மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்படுத்துவது குறித்து அமித் ஷா எதுவும் கூறவில்லை ;மம்தா பானர்ஜி

0
206

அஸ்ஸாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 19 லட்சம் மக்கள் விடுபட்ட விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசித்ததாக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், மேற்கு வங்கத்தில்  தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்படுத்துவது குறித்து அமித் ஷா எதுவும் பேசவில்லை என்றும் அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்ததைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று (வியாழக்கிழமை) மம்தா பானர்ஜி சந்தித்தார்.

இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “அஸ்ஸாமில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 19 லட்சம் பேர் விடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குடிமக்கள் பதிவேட்டில் இணைக்கப்பட வேண்டும். இதனை அமித் ஷாவிடம் வலியுறுத்தினேன்.

இது தொடர்பாக அமித் ஷாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துள்ளேன். அக்கடிதத்தில் விடுபட்ட 19 லட்சம் பேரில் இந்தி, வங்க மொழி, அஸ்ஸாம் மொழி பேசுபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். உண்மையான வாக்காளர்கள் நிறைய பேர் விடுபட்டுள்ளனர். இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்று சுட்டிக் காட்டியிருக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்படுத்துவது  குறித்து அமித் ஷா என்னிடம் ஏதும் பேசவில்லை. மேற்கு வங்கத்துக்கு தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையில்லை என்பதே எங்களின் நிரந்தர நிலைப்பாடு” என்று கூறினார்.

முன்னதாக, பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து ஆலோசித்தீர்களா என்று நிருபர்கள் மம்தாவிடம் கேட்டபோது, “இந்தச் சந்திப்பு மத்திய அரசுக்கும் – மாநில அரசுக்கும் இடையேயானது” என்று கூறிச் சென்றார். இந்நிலையில், இன்று குடிமக்கள் பதிவேட்டைப் பற்றி மம்தா பேசியுள்ளார்.

அஸ்ஸாமில் அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 3 கோடி மக்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. 19 லட்சம் பேர் விடுபட்டனர். விடுபட்டவர்கள் வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம் என மத்திய அரசு கூறியிருக்கிறது 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here