சர்வாதிகாரம்‌, மதரீதியிலான வெறுப்புணர்வைப்‌ பரப்புவது, இனப்பகையை நிலைத்திருக்க செய்வது, காவல்துறையின்‌ அடக்குமுறை, பாலியல்‌ வன்முறைகள்‌ ஆகிய செயல்பாடுகளின்‌ கலவைதான்‌ யோகி ஆதித்யநாத்தின்‌ நிர்வாக ஆட்சிமுறையாகும்‌. யோகி ஆட்சியில்  உத்தர பிரதேசம்‌ ஏழை மாநிலமாக மாறிவிட்டது, இம்மாநிலத்தின்‌ கடன்‌ சுமை 40 சதவீதம்‌ அதிகரித்துவிட்டது என்று காங்கிரஸ்‌ மூத்த தலைவர்‌ ப.சிதம்பரம்‌ குற்றம்சாட்டியுள்ளார்‌.

லக்னெளவில்‌ இருக்கும் உத்தர பிரதேச காங்கிரஸ்‌ தலைமையகத்தில்‌ அவர்‌  செய்தியாளர்களிடம்‌  கூறியதாவது:

 உத்தர பிரதேசத்தின்‌ மொத்த கடன்‌ ரூ.6,62,891 கோடி ஆகும்‌.

இதையும் படியுங்கள் : 👇

இதில்‌ 40 சதவீத கடன்‌ சுமை யோகி ஆதித்யநாத்‌ ஆட்சியில்‌ அதிகரித்துள்ளது. நிதி ஆயோக்‌ வெளியிட்ட தரவரிசை பட்டியலின்படி, உத்தர பிரதேசத்தில்‌ 37.9 சதவீத மக்கள்‌ ஏழைகளாக உள்ளனர்‌. உழைப்புக்கு பெயர்‌ பெற்ற இம்மாநிலத்தில்‌ பெரும்பாலானோர்‌ தொடர்ந்து ஏழ்மை நிலையிலேயே உள்ளனர்‌.

நாட்டில்‌ வேலையில்லா திண்டாட்டம்‌ அதிகமுள்ள மாநிலங்களில்‌ உத்தர பிரதேசமும்‌ ஒன்றாக உள்ளது. கடந்த 2018ஆம்‌ ஆண்டிலிருந்து 29 வயது வரையிலான இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம்‌ இரட்டை விகிதத்தில்‌ இருந்து வருகிறது. இதனால்‌, இளைஞர்கள்‌ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்‌. உத்தர பிரதேசத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு வேலைதேடி சென்றவர்களின்‌ எண்ணிக்கை 1.2 கோடியாகும்‌.

மாநில மக்கள்தொகையில்‌ 16-இல்‌ ஒருவர்‌ வேலைதேடி வெளிமாநிலங்களுக்கு செல்லும்‌ நிலை உள்ளது. அரசுத்‌ துறைகளில்‌ ஏராளமான பணியிடங்கள்‌ காலியாக உள்ளன. ஆனால்‌, அவற்றை நிரப்ப அரசிடம்‌ பணம்‌ இல்லை. மாநிலத்தில்‌ ஆசிரியர்கள்‌- மாணவர்கள்‌ விகிதம்‌, மருத்துவர்கள்‌-பொதுமக்கள்‌ விகிதம்‌ ஆகியவற்றில்‌ பெரும்‌ இடைவெளி நிலவுகிறது. லட்சம்‌ பேருக்கு 13 படுக்கைகள்‌ என்ற அளவில்தான்‌ மருத்துவ வசதி உள்ளது. பச்சிளம்‌ குழந்தைகள்‌ இறப்பு விகிதம்‌ தேசிய சராசரியைவிட உத்தர பிரதேசத்தில்‌ அதிகமாக இருக்கிறது.

கொள்கை, அணுகுமுறை, பார்வை, அரசியல்‌ மாண்புகள்‌ என அனைத்திலும்‌ மாற்றம்‌ நிறைந்த ஆட்சிதான்‌ உத்தர பிரதேசத்துக்கு தேவை. அந்த மாற்றம்‌ வர வேண்டுமெனில்‌ காங்கிரஸுக்கு மக்கள்‌ ஆதரவு தர வேண்டும்‌. காங்கிரஸ்‌ வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்‌ என்று ப.சிதம்பரம்‌ கூறினார்‌.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here