ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என இந்தியா தரப்பில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான டஸ்ஸால்ட் நிறுவனத்தின் ஆவணங்கள் தங்களிடம் இருக்கிறது என்று பிரான்ஸ் நாட்டின் சுதந்திரமான புலனாய்வு இதழான மீடியாபார்ட் (Mediapart) செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது என்றும் டஸ்ஸால்ட் நிறுவன ஆவணங்களில் இந்த தகவல் உள்ளதாக பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியா பார்ட் கூறியிருக்கிறது . வேறு வாய்ப்புகள் எதுவும் அளிக்கப்படவில்லை. டஸ்ஸால்ட் நிறுவனத்தின் ஆவணங்களை புலனாய்வு செய்ததில் இந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என அந்த இதழ் கூறியுள்ளது.

டஸ்ஸால்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான டோய்க் செகலேன், கடந்த 2017, மே 11 அன்று, தனக்குக் கீழ் பணி புரிபவர்களிடம், ‘ரிலையன்ஸ் நிறுவனத்தை ரஃபேல் ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்வது கட்டாயமாகும்’ என்று அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த அறிக்கையை மீடியாபார்ட் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை இரவு பிரான்சிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். டஸ்ஸால்ட் ஏவியேஷனில் இருந்து 36 ரஃபேல் ஜெட் விமானங்களை கொள்முதல் செய்வதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என்று மோடி அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

பிரான்ஸின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக்காட்டிலும் பல மடங்கு விலையை அதிகமாக பாஜக அரசு வழங்க உள்ளது என்றும், மத்திய அரசின் ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்ததாக புகார் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்