திருநள்ளாறு தங்க நாணயம் பறிமுதல் விவகாரத்தில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக விநியோகம் நடந்ததாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் தெரிவித்தார்.
புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை இன்று மாலை சந்தித்துப் பேசும்போது, “புதுச்சேரியில் உழவர்கரை, நெல்லித்தோப்பு ஆகிய இரு தொகுதிகளில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். அதனால் இங்கு 1,558 கன்ட்ரோல் யூனிட், 1,677 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,558 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்குகள் மட்டும் இடம்பெறும். இத்தேர்தலில் 635 இடங்களில் 1,558 வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளோம். ஏனாம், மாஹே நீங்கலாக 28 தொகுதிகளில் மகளிர் கொண்டே செயல்படும் ஒரு வாக்குச்சாவடியைத் தொகுதிதோறும் அமைத்துள்ளோம்.
பாதுகாப்புப் பணியில் 2420 மாநிலக் காவல்துறையினரும், 901 ஐஆர்பிஎன் காவலர்களும், 1490 ஊர்க்காவல் படையினரும் (ஆயிரம் பேர் கர்நாடகத்திலிருந்து வந்துள்ளனர்), மத்திய ஆயுதக் காவல் படையினர் 40 கம்பெனியும் வந்துள்ளனர். இதில் புதுச்சேரியில் 27, காரைக்காலில் 6, மாஹேவில் 3, ஏனாமில் 4 பணியில் இருப்பார்கள்.
புதுச்சேரியில் 330 பதற்றமான வாக்குச்சாடிகள் உள்ளன. அதில் புதுச்சேரியில் 278, காரைக்காலில் 30, மாஹேவில் 8, ஏனாமில் 14 பதற்றமான வாக்குச்சாடிகள் உள்ளன. ஏனாமில் 16 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய ஆயுதப்படை பணியில் இருக்கும்.
கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொருத்தப்படும். வலைத்தளத்துடன் இணைந்து கண்காணிப்பு செய்வோம். புதுச்சேரியில் இதுவரை ரூ. 36.85 கோடி பணம், நகைகள் பறிமுதல் செய்துள்ளோம். மாதிரி நன்னடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.
மேலும் இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது. இரவில் மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளீர்களா?
புதுச்சேரி முழுக்க மின்சார இணைப்பு துண்டிக்கப்படாமல் தொடர்ந்து மின் விநியோகம் தர மின்துறையில் அறிவுறுத்தியுள்ளோம்.
திருநள்ளாறு தங்க நாணயங்கள் பறிமுதலில் தற்போதைய நிலை என்ன?
காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் பறக்கும் படையினர் சோதனையிட்டபோது, 149 தங்கக் காசுகள், ரூ.90 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவை கிடந்தன. பறக்கும் படையினர் அதனைக் கைப்பற்றினர். போலீஸார் இதுபற்றி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர். 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்க நாணயங்களின் மதிப்பு ரூ.5 லட்சம். அங்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. எனக்கு வந்த தகவலின்படி பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக அவற்றை விநியோகித்ததாகத் தெரியவந்துள்ளது.
ஏனாமில் சுயேச்சை வேட்பாளர் காணாமல் போயுள்ளார். தேர்தல் அங்கு நடக்குமா?
ஏனாம் சுயேச்சை வேட்பாளர் காணாமல் போனதாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்துத் தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இதனால் தேர்தல் நடைமுறைக்கு பாதிப்பு ஏதுமில்லை.
தேர்தல் ஆணையம் ஒரு சார்பாகச் செயல்படுவதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட பல கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனவே?
தேர்தல் ஆணையம் ஒரு சார்பாகச் செயல்படவில்லை. நடத்தை விதிமுறைகளை அப்படியே நடைமுறைப்படுத்துகிறோம்.
பாஜக வாக்காளர்களுக்கு மொத்தமாகக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதே?
பாஜக எஸ்எம்எஸ் அனுப்பிய விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அது அக்கட்சியின் செலவுக்கணக்கில் இணைக்கப்படும். இனி அனுமதி பெறாமல் யாரும் அனுப்பக்கூடாது என்று தெரிவித்துள்ளோம். அதேபோல் மொபைல் நிறுவனங்களிடமும் தெரிவித்துள்ளோம். சைபர் கிரைம் போலீஸாரும் இதுகுறித்து விசாரணை நடத்துகிறார்கள்.
இவ்வாறு தலைமைத் தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங் தெரிவித்தார்