ரஃபேல் விவகாரத்தில் நடந்த ஊழலை மறைக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முரண்பட்ட தகவல்களை கூறி வருகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலர் முகுல் வாஸ்னிக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய முகுல் வாஸ்னிக் ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து முரண்பட்ட தகவல்களையே கூறி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, நாட்டின் பாதுகாப்பு, இருநாட்டு நல்லுறவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ரஃபேல் விமானங்களின் விலையை வெளியில் சொல்ல முடியாது என்று கூறினார். ஆனால், அதன் பிறகு அவரே விலையை விரைவில் அறிவிப்போம் என்றார்.

தற்போது, காங்கிரஸ் ஆட்சியில் வாங்க திட்டமிட்டிருந்ததைக் காட்டிலும் 9 சதவீதம் குறைந்த விலைக்கே விமானங்களை வாங்குகிறோம் என்று கூறுகிறார். இதுபோல் நேரத்துக்கு நேரம் மாற்றி மாற்றிப் பேசி வரும் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவிக்குத் தகுதியானவர் இல்லை என்றும் கூறினார்.

காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தின்படி, 18 விமானங்கள் மட்டுமே முழுமையாக தயாரிக்கப்பட்ட நிலையில் நமக்குக் கிடைக்கும். மற்ற 108 விமானங்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்பமும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்படும். உள்ளூரில் உள்ள நிறுவனங்களிடம் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு இந்த விமானங்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்படும்விதமாக இருந்தது.

ஆனால், மோடி அரசு செய்துள்ள ஒப்பந்தத்தில் தொழில்நுட்பம் மத்திய அரசு நிறுவனத்துக்கு கிடைக்காது. மேலும், உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கான ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தமும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் விமானங்களின் விலை ஏன் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது, இந்த விமானங்களை வாங்கும் முடிவை யார் எடுத்தது, அமைச்சரவையைக் கூட்டாமல் பிரதமரே எப்படி தன்னிச்சையாக முடிவு எடுத்தார், வெறும் 36 விமானங்கள் மட்டுமே நாட்டைப் பாதுகாக்கப் போதுமானதா என்பது போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

எனவேதான், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

பிரதமர் மோடி தலைமையிலான இந்த ஆட்சியில் நடைபெற்றுள்ள ரஃபேல் விமான ஊழல்தான் சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய ஊழலாக உள்ளது. பாஜகவின் இந்த ஊழலை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குக்கும் காங்கிரஸ் கட்சி எடுத்துச் சென்று அவர்களின் முகத்திரையைக் கிழிக்கும். ஊழலுக்கு எதிராகப் போராடி வருவதாக தினமும் கூறி வரும் மோடியே இத்தனை பெரிய ஊழலை செய்திருக்கிறார். ரஃபேல் விவகாரம் நடுநிலையுடன் விசாரிக்கப்பட்டால், மோடி ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார்.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here