மேற்கு வங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்

0
260

கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அடுத்த படியாக, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முதன்முதலாக கேரள சட்டசபையில்  சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு கூட்டத்தொடரில் முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். 

இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில சட்டசபையிலும் சிறப்பு தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. ராஜஸ்தான் சட்டசபையிலும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்க சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டசபையில் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்யவும், நாடு தழுவிய அளவில் தேசிய குடிமக்கள் பதிவேடு , தேசிய மக்கள் தொகை பதிவேடு  ரத்து செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்வதாக கூறினார்.

சபையில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியுரிமை சட்டம் மக்களுக்கு விரோதமானது. அந்த சட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். அதற்காக எனது அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்றார்.

மேற்கு வங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு, என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றை அனுமதிக்க மாட்டோம். எங்களது போராட்டம் அமைதியான முறையில் இருக்கும். குடியுரிமை சட்டதிருத்தப்படி வெளிநாட்டவரை இந்திய குடிமக்களாக மாற்றிக் கொள்ளலாம். இதுமோசமான விளையாட்டு. நம்மை அழிவுக்கு கொண்டு செல்லும் வழி இது. இந்த சூழ்ச்சியில் யாரும் சிக்க வேண்டாம். 

சந்தேகப்படும்படியான குடிமகன்கள், அகதிகள் முகாம் இவையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இதற்கு பிறக்காமலேயே இருந்திருக்கலாம் என்று இவை சொல்ல வைக்கும். இன்றைக்கு மக்கள் தாங்கள் இந்த நாட்டை விட்டு  வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சத்தில் உள்ளனர். அனைத்து விதமான அடையாள அட்டைகளை பெறுவதற்கு அவர்கள் வரிசையில் நிற்கின்றனர். 

பாகிஸ்தானின் விளம்பரத் தூதராக பாஜக செயல்பட்டு வருகிறது. எப்போது பார்த்தாலும் அவர்கள் பாகிஸ்தானை மட்டுமே பேசுகிறார்கள். இந்தியாவைப் பற்றி அவர்கள் பேசுவது கிடையாது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here