மோடி 2.0 ; உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி தொழிலாளர்களைத் தாக்கிய கும்பல் (வீடியோ)

0
456

உத்தரப்பிரதேசம், ரேபரேலியில் கோயில் அருகே மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி 4 தொழிலாளர்களை ஒரு கும்பல் தாக்கியுள்ளது . இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 வீடியோவில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக 4 தொழிலாளர்களையும் ஒரு கும்பல் இடுப்பில் அணியும் பெல்ட்டால் , செருப்பால் அடிக்கும்,  உதைக்கும் காட்சியும், வலிதாங்காமல் அவர்கள் அலறும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையானதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலுக்கு ஆளாகிய அந்த தொழிலாளர்கள் 4 பேரும் ஒருவர் மூலம் பஹேரி பகுதிக்கு வேலைக்காக அழைத்து வரப்பட்டவர்கள். அந்த தொழிலாளர்களில் இருவர் சிறுபான்மையினர்.

இதுகுறித்து பஹேரி போலீஸ் நிலைய அதிகாரி கூறுகையில், ஒரு கட்டுமானப் பணிக்காக பஹேரியைச் சேர்ந்த  ஒருவர் 4 தொழிலாளர்களை அழைத்துவந்துள்ளார். அவர்கள் நேற்று ஒரு கோயிலுக்கு அருகே இருந்த மரத்தடியில் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார்கள்.

அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் கோயில் அருகே மாட்டிறைச்சி சாப்பிடுவதாகக் கூறி  அவர்களை பெல்ட்டால் அடித்து , உதைத்துள்ளார்கள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

ஆனால், தாக்குதலுக்கு ஆளாகிய தொழிலாளர்கள், செய்தியாளர்களிடம்  கூறுகையில்,  ” எங்களிடம்  பசுமாட்டிறைச்சி ஏதும் இல்லை எனக் கூறியும் எங்களை அந்த கும்பல் தாக்கினார்கள் ” எனத் தெரிவித்தனர்.

ரேபரேலி மாவட்ட போலீஸ் எஸ்பி கூறுகையில்,  இந்த தாக்குதல் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். தாக்குதல் நடத்திய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள், மற்ற 4  பேரை போலீஸார்  தேடி வருகிறார்கள்  எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here