அடுத்த ஐபிஎல் போட்டியின்போது நடக்கவுள்ள போராட்டம் வேறுவிதமாக இருக்கும் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டங்கள் தீவிரமடைந்து வரும்நிலையில் சென்னையில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தக் கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் எதிர்ப்பையும் மீறி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (ஏப்.10) போட்டி நடைபெற்றது.

போட்டிகள் தொடங்கும் முன் சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. போராட்டம் நடத்தியவர்களைப் போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர். இதனிடையே போலீசாரைப் போராட்டக்காரர்களும் தாக்கினர்.

போலீசாரைத் தாக்கியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சீமான் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாரதிராஜ, சீமான், அமீர், சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கூட்டாக இன்று (ஏப்.11) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய பாரதிராஜா, போராட்டத்தில் எதிர்ப்புதான் தெரிவிக்கப்பட்டது என்றும், யார் யாரையும் தாக்கவில்லை என்றும் தெரிவித்தார். நாளை (ஏப்.12) தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவது நிச்சயம் என்றும், நாளை (ஏப்.12) காலை ஒன்பது மணிக்கு சென்னை விமானநிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இயக்குநர் அமீர் பேசுகையில், அதிகார வர்க்கத்திற்கு மட்டுமே ரஜினி ஆதரவாக பேசுவார் என்றும், போராட்டக்களத்திற்கு வந்தால்தான் காவலர்கள் யார் என்பது பற்றி ரஜினிகாந்த்திற்கு தெரியவரும் என்றார்.

அதேபோன்று காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசிய பேரியக்க தலைவருமான பெ.மணியரசன் பேசுகையில், சீமான் உள்ளிட்டோர் மீதான பொய் வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், சீமானைக் கைது செய்தால் போராட்டத்தில் கலந்துகொண்ட தங்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்