இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று கடந்த 4 ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட 41 அரசு முறைப் பயணங்களில் 52 நாடுகளுக்கு சென்று உலக நாடுகளுடனான உறவை பலப்படுத்தியுள்ளார்.

பொதுவாகவே பிரதமர் நரேந்திர மோடியின் சுற்றுப் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் விமரிசனங்கள் முன் வைக்கப்படுவதும், எங்கப்பா, பிரதமர் நாட்டில் இருந்தால் தானே நாம் படும் கஷ்டம் அவருக்குத் தெரியும் என்று பாமரர்கள் புலம்புவதும் வாடிக்கைதான்.

சரி அவர் அப்படி எத்தனை நாடுகளுக்குத்தான் சென்றுவிட்டார்? எவ்வளவுதான் செலவாகிவிட்டது என்று அங்கலாய்ப்பவர்களுக்காகவே, சமூக ஆர்வலர் பிமப்பா கதத், பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமரின் சுற்றுப் பயணங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதிலை அவர் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் மூலம் துல்லியமான புள்ளி விவரங்கள் தெரிய வந்துள்ளது.

Screen Shot 2018-06-28 at 1.39.37 PM

சரி சுற்றி வளைக்க வேண்டாம்.. நேரடியாக விஷயத்துக்கு வருவோம்.

பிரதமர் கடந்த 48 மாதங்களில் 41 முறை அரசு முறைப் பயணமாக உலகில் உள்ள 52 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதாவது அவர் தனது பிரதமர் பதவிக் காலத்தில் 165 நாட்களை வெளிநாடுகளில் சுற்றுப் பயணமாகவே கழித்துள்ளார். இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.355 கோடி செலவிடப்பட்டுள்ளது.

அவரது சுற்றுப் பயணங்களிலேயே 9 நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரான்ஸ், ஜெர்மனி, கனடா நாடுகளுக்கு கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி முதல் 15 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப் பயணத்துக்குத்தான் அதிகபட்சமாக ரூ.31,25,78,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதை 31 கோடியே 25 லட்சத்து 78 ஆயிரம் என்று கூறலாம்.

அதே போல, கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 15 – 16ம் தேதிகளில் பூடானுக்கு சென்ற பிரதமரின் பயணத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.2,45,27,465 செலவிடப்பட்டுள்ளது.

இது பற்றி கதத் கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முனபு கர்நாடக முதல்வரின் சுற்றுப் பயணம் குறித்து கேட்டிருந்தேன். சமீபத்தில் மோடியின் சுற்றுப் பயணங்கள் அதிகம் விமரிசனத்துக்கு உள்ளாவதால் அதுபற்றி அறிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டு ஆர்டிஐ மூலம் விண்ணப்பித்தேன். ஆனால், சுற்றுப் பயணம் குறித்த தகவல்களை அறிந்ததும் அதிர்ந்து போனேன் என்கிறார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பிரதமர் மோடி உள்நாட்டு சுற்றுப் பயணங்கள் மற்றும் அப்போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புச் செலவினங்கள் குறித்து இதில் தெரிவிக்கப்படவில்லை. மேலும், பிரதமருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஆன செலவுகள் குறித்து நான் ஆர்டிஐ மூலம் கேட்டதற்கு, பாதுகாப்புக் காரணங்களுக்காக அது ஆர்டிஐயின் கீழ் வராது என்று விண்ணப்பத்தை நிராகரித்து விட்டனர் என்கிறார்.

முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான் ஆர்டிஐக்கு விண்ணப்பித்தேன். தகவல் கிடைத்த பிறகே இது பொதுமக்களுக்கும் தெரிய வேண்டும் என்று நினைத்து பகிர்ந்து கொள்கிறேன் என்ற கதத், இந்த சுற்றுப் பயணங்கள் மூலமாக இந்தியா அடைந்த பொருளாதார நன்மைகள் குறித்து மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Courtesy : Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here