பா.ஜ.க அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டம் பற்றி, “பயிர் காப்பீடு என்னும் பெயரில் ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் முதலான தனக்கு வேண்டிய கார்பொரேட்களுக்கு ஒரு தங்கச் சுரங்கத்தைத் தாரை வார்த்துள்ளார் மோடி”. என எழுதுகிறது ஒரு இதழ். இரண்டே இரண்டாண்டுகளில் ஒரு பத்து நிறுவனங்கள் பெற்றுக் கொண்ட பிரீமியம் தொகைக்கும் அவை அளித்த இழப்பீட்டுத் தொகைக்கும் உள்ள வித்தியாசம் கொஞ்ச நஞ்சமல்ல. கிட்டத்தட்ட 16,000 கோடி ரூபாய்கள்.

இதெப்படி என்கிறீர்களா? விவசாயிகளின் பிரச்சினைகளை கடந்த பல ஆண்டுகளாக எடுத்து மக்கள் முன் வைப்பதை ஒரு வாழ்நாள் பணியாக மேற்கொண்டுவரும் சாய்நாத் இரண்டு நாட்கள் முன் சொன்னதைக் கவனியுங்கள்.

ரஃபேல் ஊழலைக் காட்டிலும் பெரிய ஊழல் மோடி அரசு உருவாக்கியுள்ள விவசாயிகளுக்கான காப்பீட்டுத் திட்டமாகிய “பிரதான் மந்திரி பீமா ஃபசல் யோஜனா” ஊழல்தான் எனச் சொல்லும் சாய்நாத் அதை இப்படி விளக்குகிறார்:

“மகாராஷ்டிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மாவட்டத்தில் 2.8 இலட்சம் விவசாயிகள் சோயா சாகுபடி செய்தார்கள். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் செலுத்திய ‘பிரீமியம்’ தொகை 19.2 கோடி ரூ. இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அரசு தன் பங்காகக் கொடுத்த தொகை 77 கோடி ரூ. அதே போல மத்திய அரசு கொடுத்த தொகை இன்னொரு 77 கோடி ரூ. சாகுபடி பொய்த்தது. அப்போது விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் அளித்த இழப்பீட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 30 கோடி. ஆக 173 கோடி ரூ மக்கள் பணம் ரிலையன்சுக்கு அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இழப்பீடாக விவசாயிகளுக்குக் கொடுத்த தொகையோ வெறும் 30 கோடி ரூ. இது ஒரு மாவட்டத்தில் மட்டும் நடந்த ஊழல். இதில் ரிலையன்சின் முதலீடு ஒரு பைசா கூட இல்லை. ஒரு பைசா முதலீடு இல்லாமலேயே 143 கோடி ரூபாயை இடு மாவட்டத்தில் மட்டும் சுருட்டிக் கொண்டுள்ளது ரிலையன்ஸ். ”

இப்படித்தான் இந்தப் பத்து கார்பொரேட் நிறுவனங்களும் இரன்டாண்டுகளில் 16,000 கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்துள்ளன. சரியாகச் சொல்வதானால் மோடி அரசு இந்தக் கொள்ளையர்களின் சாக்குப் பைகளில் மக்கள்பணத்தை அள்ளிக் கொட்டியுள்ளது.

இந்த ‘பிரதான் மந்திரி ஃபசல் யோஜனா’ திட்டத்தை இப்போது விவசாயிகள் நம்புவதில்லை. ஏனெனில் அவர்களுக்கு இதனால் பெரிய பயன் இல்லை. சாய்நாத் சொன்ன எடுத்துக்காட்டையே பார்ப்போம். விவசாயிகள் செலுத்திய பிரீமியம் 19.2 கோடி அவர்களுக்குக் கிடைத்தது வெறும் 30 கோடி. அவர்களின் இழப்போடு ஒப்பிடும்போது அவர்களுக்குக் கூடுதலாகக் கிடைத்த இந்தப் பத்துக் கோடி யானைப் பசிக்குச் சோளப் பொறி. மொத்தத்தில் இந்த விளையாட்டில் மூட்டை மூட்டையாய் அள்ளிச் சென்றவர்கள் கார்பொரேட்கள்தான்.

