மோடியைப் போல ராணுவத்தை பயன்படுத்தி இந்திரா காந்தி வாக்கு சேகரிக்கவில்லை

0
846


 ராணுவ வீரர்களின் தியாகத்தையும், துணிவையும் பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி வாக்கு சேகரித்ததைப் போல, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஒருபோதும் வாக்கு சேகரிக்கவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. 

இதையொட்டி, பாலாபூரில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சரத் பவார் பேசியதாவது:

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழந்தனர். அந்த தாக்குதலுக்கு விமானப் படை மூலம் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த சம்பவங்களைக் கூறி கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. அந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றதுடன், பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசத்தை பிரித்து அப்பகுதி மக்களுக்கு விடுதலை பெற்று தந்தவர் இந்திரா காந்தி. இந்தப் போரில் வீரர்கள் காட்டிய துணிவையும், அவர்களது தியாகத்தையும் இந்திரா காந்தி பயன்படுத்திக் கொள்ளவில்லை. புல்வாமா தாக்குதலுக்கு விமானப் படையே பதிலடி தந்தது. 

ஆனால், ‘நாங்கள் செய்தோம், நாங்கள் செய்தோம்’ என்று மோடி கூறிக் கொண்டிருக்கிறார். எல்லையில், ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்துகின்றன. ஆனால் இவர்கள் டெல்லியில் இருந்து கொண்டு பெருமை பேசுகிறார்கள்.

மகாராஷ்டிரத்திலும், மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை. அவா்களின் துயரத்தை போக்கவில்லை. மகாராஷ்டிரத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனா். நடைபெறவிருக்கும் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார் சரத் பவார்.