(செப்டம்பர் 7,2015இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)

தமிழ்நாட்டில் இவரைப் “புதிய தலைமுறை சீனிவாசன்” என்று சொன்னால்தான் தெரியும்; புதிய தலைமுறை தொலைக்காட்சியைத் தொடங்கி வைத்து பெரும் வெற்றிபெறச் செய்தவர் என்பதுதான் தமிழ்நாட்டில் இவருக்கான அடையாளம். தமிழராய் இருந்தபோதும் 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்ததில்லை. நியூ ஜெனரேஷன் மீடியா கார்ப்பரேஷனின் ஆர்.பி.சத்தியநாராயணா அழைத்ததன் பேரில் 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னைக்கு வந்தார்; பிழையில்லாத தமிழ், தமிழ் உச்சரிப்புப் பயிற்சி, மக்களை மையப்படுத்திய ஊடகவியல் ஆகியவற்றில் செய்தியாளர்களுக்கு எட்டு மாத காலப் பயிற்சியை வழங்க ஏற்பாடு செய்தார் சீனிவாசன். 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே மற்ற செய்தி சேனல்களை ஓரங்கட்டி மக்களின் அபிமானத்தைப் பெற்றது. இதனைச் சாதித்த சீனிவாசன் இப்போது புதிய தலைமுறையின் ஆலோசகராக வழிகாட்டி வருகிறார்.

போபால் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளநிலைப் பட்டப்படிப்பு படித்தவாறே 1980இல் ஆரம்பித்தது, இவருடைய ஊடகப் பயணம். 1984இல் பத்தாயிரம் பேர் உயிரிழந்த போபால் நச்சு வாயு சம்பவச் செய்திகளைச் சேகரித்துள்ளார்; 1986இல் டெல்லியில் ’ஃப்ரீ ப்ரெஸ் ஜர்னலில்’ செய்தியாளராகச் சேர்ந்தார்; 1987இல் எம்.ஜே.அக்பரின் ‘தி டெலிகிராப்’பில் இணைந்து நிதி, வணிகம், தொழில், ரயில்வே, பாதுகாப்பு ஆகியவை குறித்து செய்தி சேகரிப்பவராகப் பணியாற்றினார். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம் ஆகிய கட்சிகளையும் நாடாளுமன்றத்தையும் பற்றிய செய்திகளை ‘தி டெலிகிராப்’புக்காக வழங்கியுள்ளார். பனிப்போரின் முடிவு, இந்து வலதுசாரி எழுச்சி, கூட்டணி ஆட்சியின் மலர்ச்சி, இந்தியப் பொருளாதாரத்தின் தாராளமயமாக்கல் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கிற பெரும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

தி எகனாமிக் டைம்ஸின் செய்தியாளராக 1994இல் மத்திய அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகளைப் பற்றி நிறையவே எழுதியிருக்கிறார்; பிரதமர் அலுவலகச் செய்திகளையும் இதே காலகட்டத்தில் சேகரித்திருக்கிறார். இருபதாண்டுகளுக்கு முன்பு 1995 ஆம் ஆண்டு ஏப்ரலில், இவருடைய தொலைக்காட்சிப் பயணம் தொடங்கியது. ‘ஏசியா பிஸினஸ் நியூஸ் இந்தியா’ (ABNi) என்ற ஆசியாவின் முதல் முழுமையான வணிக செய்தி சேனலில் இணைந்தார். இப்போது இந்தச் சேனல் சிஎன்பிசி டிவி 18 என்று அறியப்படுகிறது. இந்தச் சேனலில் எடிட்டராக, தினமும் பிரைம் டைமுக்கு இந்தியா பிசினஸ் டே என்ற நிகழ்ச்சிக்கான முதன்மையான வணிகச் செய்திகளை அடையாளம் கண்டு ஒருங்கிணைத்தார். 1999இல் ஈநாடு தொலைக்காட்சிக்கான டெல்லி அலுவலகத்தை உருவாக்கித் தந்தார். 2000ஆம் ஆண்டில் இந்தியா டுடே குழுமத்திற்காக ஆஜ் தக் இந்தி செய்தி சேனலைத் தொடங்கிய குழுவில் முக்கியப் பொறுப்பு வகித்தார்; 2003ஆம் ஆண்டில் இதே குழுமத்திற்காக ஹெட்லைன்ஸ் டுடே என்கிற ஆங்கில செய்தி டிவி சேனலைத் தொடங்கித் தந்தார்.

சீனிவாசனின் டிஜிட்டல் ஊடகப் பயணம் 2009இல் இந்தியா அப்ராட் நியூஸ் சர்வீஸ் (ஐஏஎன்எஸ்) என்ற செய்தி நிறுவனத்துக்காக ஆரம்பமானது. இந்த நிறுவனத்தின் புதிய ஊடக முயற்சிகளின் தலைவராக, இணையவழி செய்திப் பணியில் தடம் பதித்தார். ”ஊடக வடிவங்கள் மாறலாம்; ஆனால் உள்ளடக்கமே எப்போதும் ஆட்சி செலுத்தும்,” என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறார். “இப்போது” செல்பேசிச் செயலியின் தொடக்க விழாவில் பேசிய சீனிவாசன் “டிஜிட்டல் யுகத்தில் ஊடகங்களின் உடமை என்பது ஜனநாயகப்பட்டிருக்கிறது. மக்களின் ஊடகங்களுக்கு இது மிகவும் சரியான தருணம்,” என்று சொன்னார். தன்னை ஒரு ஸ்டார்ட்-அப் ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லும் சீனிவாசன் ”இப்போது” டிஜிட்டல் ஊடக நிறுவனத்தின் இயக்குநர். இன்று முதல் “இப்போது” வாசகர்களுக்காகத் தொடர்ந்து எழுதுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here