ம.சிங்காரவேலர் சமூக நீதிக்காகவும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தலைவர்.

கதர் உடை அணிந்து, காந்தி குல்லாய் போட்டு, கழுத்தில் நீளமான சிவப்புத் துண்டைச் சுற்றி இருக்கும் ம.சிங்காரவேலரின் (பிப்ரவரி 18, 1860 – பிப்ரவரி 11, 1946) படம் அட்டையில் இருக்கிறது. இதுவரை நமக்குப் பழக்கமான முண்டாசு கட்டிய சிங்காரவேலரிலிருந்து வித்தியாசமான படம் இது. ம.சிங்காரவேலர் ஆற்றிய கான்பூர் பொதுவுடமை மாநாட்டுத் தலைமை உரையின் (1925) நூல் வடிவத்தை வழக்குரைஞர் லிங்கன் பதிப்பித்துள்ளார். இந்தப் புத்தகத்தின் அட்டைதான் ம.சிங்காரவேலரைப் பற்றிய புதிய பிம்பத்தை நம் கண் முன் நிறுத்துகிறது. இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமையன்று (பிப்ரவரி 22, 2020) சென்னை நிருபர்கள் சங்கத்தின் அரங்கில் நடைபெற்றது. தென் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று பெருமையுடன் அறியப்படும் ம.சிங்காரவேலரின் பெயரில்தான் சென்னை மாவட்ட ஆட்சியரின் மாளிகை அறியப்படுகிறது. சிங்காரவேலர்தான் சென்னை நகருக்கு முதல் பாதாளச் சாக்கடை அமைப்பதற்கான வரைபடத்தையே தன் கையால் வரைந்து தந்திருக்கிறார். சிங்காரவேலர் சென்னையில் திறந்து கிடக்கும் சாக்கடைகளால் நோய் பரவும் அபாயமுள்ளதை உணர்த்தி, மூடப்பட்ட பாதாளச் சாக்கடைகளை அறிவுறுத்தியுள்ளார். லண்டன் போன்ற நகரங்களுக்குச் சென்ற அனுபவத்திலிருந்து அவர் இதனைச் செய்திருக்கலாம். சென்னை நகர சபையின் உறுப்பினராக இருந்த காலத்தில் இந்தப் படத்தை அவர் வரைந்து தந்திருக்கிறார். இந்தத் தகவலை நூல் வெளியீட்டுக்குத் தலைமையேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் பதிவு செய்தார். 1925இல் ஆற்றப்பட்ட இந்த உரை தீர்க்கதரிசனமானது என்பதை இளந்தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் தனது வக்கீல்அங்கியைக் கொளுத்திய ம.சிங்காரவேலரின் தியாகத்தைக் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நினைவுகூர்ந்தார். கோவிலுக்குள் எல்லோரையும் கொண்டு செல்லுகிற, தெருவுக்குள் எல்லோரையும் இட்டுச் செல்கிற, குளத்தில் எல்லோரையும் தண்ணீர் எடுக்க வைக்கிற சமூகத்தைக் கட்டுவதற்கு முன்னணியில் நின்ற மகான் சிங்காரவேலர் என்றார் கஜேந்திரபாபு.  

தமிழ்நாட்டில் நடைமுறையிலுள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்கான சத்துணவுத் திட்டத்தின் முன்னோடி ம.சிங்காரவேலர் என்பதை மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி சுட்டிக் காட்டினார். ம.சிங்காரவேலரின் ஆலோசனையின் பெயரில் சர் பிட்டி.தியாகராயர் சென்னையிலுள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்குச் சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தினார். மு.வீரபாண்டியன் பேசும்போது சென்னை நகரத்தின் செருப்பு தைக்கும் தொழிலாளிகளையும் குறைச் சாப்பாடு (இரண்டாம் சாப்பாடு) விற்பவர்களையும் ஒருங்கிணைத்து அமைப்பாக்குவதற்கு ம.சிங்காரவேலர் மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றிக் குறிப்பிட்டார். பெரும் செல்வந்தராக இருந்த ம.சிங்காரவேலர் ஏழை, எளிய மக்கள் கடனின் பெயரால், வட்டியின் பெயரால் துன்புறுத்தப்பட்டபோது சில சமயம் 200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் சென்று “எனது சொத்தை எடுத்துக்கொள். அந்த ஏழையின் வயிற்றில் அடிக்காதே” என்று துணிவுடன் சொல்பவராக இருந்தார். இந்திய நாடு முப்பரிமாண விடுதலை பெற வேண்டுமென்று சொன்னார். அரசியல், சமூக, பொருளாதார விடுதலை பெறுவதே முழுமையான சுதந்திரம் என்பதை வலியுறுத்தி வந்துள்ளார். எதற்கும் கதவடைத்துக் கொள்ளாத மொழியாக இருப்பதால்தான் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் பதிவு செய்திருக்கிறார். பாகுபாடுகளுக்கு இடமளிக்காத சமத்துவத்தையும் பண்பாட்டின், மக்களின் பன்முகத் தன்மையையும் பேணுகிற ஆளுமையாக உலா வந்தார். விஞ்ஞானபூர்வமான சிந்தனையை வளர்த்தெடுப்பதும் மொழிவழித் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைகளைப் பாதுகாப்பதும் பிரதான நோக்கங்கள் என்பதைச் சமரசமில்லாமல் பேசி வந்தார்.

பிறப்பின் பெயராலும் பொருளாதாரத்தின் பெயராலும் மக்கள் இழிவு செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ளாத மாவீரர் சிங்காரவேலர் என்று இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் மஞ்சுளா பேசினார். இவர் நூலை வெளியிட பிறர் பெற்றுக் கொண்டார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னையின் நேப்பியர் பாலத்துக்கு அருகிலிருந்து பூர்வகுடி மக்கள் வெளியேற்றப்பட்டபோது அதற்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்தவர் சிங்காரவேலர் என்ற தகவலை மானுடவியலாளர் பகத்சிங் பதிவு செய்தார். பவுத்தத்திலிருந்து காந்தியத்துக்கும் காந்தியத்திலிருந்து கம்யூனிஸத்துக்கும் சிங்காரவேலர் பயணப்பட்டதைப் பேச்சாளர்கள் பதிவு செய்தார்கள். நூலைப் பதிப்பித்த லிங்கன் பேசும்போது படிப்பால் ஜாதி ஒழிவதில்லை என்பதற்குப் படித்தவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் ரெட்டியார், நாயக்கர் என்றெல்லாம் போடுவது சிறந்த எடுத்துக்காட்டு என்று சிங்காரவேலர் கூறியுள்ளதை மேற்கோள் காட்டினார். பல்வேறு சமூகக் குழுக்களிடம் இன்னமும் சிங்காரவேலரைப் பற்றிய ஒவ்வாமை இருக்கிறது என்றார் லிங்கன். எல்லோருக்குமான தலைமைத்துவம் கொண்டவராக இருந்தாலும் சிங்காரவேலரை அவர் பிறந்த மீனவச் சமூகம் கொண்டாடிய அளவுக்குப் பிற சமூகங்கள் போற்றவில்லை என்கிற பார்வையை முன்வைத்தார்.

(இந்தச் செய்தியிலிருந்த சில தகவல் பிழைகள் சரிசெய்யப்பட்டுள்ளன.)

நாதமும் தாளமும் நீயானாய்

இறைநேசர்கள் சமூகப் போராளிகள்

The Raya Sarkar Interview

சட்டங்கள் ஏன் சமத்துவமானதாக இருக்க வேண்டும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here