மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட், பாஜக அரசின் கடைசி ஏமாற்று வேலை என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இது குறித்து அர்விந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட், டெல்லிக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. மத்திய வரியில் டெல்லியின் பங்களிப்பான ரூ.325 கோடி அப்படியே மாறாமல் உள்ளன. மாநகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. டெல்லி தனது சொந்த நிதியில் மீண்டும் சார்ந்திருக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் ஏழைகள், விவசாயிகள் ஆகியோருக்குச் சாதகமான அம்சங்கள் இல்லை. கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்படவில்லை. விவசாயிகளின் விளைபொருள்களுக்கு கூடுதல் விலை வழங்கப்படவில்லை. விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. இந்த பட்ஜெட் மத்திய அரசின் கடைசி ஏமாற்று வேலை ஆகும் என்று பதிவிட்டுள்ளார்.

பண மதிப்பிழப்பு குறித்தும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அர்விந்த் கெஜ்ரிவால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மாபெரும் மோசடியாகும் என்று மோடி அரசை விளாசியுள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை பேரழிவு மட்டுமல்ல. அது மிகப் பெரிய ஊழல் ஆகும். அது இந்தியாவின் பொருளாதாரத்தை அழித்தது. என்எஸ்எஸ்ஓவின் அறிக்கையை வெளிவராமல் தடுக்க மோடி அரசு எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டில் இருந்து இப்போதுதான் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here