பா.ஜ.க ஆளும் நாங்கு மாநிலங்களில் மட்டும் இப்போது 84 இலட்சம் விவசாயிகள் இந்த பிரதான் மந்திரி திட்டத்திலிருந்து விலகி ஒட்டியுள்ளது தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக நமக்குக் கிடைத்துள்ள தகவல். மத்தியப் பிதேசத்தில் மட்டும் 2.9 லட்சம் விவசாயிகள் இந்தத் திட்டத்தை விட்டு ஓடியுள்ளனர். ராஜஸ்தானில் 31.25 லட்சம் விவசாயிகள், மகாராஷ்டிரத்தில் 19.47 இலட்சம், உ.பியில் 14.69 இலட்சம் விவசாயிகள் இந்தத் திட்டத்தை விட்டோடியுள்ளனர். இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ள பி.பி. கபூர் எனும் தவல் சட்டப் போராளி இந்த விவரங்களைச் சென்ற செப்டம்பர் 12 அன்று பெற்றுள்ளார். “இந்த பயிர் பாதுகாப்புத் திட்டம் மோடி அரசின் மிகப் பெரிய ஊழல். இது விவசாயிகளுக்கான திட்டமல்ல. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடைவதற்கான திட்டம்” என்கிறார் அவர்.

காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையைக் குறைத்த கொடுமை..

2016 -17 பொருளாதார ஆண்டில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அளித்த இழப்பீட்டுத் தொகை ரூ 17,902.47 கோடி. இந்த நிறுவனங்களுக்குக் கிடைத்த லாபம் 6459.64 கோடி. ஒரு பைசா மூலதனம் இன்றிக் கிடைத்த இந்த ஆறாயிரத்து நானூற்று ஐம்பது கோடி ரூ அவர்களுக்குப் போத வில்லையாம். அடுத்த பொருளாதார ஆண்டில் (2017-18) 2000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீட்டைக் குறைத்து தங்கள் லாபத்தை அவை அதிகரித்துக் கொண்டன. அந்த ஆண்டு அவர்கள் அளித்த இழப்பீட்டுத் தொகை15,710.25 கோடி மட்டுமே.

இதன் பொருளென்ன? மோடி அரசின் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் கொள்ளை அதிகரித்துள்ளது. மோடிக்கு வேண்டிய இந்த காப்பீட்டு நிறுவனங்களின் இடைத் தரகு இல்லாமல் அரசே இதை நேரடியாகச் செய்திருந்தால் அவர்கள் வாரிச் சுருட்டிக் கொண்ட இந்தக் கொள்ளை லாபம் அனைத்தும் விவசாயிகளைச் சென்றடைதிருக்கும்.

