைத்துவிட்டோம். ஒரு விமானத்துக்கு 100.85 யூரோ என்று விலை இருந்த நிலையில் நாங்கள் 91.75 என்று குறைத்தோம் என்று தெரிவித்தார்.

ஆனால், விமானம் வடிவமைப்பு, சிறப்பு அம்சங்களுக்காகச் செலவிடப்பட்ட, ஒரேயொரு முறை மட்டுமேஆகும் செலவு அதாவது மீண்டும் வராத செலவு தொகை குறித்த விவரங்களை அவர் தெரிவித்தவில்லை. 36 ரஃபேல் விமானங்களின் சிறப்பு அம்சங்களுக்காக 127.86 மில்லியன் யூரோ விலை வழங்க பாஜக அரசு ஒப்புக்கொண்டது. இது 2007-ஆம் ஆண்டு டஸ்ஸால்ட் நிறுவனம் கூறிய விலையைக் காட்டிலும் 41.42 சதவீதம் அதிகமாகும்.

மேலும், டஸ்ஸால்ட் நிறுவனம் , விலையில் , 9 சதவீதம் அளித்த தள்ளுபடிக்காக பாலோ-ஆன் கிளாஸ் என்ற சிறப்பு வசதியையும் பாஜக அரசு ரத்துசெய்ய ஒப்புக்கொண்டுள்ளது. பாலோ-ஆன் கிளாஸ் என்பது, தற்போது என்ன விலையில் விமானம் கொள்முதல் செய்கிறோமோ அதேவிலையில் அடுத்த கட்டமாக நாம் வாங்கும் விமானங்களில் 50 சதவீதத்துக்கு அளிக்க வேண்டும். பாதுகாப்புத் துறை தளவாடங்கள் கொள்முதலில் இந்த பாலோ-ஆன் கிளாஸ் என்று கண்டிப்பாக இருக்க வேண்டும்.காங்கிரஸ் அரசில் இந்த வசதி செய்து இருந்தது. ஆனால், இதை பாஜக அரசு இதை ரத்து செய்துள்ளது. காங்கிரஸ் அரசின் ஒப்பந்தப்படி 126 விமானங்களுக்கான விலையும், அடுத்த கட்டமாக 63 விமானங்கள் வாங்கும் போது விலையை உயர்த்தக்கூடாது என்பதாகும். ஆக 189 விமானங்களுக்கானது.

விதிமுறை மீறல்கள்

இதன் மூலம் ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் பல்வேறு விதிமுறை மீறல்கள், வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளன. நிதி வல்லுநர்கள் கண்டறிந்தவகையில், அரசியல் நோக்கத்துக்காக தன்னிச்சையாக 520 கோடி யூரோவில் இருந்து 820 கோடி யூரோவாக உயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் லிமிடெட் நிறுவனத்துடன் ரஃபேல் விமானங்களுக்கான உதிரிபாகங்களை தயாரித்து வழங்க மோடி அரசு ஒப்பந்தம் செய்தது. இவ்வாறு வழங்கியிருப்பதன் மூலம் பாஜக தலைமையிலான அரசில் ஒட்டுண்ணி முதலாளித்துவம்(குரோனி கேபிடலிஸம்) பின்புலத்தில் இருப்பது தெரிகிறது. ‘ரஃபேல் ஒப்பந்தத்துக்கு, டஸ்ஸால்டு நிறுவனம் உத்தரவாதம் (‘சோவ்ரெய்ன் கேரன்டி’ என்று சொல்லப்படும் ‘இறையாண்மை ஒப்பந்தம்) கொடுக்கவில்லை. அதே நேரத்தில் ஒப்பந்தத்திற்கு ‘லெட்டர் ஆஃப் கம்ஃபர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது .

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்று திரும்ப திரும்ப கூறிவருகிறார். ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கேட்டு முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தை நாடிய போதும் வெற்றி கிடைக்கவில்லை.

ஆனால், போஃபர்ஸ் பீரங்கி ஊழலோடு ஒப்பிடும்போது, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் பண விவகாரங்கள் ஏதும் பின்புலத்தில் இருக்கிறதா என்பது இப்போதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. போஃபர்ஸ் ஊழலில் சுவிஸ் வங்கியில் பணம் பரிமாறப்பட்டதற்கான சாட்சி இருந்தது . ரஃபேல் ஊழலில் இன்னமும் நிறைய வெளிவர வேண்டி இருக்கிறது .

Courtesy : The Hindu

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்