சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட அதிகாரியின் மேல் நடவடிக்கை எடுக்க கோரியது மட்டுமல்லாது ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசராணையைத் துவக்கலாம் என்று நினைத்ததும், மோடி அரசு அதிகாலை 2 மணிக்கு முடிவு எடுத்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்ததற்கு காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

மோடிக்கு மிகவும் நெருக்கமானவரான ராகேஷ் அஸ்தானா கடந்த 1984-ஆம் ஆண்டு குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தவர். கடந்த 2016 டிசம்பரில் சிபிஐ இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

நிதி மோசடி தொடர்பாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீது சிபிஐ பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது. இந்த வழக்குகளை நீர்த்துப் போக செய்ய ராகேஷ் அஸ்தானாவுக்கு ரூ.3 கோடியை மொயின் குரேஷி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இணை செயலாளரின் பதவிக்கு மேலே எந்த அதிகாரியையும் கைது செய்ய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ஒப்புதல் தேவை என்பதால்,அவரை கைது செய்ய அரசிடம் அனுமதிக் கேட்டு அலோக் வர்மா கோரிக்கை வைத்திருந்த போதிலும், அனுமதி வழங்கப்படவில்லை.

அதுமட்டுமல்லாது டஸ்ஸால்ட் ஏவியேசனிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் , அனில் அம்பானிக்கு ஆதரவாக மோடி அரசு செயல்பட்டது குறித்து ஒரு ஆரம்ப விசாரணையைத் தொடங்குவதற்கு அலோக் வர்மா தன்னை தயார்படுத்தியிருக்கலாம் என்று பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

ஏப்ரல் 10, 2015-இல் அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஹோலன்டை பாரிஸில் சந்தித்துப் பேசிய இந்திய பிரதமர் மோடி, 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் 2016, செப்டம்பர் 23-இல் கையெழுத்தானது. இதில், விமானங்களை நீண்ட காலத்துக்கு பராமரிக்கும் பொறுப்பையும் பிரான்ஸ் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், பாதுகாப்புத்துறையின் கொள்முதல் கவுன்சிலின் (Defence Acquisition Council) ஆலோசனைகளும் இந்த ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன.

இந்த விமான கொள்முதலில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் படி விமானங்களின் உதிரிப் பாகங்களைத் தயாரிக்க இந்திய நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்காமல் , ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது .

இது குறித்து முன்னாள் பாஜக அமைச்சர்களான அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, மற்றும் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருக்கும் விவகாரம் தொடர்பாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை சந்தித்து பேசினார்கள் . இதனால் மோடி அரசு அதிருப்தி அடைந்திருந்தது.

அலோக் வர்மா புகாரை பெற்றுக் கொண்டது மட்டுமல்லாமல், யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரஷாந்த் பூஷன் ஆகியோர் சமர்பித்த ஊழல் நடந்ததற்கான ஆவணங்களின் நம்பகத்தன்மையைப் பற்றி பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேட்டிருந்தார். மேலும் ரஃபேல் ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரிக்கத் துவங்கியிருந்தார்.

அதற்கு முன்னர் ஆம் ஆத்மியின் ராஜ்யசாபா எம்பி அஜித் சிங் ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது அது பற்றி முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐயிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

மேலும் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவும் ரஃபேல் ஒப்பந்த ஆவணங்களை பெற்றுக் கொண்டதாகவும், ஆரம்ப விசாரணை மேற்கொள்ள தேவையானவற்றை செய்ததாகவும் நம்பதகுந்த வட்டாரங்கள் தி வைர் தளத்திடம் தெரிவித்திருக்கிறார்கள் .

ரஃபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகளைக் வெளிக்கொண்டுவர சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா காட்டிய ஆர்வம் , அச்சுறுத்தலாகவே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலால் பார்க்கப்பட்டது . அஜித் டோவல் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். தற்போது அலோக் வர்மாவின் நீக்கத்துக்கு மிகவும் முக்கிய தூண்டுகோலாக இருந்தவர் அஜித் டோவல்தான்.

சிபிஐ அதிகாரிகளுக்கு இடையே மோதல் இருந்ததால், இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக சிபிஐ இயக்குநராக நியமித்தது மோடி அரசு. அதிகாலை 2 மணிக்கு இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது . அலோக் வர்மாவும், ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

புதிய இயக்குநர் நாகேஸ்வர் ராவுக்கு பதவி உயர்வு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதனை பெற்றுக் கொண்டு அவரும் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில், அலோக் வர்மா, மற்றும் ராகேஷ் அஸ்தானாவின் அறைகளில் அதிகாலை 2 மணி அளவில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது .

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட சிபிஐ இயக்குநருக்கு முதல் வேலையே மோடிக்கு நெருக்கமானவராக இருந்த ராகேஷ் அஸ்தானாவை சிபிஐ தலைமையகத்தில் விசாரித்த அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என்பதே.

சிபிஐ இயக்குநர் மீது எடுத்த இந்த நடவடிக்கை மத்திய புலனாய்வு ஆணையத்தின் சொல்படியே எடுக்கப்பட்டது என்று மோடி அரசு கூறினாலும் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்படுகிறது. பிரபல வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷன் இது பற்றி உச்சநீதிமன்றத்தில் முறையிடப் போவதாகவும், மோடி அரசு இந்த விவகாரத்தில் விதிமுறைகளை மீறியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இரு அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்ததாக மோடி அரசு கூறினாலும் அலோக் வர்மாவும் ,ராகேஷ் அஸ்தானாவும் ஒன்றல்ல. லஞ்சம் மற்றும் மிரட்டி பணம் பெற்றதாக சட்டத்தின் படியே அலோக் வர்மா தனது ஜூனியர் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா மீது குற்றம் சாட்டினார்.

இந்த அதிகாரிகளின் மோதல்கள் சிபிஐயின் செயல்பாட்டில் மோடி அரசாங்கம் அரசியலை அதிகளவில் நுழைத்ததால் ஏற்பட்ட விளைவுதான். சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தனது செயல்பாடுகளில் அரசியல் தலையீட்டை விரும்பமாட்டார். ஆனால் சிறப்பு அதிகாரி ராகேஷ் அஸ்தானா இதற்கு எதிரானவர். குஜராத்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் ரூ.5,000 கோடி வங்கி நிதி மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் ராகேஷ் அஸ்தானா மீதும் புகார் எழுந்துள்ளது. இதை சுட்டிக் காட்டி அவரை சிபிஐ இணை இயக்குநராக நியமிக்க அலோக் வர்மா ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பல்வேறு வழக்குகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.

ராகேஷ் அஸ்தானா விஜய் மல்லையா வழக்கிலும் தலையிட்டதாக சிபிஐ மூத்த அதிகாரிகள் தி வைர் தளத்திடம் தெரிவித்திருக்கிறார்கள் .

பாஜக தலைவர் அமித் ஷா , பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோர் நேற்று மாலையிலிருந்தே ஆலோசனையில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடி அரசு அவசரமாக அதிகாலை 2 மணிக்கு எடுத்த இந்த நடவடிக்கை சிபிஐக்கு எதிரான கலகம் என்றுக் கூறப்படுகிறது. அதாவது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்துக் கொண்டிருப்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று சிபிஐ மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Courtesy : The Wire

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here