கன்னட இயக்குநர் பவன் குமார் கன்னடத்தில் இயக்கிய யு டர்ன் படத்தை அவரே தமிழில் ரீமேக் செய்துள்ளார். இவர் கன்னட லூசியா படத்தை இயக்கியவர். அப்படம் உலக அளவில் கவனம் பெற்றது. கிரவுட் பண்டிங்கில் எடுக்கப்பட்ட லூசியாவின் வெற்றி, கிரவுட் பண்டிங் குறித்த விழிப்புணர்வுக்கு மையப்புள்ளியாக அமைந்தது.

கன்னட யு டர்னிலிருந்து அதிக வித்தியாசமில்லாமல் தமிழ் ரீமேக்கை பவன் குமார் எடுத்துள்ளார். ஆங்கில பத்திரிகையில் இன்டெர்ன் ஆக பயிற்சி எடுக்கும் ரக்ஷனா (சமந்தா) வேளச்சேரி மேம்பாலத்தில் நடக்கும் விபத்துகள் குறித்து ஒரு ஸ்டோரி செய்ய நினைக்கிறார். பாலத்தில் யு டர்ன் எடுப்பவர்கள் கல்லை நகர்த்திவிட்டு செல்வதால் இந்த விபத்துகள் நடக்கின்றன. ரக்ஷனாவின் இந்த முயற்சி அவரை கொலை குற்றவாளியாக போலீசால் சந்தேகப்பட வைக்கிறது. யார் கொல்லப்படுகிறார்கள், கொலைகள் எதற்காக நடக்கின்றன என்ற ரக்ஷனாவின் தேடல் பல மர்மங்களை விலக்குகிறது.

மெதுவாக ஆர்ப்பாட்டமும் இல்லாமல் படத்தைத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக மர்மத்துக்குள் பார்வையாளனை சிக்க வைக்கும் பவன் குமாரின் திரைக்கதை முதல்பாதியில் நமது அட்ரினலை எகிற வைக்கிறது. சமந்தாவின் ஹேர்ஸ்டைல், காஸ்ட்யூம், நடிப்பு அனைத்தும் இணைந்து ஒரு இளம் பத்திரிகையாளரை கண்முன் நிறுத்துகின்றன. அவர்தான் இந்தப் படத்தின் தூண். சரியாக தாங்கிப் பிடிக்கிறார். போலீஸ் விசாரணை முடிந்து வீடு திரும்புகிறவர் அழும் காட்சியில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

போலீஸ் விசாரணை, அவர்களின் நடைமுறைகள் யதார்த்தத்துக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. போலீஸ் அதிகாரியாக வரும் ஆதிக்கு ரக்ஷனா நிரபராதி என்பதால் ஏற்படும் சாப்ட் கார்னரும், அதனால் ஏற்படும் கரிசனமும் விசாரணையை அவர் தொடர்ந்து நடத்துவதற்கு உந்துதலாக இருக்கிறது.

க்ரைம் ரிப்போர்டராக ராகுல் ரவீந்திரன். சமந்தாவுக்கு தன் மீதுள்ள க்ரஷை அவர் புரிந்து கொள்ளாமல் இருப்பதும், புரிந்த பிறகு நெருங்கி வருவதுமான காட்சிகள் கிளிஷே இல்லாமல் யதார்த்தமாக அமைந்துள்ளன. இந்தக் காட்சிகளுக்கு உயிரோட்டமாக அமைகின்றன சமந்தாவின் நடிப்பும், முகபாவனைகளும்.

ஆடுகளம் நரேன், சித்திரம் பேசுதடி நரேன், பூமிகா, சிறுமி ஆர்ணா என அனைவரும் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள். மேம்பாலத்தில் வசிக்கும் குள்ள மனிதரை வசனமேயில்லாமல் பயன்படுத்தியிருக்கும் விதம் சிறப்பு.

ஒரு நல்ல த்ரில்லருக்கு பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் எப்படி அமைய வேண்டும் என்பதை யு டர்னிலிருந்து கற்றுக் கொள்ளலாம். இந்த மூன்று தொழில்நுட்பக் கலைஞர்களும் படத்தின் ஓர்மை சிதையாமல் படத்தை நகர்த்துகிறார்கள். மனிதர்களைப் போலவே இறந்தவர்கள் கண்ணுக்கு தெரிவதும், அவர்களை தொட்டு தடவி பேச முடிவதும் சின்ன விலகலை ஏற்படுத்துகிறது. முக்கியமாக படம் த்ரில்லரிலிருந்து ஹாரருக்கு மாறும்போது ஒரு சின்ன தொய்வை அனுபவப்படுகிறோம். ஆனால், கிளைமாக்ஸ் ட்விஸ்ட் அதனை சரி செய்துவிடுகிறது.

நமது அவசரத்துக்காக செய்கிற சின்ன விதிமீறல் சிலருடைய வாழ்க்கையை பறித்துவிடுகிற அவலத்தை வலிமையாக முன்வைக்கிற நன்றாக எழுதப்பட்ட, எடுக்கப்பட்ட என்கேஜிங் த்ரில்லர்… யு டர்ன். நம்பிப் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்