மல்லையாவுக்கு சிபிஐ விடுத்திருந்த வலுவான லுக் அவுட் நோட்டீஸ் எவ்வாறு நீர்த்துப் போகச் செய்யப்பட்டது, இதற்கு யார் காரணம்? அக்டோபர் 24, 2015-இல் தப்பிச் செல்வதை தடுக்கும் நோட்டீஸ், சென்றால் தெரிவிக்கவும் என்ற நோட்டீஸாக மாறியது எப்படி என்ற சர்ச்சை தொடர்ந்து போய் கொண்டிருக்கிறது .

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , மல்லையாவின் லுக் அவுட் நோட்டீஸை நீர்த்து போக செய்தது சிபிஐயின் இணை இயக்குனர் அருண் குமார் சர்மா, இவர் குஜராத்தில் கேடர் அதிகாரியாக இருந்தபோது மோடிக்கு மிகவும் பிடித்தமானவர் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து டிவிட்டரில் சிபிஐயின் இணை இயக்குனர் அருண் குமார் சர்மா மல்லையாவின் லுக் அவுட் நோட்டீஸை நீர்த்து போக செய்தவர். இவர் குஜராத்தில் கேடர் அதிகாரியாக இருந்தபோது மோடிக்கு மிகவும் பிடித்தமானவர் மற்றும் மதிப்பிற்குரியவர்.

இவர்தான் நிரவ் மோடி, மெஹுல் சோக்ஸி தப்புவதற்கும் காரணமாக இருந்தவர் என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி இந்தத் தகவலை என்டிடிவி யில் வந்த செய்தியின் அடிப்படையில் பதிவிட்டுள்ளார். என்டிடிவி யில் வந்த செய்தி சர்மாதான் சிபிஐ இயக்குனராக இருந்த அனில் சின்ஹாவிடம் தெரிவிக்காமல் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை நீர்த்து போக செய்தவர் என்று கூறுகிறது.

மேலும் சர்மா சட்டத்தை மீறி மேலதிகாரியின் ஒப்புதலை பெறாமல் இவ்வாறு செய்துள்ளார். ரூ60 கோடி வரையிலான மோசடியாக இருந்தால் சிபிஐயின் இணை இயக்குனரே தன்னிச்சையாக முடிவெடுக்கலாம் என்று விதிமுறைகள் கூறுகின்றன.

சர்மா, குஜராத்தில் கேடர் அதிகாரியாக இருப்பதற்கு முன், அகமாதாபாத்தில் காவல்துறை இணை ஆணயராக இருந்துள்ளார். அப்போதுதான் மோடிக்கும், அமித் ஷா-க்கும் மிகவும் நெருக்கமாகியிருக்கிறார் என்று தி ஹிந்து (ஆங்கிலம் ) நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது .

சர்மா 1987இல் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் . மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது நடந்த இஸ்ரத் ஜகான் என்கவுன்டர் வழக்கில் விசாரணையை சீர்குலைக்க அதிகாரிகள் நடத்திய சந்திப்பில் இவரும் கூடவே இருந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

அக்டோபர் , 16, 2015 இல் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றால் கைது செய்ய வேண்டும் என்று சிபிஐ உத்தரவு பிறப்பித்திருந்தது . ஆனால் ஒரு மாதத்துக்கு உள்ளாகவே சிபிஐ தனது நிலைப்பாடை மாற்றி, தப்பிச் சென்றால் தெரிவிக்கவும் என்று உத்தரவு பிறப்பித்தது .

இந்த உத்தரவு வந்த 3 மாதங்களுக்குள் மல்லையா யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிட்டெடின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து தனக்கு வரவேண்டிய 75 மில்லியன் டாலர்களைப் பெறுகிறார். ராஜினாமா செய்யும்பொது இங்கிலாந்தில் இருக்கும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்கவே ராஜினாமா செய்கிறேன் என்று கூறினார்.

மல்லையா ராஜினாமா செய்த பிப்ரவரி 26 அன்று பாரத வங்கிக்கு (State Bank of India ) மல்லையா ரூ1600 கோடி கடன்காரராக இருந்தார். அன்று பாரத வங்கி பெங்களூரில் இருக்கும் கடன் மீட்பு நீதிமன்றத்திடம் அவருடை பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது . கடன் மீட்பு நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்து கொண்டிருந்த மார்ச் 2 ஆம் தேதி மல்லையா நாட்டை விட்டு தப்பி செல்கிறார். மல்லையா டெல்லியிலிருந்து தப்பிச் செல்லும் போது அவருக்கு எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.

மல்லையா நாட்டைவிட்டு தப்பிச் சென்றவுடன் பாரத வங்கி கர்நாடாகா உயர்நீதிமன்றத்திலும் , உச்சநீதிமன்றத்திலும் கொடுத்த கடனை திரும்ப பெற முறையீடு செய்கிறது . அப்போது இங்கிலாந்தில் இருந்த மல்லையா மீது நடவடிக்கை எடுக்க இரண்டு நீதிமன்றங்களுக்கும் அதிகாரம் இல்லை. பிப்ரவரி 2017 இல் , மோடி அரசு மல்லையாவை நாட்டுக்கு கொண்டு வர பிரிட்டனிடம் கோரிக்கை வைத்தது . அந்த வழக்குதான் இன்னமும் நடந்துக் கொண்டிருக்கிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here