சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை இரண்டு முறை நீக்கிய பிரதமர் மோடியின் மனதில் பயம் இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சிபிஐ இயக்குநரான அலோக் குமார் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் எழுந்ததையடுத்து இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் பணிகளில் இருந்து விடுவித்து, விடுப்பில் அனுப்பி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதன்பின்னர் அலோக் வர்மாவின் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அக்டோபர் 24ஆம்தேதி அதிகாலை 1 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. இதன்பின்னர் அலோக் வர்மாவின் இடத்தில் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டிருந்தார்.

கட்டாய விடுமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இதில் அலோக் வர்மாவின் அதிகாரப் பறிப்பு மற்றும் கட்டாய விடுமுறைக்குக் காரணமான மத்திய அரசின் உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருந்த அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநர் பணியில் அமர்த்தப்பட்டார். இருப்பினும் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் முடிவு செய்யும் வரை, அலோக் வர்மாவால் கொள்கை முடிவுகள் எடுக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் அந்தக் குழு இரண்டாவது நாளாக வியாழக்கிழமை மாலை கூடி ஆலோசனை நடத்தியது. முடிவில் தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படைத் துறையின் இயக்குநராக அலோக் வர்மா நியமிக்கப்பட்டார்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ”மோடியின் மனதில் இப்போது பயம் ஏற்பட்டிருக்கிறது. அவரால் தூங்க முடியாது. இந்திய விமானத் துறையில் இருந்து 30 ஆயிரம் கோடி ரூபாயைத் திருடி, அனில் அம்பானிக்குக் கொடுத்துவிட்டார். சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை இரண்டு முறை நீக்கி இருக்கிறார். இந்த செயல் , மோடி தன்னுடைய பொய்களிலேயே சிக்கிக்கொண்டிருக்கிறார் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. சத்யமேவ ஜெயதே!” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here