Agriculture Insurance Company (AIC) எனும் ஒரே ஒரு அரசு காப்பீட்டு நிறுவனத்தோடு மேலும் மோடிக்கு வேண்டிய ரிலையன்ஸ், எஸ்ஸார் முதலான 10 நிறுவனங்களைச் சேர்த்ததுதான் பா.ஜ.க அரசின் ‘படா’ திறமை. இந்த 10 தனியார் நிறுவனங்களும் இல்லாமல் அந்த ஒரே அரசு நிறுவனத்திற்கு மட்டுமே அந்த உரிமையை அளித்திருந்தால் பயன் முழுவதும் விவசாயிகளைச் சென்றடைந்திருக்கும். அரசு நிறுவனங்கள் திறமையாய்ச் செயல்படுவதில்லை என்றெல்லாம் இங்கே பரப்பப்படும் இந்த நடுத்தர வர்க்கக் கருத்தியல் எப்படி இறுதியில் மக்களின் வயிற்றில் அடிப்பதாய் முடிகிறது என்பதற்கு இது இன்னும் ஒரு எடுத்துக்காட்டு.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கபூர் பெற்ற தகவல்களில் 2018ம் ஆண்டைப் பொருத்தமட்டில் காரிஃப், ராபி (நமது குறுவை, சம்பா என்பதுபோல) இரண்டு சாகுபடிக்கான தகவல்களும் உள்ளடங்கி இருக்கிறது. இதில் ராபி சாகுபடி தொடர்பான இழப்பீட்டுக் கோரிக்கையில் பெரும்பான்மைக் கோரிக்கைகள் இன்னும் இந்தத் தனியார் நிறுவனங்களால் மதிப்பீடு செய்து இழப்பீடு நிர்ணயிக்கப்படவில்லை. அவ்வாறு நிர்ணயிக்கும்போது விவசாயிகளுக்குக் கிடைக்கப் போகிற இழப்பீட்டின் மதிப்பு இன்னும் குறியும் என்கிறார் கபூர்.

தமிழகத்தில் என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை citizen.com விரிவாக விளக்கியுள்ளது. திண்டுக்கல்லில் உள்ள ஒட்டன்சத்திரம் தாலுகாவில் உள்ள கருப்புசாமி, மணிவண்ணன், தங்கராஜ் என்கிற ஒரு மூன்று விவசாயிகளுக்கு காசோலைகள் மூலமாக அளிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா? மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமிக்கு வழங்கப்பட்ட செக்கின் மதிப்பு 5 ரூ. பொதுவார்பட்டி மணிவண்ணனுக்குக் கிடைத்தது ஏழு ரூ. காளிப்பட்டி தங்கராஜுக்குக் காசோலை மூழம் வழங்கப்பட்ட இழ்ப்பீட்டுத் தொகை ரூ10.

இவர்கள் செலுத்திய பிரீமியம் தொகைகள் எவ்வளவு தெரியுமா? சோளத்திற்கு 212 ரூ. பஞ்சிற்கு 482ரூ. என்ன திமிர் இருந்தால் 5 ரூபாய்க்கும், 7 ரூபாய்க்கும் செக் கொடுப்பான்கள். மோடி அரசின் பணமில்லாப் பரிவர்த்தனை மக்களை எவ்வளவு கேலிக்குள்ளாக்குகிறது பாருங்கள்.

தமிழக விவசாயிகளின் பிரச்சினையை டெல்லி வரை எடுத்துச் சென்று போராடுகிற விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு, “இப்படி 5 ரூபாயிம் 7 ரூபாயும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது விவசாயிகளை அடிமைகளாகக் கருதுவது; இரண்டாம்தரக் குடி மக்களாகக் நடத்துவது” எனச் சீறியுள்ளார். காவேரி டெல்டா விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் ரெங்கநாதன் இந்தக் கொடுமையை விவசாயிகளை முட்டாளடிக்கும் வேலை எனக் கண்டித்துள்ளார்.

“பயிர் வளர்ச்சி அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்றபோது நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் இப்போது இழப்பீடுகளை என்ன அடிப்படையில் இப்படிக் கணக்கிடுகிறார்கள் என்பது குழப்பமாக உள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார். சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜீவகுமார் விவசாயிகளைக் கண்ணியக் குறைவாக அவமானப் படுத்தும் செயல் இது எனவும் பயிர் காப்பீட்டுத் திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே இருந்த National Agricultural Insurance Scheme முதலான பயிர் காப்பீட்டுத் திட்டங்களை எல்லாம் ஒழித்துக் கட்டிவிட்டு “ப்ரதான் மந்த்ரி ஃபசல் யோஜனா” திட்டம் என்கிற வாயில் நுழையாத இந்திப் பெயருடன் சென்ற ஜனவரி 13, 2016ல் ஏகப்பட்ட விளம்பரங்களுடன் நரேந்திர மோடி அரசு கொண்டுவந்த இந்த “யோஜனா” தமிழகத்தில் இப்படிச் சந்தி சிரிக்கிறது. கொடுக்கிற இந்த அற்பத் தொகைகளையும் சரியான நேரத்தில் கொடுப்பதில்லை என ஆங்காங்கு போராட்டங்கள் வேறு நடக்கின்றன.

அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம் (Centre for Science and Environment – CSE) சென்ற ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் விவசாயிகள் 6000 ரூ இழப்பீடு கேட்ட பகுதிகளில் 2000 கோடிதான் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அதே நேரத்தில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 15,891 கோடி ரூபாய்களைப் பிரீமியமாகப் பெற்றுள்ளன எனவும் கூறுவதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள்

இன்று இந்தியா முழுவதும் விவசாயிகள் விவசாயத்தை விட்டு ஓடும் நிலை அதிகரித்துக் கொண்டே உள்ளது. அவர்கள் தம் நில உடைமைகளை க் கொஞ்சம் கொஞ்சமாகக் கார்பொரேட்களிடம் இழந்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் 2000 விவசாயிகள் இப்படி நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளனர் என்கிறார் சாய்நாத். 86 சத விவசாயிகள் கடனில் தத்தளிக்கின்றனர். குத்தகை விவசாயிகளில் 80 சதம் பேர் கடன் சுமைகளைத் தாங்கியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் (1995-2015) இந்தியா மிழுவதும் 3.15 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பா.ஜ.க அரசு தங்களின் ஆட்சியில்நடந்த விவசாயிகளின் தற்கொலைக் கணக்கை வெளியிட மறுக்கிறது எனக் குற்றம் சாட்டுகிறார் அவர்.

இந்த நிலையில் இப்போது மோடி அரசின் இந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளின் வயிற்றில் அடித்து கார்பொரேட்களை ஊட்டி வளர்க்கும் நோக்குடன் இங்கே திணிக்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில்தான் நேற்று தொடங்கிய விவசாயிகள் பேரணி இன்று டெல்லியில் நிறைவடைகிறது. The All India Kisan Sangharsh Coordination Committee இதை முன்னின்று நடத்துகிறது. சென்ற சில மாதங்களுக்கு முன் மும்பையில் விவசாயிகளின் பெரும் பேரணி ஒன்று நடந்தது நினைவிருக்கலாம்.

மோடியின் இந்தப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை ஒழிக்க வேண்டும். அரசும், மக்களும் முதலீடு செய்யும் பிரீமியம் பணம் முழுவதும் மக்களுக்கே போய்ச் சேர வேண்டும். சாமிநாதன் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும். GST வரியை நடைமுறைப்படுத்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியுமானால் ஏன் விவசாயிகள் பிரச்சினையைப் பேச நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது?

பயன்பட்ட கட்டுரைகள்
“”””””””””””””””””””””””””””””””””””””””
“A scam bigger than Rafale”: P. Sainath on Modi government’s Fasal Bima Yojana,Written by Contributor, The Business Standard,9th November 2018

Gaurav Vivek Bhatnagar, How the PM’s Crop Insurance Scheme Turned Into a Goldmine for 10 Private Insurers, thewire.in, Nov 13, 2018

M.Mahalingam, The Big Ptivate Crop Insurance Scam: Farmers Pay Premium of Rs 482, ReceiveRs % as Insurance!, Citizen.com 22, Aug 2018

Jatin Gandhi, Crop insurers made Rs 10,000 crore profit amid agrarian crisis: CSE, Hindustan Times July 22, 2017

இதையும் படியுங்கள்: இயற்கைப் பேரிடர்களும் கொடை அரசியலும்

இதையும் படியுங்கள்: தூத்துக்குடி படுகொலைகள்: அற வீழ்ச்சியின் அதல பாதாளம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here