யுவராஜ் சொன்னதும் சொல்லாததும்

0
2196

வெள்ளைச் சட்டை, பொலிவான முகம், கச்சிதமாக நறுக்கப்பட்ட மீசை என சினிமா கதாநாயகனைப் போல கோகுல்ராஜ் கொலை வழக்கின் முதன்மைக் குற்றவாளியாக குறிப்பிடப்படும் யுவராஜ், புதிய தலைமுறை செய்தியாளருக்குப் பேட்டியளிக்கிறார். காடு, மலையாக ஓடி மறைந்து பல நாள் பட்டினிக் கிடந்த வீரப்பனைப் போல் தோல் போர்த்திய தேகத்துடன் அவர் இல்லை. ‘வளமான’ தலைமறைவு வாழ்க்கை வாழ்வதையே அவருடைய தோற்றம் காட்டுகிறது.

விஷ்ணுப் பிரியா மரணம் தொடர்பான வழக்கில் அவ்வப்போது ஆடியோ வெளியிட்டு, மேலதிகாரிகள் கொடுத்த அழுத்தமே விஷ்ணுப் பிரியாவைத் தற்கொலைக்குத் தூண்டியது என்று பேசினார் யுவராஜ். கோகுல்ராஜ் கொலை வழக்கில் சரணடைய சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் யுவராஜ் சரணடையவில்லை. அதைத் தொடர்ந்து அவரைத் தேட மூன்று தனிப்படைகள் அமைத்திருப்பதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்திருக்கிறார் யுவராஜ். புதிய தலைமுறை மட்டுமல்ல, கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றச்சாட்டு எழுந்தவுடன் தலைமறைவான யுவராஜின் பேட்டி இணைய ஊடகங்களிலும்கூட வெளியாகியிருக்கிறது. ஊடகங்களால் தொலைபேசியிலோ, நேரடியாகவோ அணுக முடிந்த யுவராஜை, தமிழகக் காவல்துறையால் பிடிக்கமுடியவில்லை என்றால் காவல்துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? காவல்துறை யாருக்காக செயல்படுகிறது என்கிற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகிறது. சாதி பேதம் பார்ப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று சட்டம் போடும் அரசு, ஒருபுறம் யுவராஜ் போன்ற சாதீயவாதிகளைக் காப்பாற்ற இயங்குவது ஜனநாயகத்துக்கே அவமானம்.

யுவராஜ் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் என்ன பேசியிருக்கிறார் என்பதை சுருக்கமாகத் தருகிறோம்…

புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த யுவராஜ்
புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த யுவராஜ்

“நானும் விஷ்ணுப் பிரியாவும் பேசியதாக வெளியாகியிருக்கும் ஆடியோ, விஷ்ணுப் பிரியா இறப்பதற்கு 20, 25 தினங்களுக்கு முன்பு பேசியது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியான என்னை கைது செய்ய எஸ்பி தரப்பில் இருந்து பல்வேறு நெருக்கடிகளை விஷ்ணுப் பிரியா சந்திச்சாங்க. அவங்க பாதிக்கப்படறாங்கன்னு தெரிஞ்ச பிறகுதான் நான் கூப்பிட்டுப் பேசினேன். இந்த ஆடியோவை நான் தான் வெளியிட்டேன். நான் தலைமறைவு ஆனவுடன் எனக்கு வரும் எல்லா அழைப்புகளையும் பதிவு செய்கிறேன்.

கோகுல்ராஜ் வழக்குப் பற்றி எனக்குக் கவலைக் கிடையாது. அந்த வழக்கு முறையாக நடத்தப்படலை. முறையாக நடத்த அவங்க விடலை. விஷ்ணுப் பிரிவாவின் நண்பர் மாளவியா, தோழி மகேஸ்வரி இதைப் பத்தி பேசியிருக்காங்க. எஸ்பி-யைக் காப்பாற்றணும்னுதான் இங்க வேலை நடக்குது. நான் விஷ்ணுப் பிரியாவைத் தவிர எந்த அதிகாரிக்கிட்டயும் பேசலை(விஷ்ணுப் பிரியாவும் யுவராஜும் பேசிய ஆடியோவில் எடுத்த எடுப்பிலேயே ‘என்ன மேடம் என்னைத் தெரியலைன்னு சொல்றீங்க, நான் தான் யுவராஜ். என் நம்பர்தான் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற அத்தனை பேருக்குமே தெரியுமே?’ என்கிறார்)

எங்கிட்ட பேசும்போது எஸ்பி நல்லவருன்னு அவங்க சொல்லியிருக்காங்க. மேலதிகாரி பற்றி யாருமே தப்பா சொல்லமாட்டாங்க. தேடப்படும் குற்றவாளிக்கிட்ட அவங்க எப்படி மேலதிகாரி பத்தி தப்பா பேசுவாங்க? அதோடு அவங்க இன்னொரு விஷயத்தையும் சொன்னாங்க. உங்க மேல எஸ்பிக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. எஸ்பி, கோகுல்ராஜ் மரணத்தை கொலை வழக்கா பதிவு பண்ணவேமாட்டேன்னு சொன்னார்னு விஷ்ணுப் பிரியா சொன்னாங்க.

