பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக மக்கள் கறுப்பு கொடியுடன் போராடியது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பேரணியின் ஒரு பகுதியாக, வல்லம்படுகை ஊராட்சியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ”பிரதமர் மோடி வரும்போது தமிழகம் முழுவதும் கறுப்பு கொடி பறக்க வேண்டும், கறுப்பு உடையணிந்து, கறுப்பு பட்டைகளை அணிந்து, பிரதமர் மோடி வரும் நாள் நமக்கெல்லாம் ஒரு துக்க நாளாக, கறுப்பு நாளாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், நாம் எடுத்து வைத்த வேண்டுகோளை இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கின்றபோது, நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

stalin1

மேலும் அவர், ”விமான நிலையத்தில் இருந்து கிண்டிக்கு 5 முதல் 10 நிமிடத்தில் சென்றுவிடலாம். அதிலும், பிரதமர் வருகிறார் என்றால், போக்குவரத்தை முழுமையாக நிறுத்திவிட்டு, 2 முதல் 5 நிமிடங்களில் கிண்டிக்கு சென்று சேர்ந்துவிடலாம். ஆனால், அங்கு செல்ல காரில் வர பயந்து, சாலையில் பயணிக்க பயந்து, இரவோடு இரவாக அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஒரு ஹெலிபேட் உருவாக்கி, விமான நிலையத்தில் இருந்து கிண்டிக்கும் ஹெலிகாப்டரில் சென்று இறங்குகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார். நான் கேட்கிறேன், இப்போது ஆகாயத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும், தேர்தல் வருகின்ற நேரத்தில் நீங்கள் கீழே இறங்கி வந்துதான் தீரவேண்டும்? அதை நீங்கள் மறந்து விடக்கூடாது. தேர்தலின்போது ஆகாயத்திலேயே பறந்து ஓட்டு கேட்பீர்களா? அப்போது கீழே இறங்கி வந்துதான் தீரவேண்டும். என்னதான் பறவைகள் உயர உயர பறந்து கொண்டிருந்தாலும், இரை தேடி கீழே வந்துதான் தீரவேண்டும். எனவே, எதையும் பார்க்க வேண்டாம், எதையும் தெரிந்து கொள்ள வேண்டாம் என்று ஆகாயத்திலேயே பறந்து கொண்டிருந்தால், “பூனை கண்ணை மூடிக்கொண்டு, பூலோகமே இருண்டு விட்டது என்று கருதும்”, என்பதுபோன்ற நிலை அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது.” என்றார்.

இதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்