தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி (நாளை) வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, அனைத்து தொழில்களும் முடங்கின.

ஊரடங்கை  தமிழகத்தில் படிப்படியாக தளர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே, மத்திய அரசால் விதிக்கப்பட்ட 2ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் 14 நாட்களுக்கு ஊரடங்கு  நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

இதில், நோய் தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டல பகுதிகளில்  பல்வேறு தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, அனைத்து மண்டலங்களிலும் சீல் வைக்கப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் மதுக்கடைகள், பீடா கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு 6 அடி இடைவெளியுடனும், ஒரே நேரத்தில் 5 பேருடன்  மட்டுமே மதுக்கடைகள் செயல்படலாம். எனினும், இது தேசிய அளவிலான அனுமதிதான் என்பதால், இதுகுறித்து மாநில அரசுகள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஊரடங்கை மத்திய அரசு நேற்று நீட்டித்து உத்தரவிட்ட நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு  அறிவித்த தளர்வுகளை தமிழக அரசு பின்பற்ற முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டுகளை தொடர தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், மத்திய அரசு அறிவுறுத்தலின் படி, டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here