காவல்துறைக்கும் மக்களுக்கும் சொல்லிக்க விரும்பறது என்னன்னா… கோகுல்ராஜ் வழக்கு முறையா நடத்தப்படலை. ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் பொதுமக்கள் முன்னணியில் விவாதம் நடத்தட்டும். அவங்க தரப்பைப் பேச ஒன்பது மணிநேரம் எடுத்துக்கட்டும், எனக்கு ஒரு மணி நேரம் கொடுத்தால் போதும். அதுக்கு முன்னால பிரமாணப் பத்திரம் கொடுக்கணும். என் குற்றத்தை நீரூபிச்சா மரண தண்டனையா இருந்தாக்கூட ஏத்துக்கறேன். காவல் தரப்பில் தவறுன்னு நிரூபிக்கப்பட்டா அவங்க வேலையை விட்டேப் போயிடணும்.

கோகுல்ராஜ் வழக்கு முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு, விஷ்ணுப் பிரியா வழக்கோட இது பின்னிப் பிணைந்தது. யார் குற்றவாளின்னு எனக்குத் தெரியாது. ஆடியோவை ஏன் வெளியேடுறேன்னா, கோகுல்ராஜ் வழக்கு தவறாக வழிநடத்தப்பட்டதால்தான். இறுதியாகப் பேசிய ஆடியோ வெளியான பிறகே என்னைப் பிடிக்க மூணு தனிப்படை அமைச்சிருக்காங்க (மீசையைத் தடவி விட்டுச் சிரிக்கிறார்).

வீட்டுக்கு சம்மன் அனுப்பியிருந்தாங்க, பார்த்தேன்.(என்று சொல்லிவிட்டு நான் வாட்ஸ் அப்பில் செய்தி பார்த்தேன், மாலை மலரில் செய்தி பார்த்தேன் என மழுப்புகிறார்) ஆறு ஆடியோக்கள் இதுவரைக்கும் வெளியிட்டிருக்கேன். (சொல்லாதது- என்னைப் பிடிக்கமுடியலை)

பிரேதப் பரிசோதனையில் கொலைன்னு முடிவான பின் வழக்குப் போட்டிருப்பாங்க. அதுக்குள்ள இந்த இயக்கங்கள் போராடுறாங்க. கோகுல்ராஜ் வழக்கு திசைமாறிப் போக தாழ்த்தப்ப்பட்ட இயக்கங்களே காரணம்.

என்மீது வழக்கு பதிவு செய்ததற்கான முகாந்திரம் இருக்கிறது. கோயில் சிசிடிவி கேமராவில் இருந்து கைப்பற்றப்பட்ட ஃபுட் டேஜில் நான் இருந்தேன். அந்தப் பெண்ணும்கூட சொல்லியிருக்கிறார். தலித் இயக்கங்களின் போராட்டத்தைக் காட்டி காட்டியே விஷ்ணுப் பிரியாவை அதிகாரிகள் நிர்பந்தித்தனர். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ள அத்தனை பேரும் சாட்சிகள்தான், கொலையாளிகள் அல்ல. இதை என்னால் நிரூபிக்க முடியும்.

தலைமறைவானது என்னைக் காப்பாத்திக்கறதுக்கு, என்னைச் சார்ந்தவர்களை காப்பாத்தறதுக்கு. தவறா ஜோடிச்ச வழக்குன்னு நிரூபிக்கவே தலைமறைவா இருக்கேன். நான் பிடிபட்டிருந்த என்னைக் கொலைகூட செய்திருக்கலாம். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதைவிட சட்டவிரோதமா என்னை என்ன செய்யலாம்னு காவல்துறை சிந்திக்குது. அதற்கு நானும் என்னைச் சார்ந்தவர்களும்தான் சாட்சி. அதிகாரிகள் சட்டப்படி எதுவும் செய்யலை. நடுநிலை வாதிகள் என்பக்கம் நியாயம் இருப்பதாகத்தான் சொல்வார்கள்.

என்னுடைய இயக்கத்தை முடக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கிடையேயான பழிவாங்களை என் மூலம் தீர்த்துக்கொள்கிறார்கள்.

கோகுல்ராஜுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே இருந்தது நட்புதான். லவ்வெல்லாம் கிடையாது. அந்தப் பையன் நாலஞ்சுப் பொண்ணுங்களோடு பழகியிருக்கான். இரண்டு, மூணு பேருக்கிட்ட விசாரிச்சிட்டு ஆரம்பத்திலிருந்து தவறான பாதைக்கு கோகுல்ராஜ் கொலை வழக்கை கொண்டு போயிட்டாங்க.”

யுவராஜ் சொல்லியிருக்கும் விஷயங்களில் நமக்கு எழும் கேள்விகள்…

* கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அப்படியெனில் அவரைக் கொன்றது யார்?

* கோகுல்ராஜை மிரட்டியது மட்டும்தான் யுவராஜ் செய்த குற்றமா?

* கோகுல்ராஜ் ஐந்து பெண்களுடன் பேசினால், இவர்களுக்கு என்ன பிரச்சினை?

* திருச்செங்கோடு எஸ்பி செந்தில்குமார் யாரைக் காப்பாற்றுகிறார்?

* விஷ்ணுப் பிரியா மேல் யுவராஜுக்கு அப்படியென்ன அக்கறை?

* யுவராஜுக்கு அவருடைய குடும்பம் மட்டுமல்ல, ஒரு சமூகமே உதவி வருவது தெரிகிறது. எனில் அந்த சமூகத்தின் பார்வை எப்படிப்பட்டது?

இந்தக் கேள்விகளுக்கான பதிலை யுவராஜ் நேரடியாக இப்போது.காமுக்கு அனுப்பி வைப்பார் என எதிர்ப்பார்க்கிறோம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்