மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கான அடிப்படை பணிகள் நடந்து வரும் நிலையில் தங்கள் நிலம் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பிரதமர் மோடியின் கனவுத்திட்டங்களில் ஒன்று மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் திட்டமாகும். ஜப்பான் உதவியுடன் 1.10 லட்சம் கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட உள்ள புல்லட் ரயில் 2022ஆம் ஆண்டு முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால், நாட்டில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்தியஅரசு நம்புகிறது.

இந்த நிலையில் புல்லட் ரயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1,000 விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதையடுத்து நிலம் எடுப்பதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் மனுத்தாக்கல் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் ‘‘2013-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விவசாய நிலம் எடுப்புச் சட்டத்தை முறைகேடாக மாற்றி, குஜராத் அரசு மோசடி செய்கிறது. விவசாயிகளிடம் எந்தவித கருத்தும் கேட்கப்படாமலேயே ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றி இந்த அரசுக்கு எந்த கவலையும் இல்லை. எனவே இந்த திட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்’’ எனக் கோரியுள்ளனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. பதில் மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கேட்பதால் கடந்த 5 வாரங்களாக இந்த வழக்கை குஜராத் உயர் நீதிமன்றம் விசாரிக்க முடியவில்லை. எனவே ஆயிரம் விவசாயிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தை அணுகி திட்டத்துக்கு தடை கோர உள்ளோம் என்று விவசாயிகள் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் யாக்னிக் கூறினார்.

இந்த திட்டத்துக்காக சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

(இந்தச் செய்தி பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது )

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்