’மேற்குத் தொடர்ச்சி மலை’யில் ரங்கசாமியாக நடித்த ஆன்டனியின் கால்களின் கீழ்ப்பகுதி தசைகளை நீங்கள் பார்க்கும்போது அது மலையில் நடப்பதற்குத் தகுதியானதாக தெரிய வேண்டும்; பார்வையாளருக்கு அது உண்மையானதாக இருக்க வேண்டும். அதற்காக படப்பிடிப்புக்கு முன்பு ஒரு வருடமாக ஆன்டனி அந்த மலையில் ஏறி, இறங்கி பழகியிருக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த காயத்ரி, படப்பிடிப்புக்கு முன்பு இரண்டு மாதங்களுக்கு மேலாக ஏலக்காய் தோட்டத்தில் மற்ற பெண்களுடன் வேலை பார்த்திருக்கிறார். இந்தப் படத்துக்கான முன் தயாரிப்பு மூன்று வருடங்களாக நடந்திருக்கிறது. இவ்வளவு உழைப்பு இல்லாமல் இந்தத் திரைக் காவியத்தை இயக்குனர் லெனின் பாரதியால் 49 நாட்களில் படமாக்கியிருக்க முடியாது. மார்கழியின் பெரும் பகுதியிலும் தை மாதத்தின் முன் பகுதியிலும் இது படமாக்கப்பட்டதாக அவர் இப்போது டாட் காமிடம் சொன்னார். ஒவ்வொரு காட்சியும் மனதிலிருந்து நீங்காத பெரும் காவியமாக விரிகிறது “மேற்குத் தொடர்ச்சி மலை”. ஒரு படைப்பின் உண்மை மக்களை ஈர்க்கும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறது இந்தப் படம்.

முக்கியக் கதாபாத்திரங்களுக்காக மட்டும் இயக்குனர் மெனக்கெடவில்லை; கங்காணி என்கிற கதாபாத்திரத்தில் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள பன்முகத் தன்மையை உதாரணமாக பார்க்கலாம். தோட்டத்து முதலாளிக்காக வேலை செய்கிற கங்காணி, தோட்டத் தொழிலாளர் சங்கத்து உறுப்பினர் கங்காணி, சாலைத் திட்டத்தால் தங்குமிடத்தைத் தொலைத்த கங்காணி என்று ஒவ்வொரு தருணத்திலும் அந்த மனிதர் உங்களோடு கைப்பிடித்து நடக்கிறார். தொழிற்சங்கவாதியாக வரும் சாக்கோ கதாபாத்திரத்தில் வெளியாகும் நுட்பங்களும் அதிசயிக்க வைக்கின்றன. ஆண் மையப்பட்ட கதை சொல்லல்தான் என்றாலும் பெண் பாத்திரங்களும் முழுமையாக வெளிப்பட்டு கதையின் போக்கில் நம்மோடு பயணிக்கிறார்கள்.

மக்கள் அழகானவர்கள்; மலை அழகானது; மேகங்கள் அழகியவை. இதனை நினைவூட்டுவதற்கு லெனின் பாரதியின் “மேற்குத் தொடர்ச்சி மலை” கொஞ்சம் உதவக்கூடும். இதனை ஆழ்ந்து உணரும்போது நாம் கடலுக்கும் மண்ணுக்கும் மனசுகளுக்கும் வானுக்கும் உண்மையாக இருப்போம். ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு கணத்துக்கும் முழு அர்ப்பணிப்புடன், பேரன்புடன் இருப்பதற்கு நிலத்தில் கால் பற்றி நடக்க வேண்டும், ஆழ்கடலில் மூழ்கி எழ வேண்டும்; மலையில் ஏறி இறங்க வேண்டும்; சக மனிதர்களுடன் பேசிப் பழக வேண்டும். பொய்களும் சதிகளும் பேராசைகளும் வலைப் பின்னும்போது இயற்கை தனது பேரன்பால் அதனை வெற்றி கொண்டு முன் செல்லும்; அதனோடு இயைந்து வாழும் உயிர்களும் அந்த வெற்றியைக் கொண்டாடும்.

ஒரு மலைக்கிராமத்தின் வெள்ளந்தி மனிதர் ரங்கசாமி; இவரது அம்மா காளியம்மா. இவர்களது இரு தசாப்த வாழ்வினூடாக சமகால யதார்த்தத்தின் சில பக்கங்களைச் சொல்லிச் செல்கிறது “மேற்குத் தொடர்ச்சி மலை.” நமக்குக் கிடைத்திருக்கிற தரவுகளின்படி, உலகெங்கும் 65 சதவீதமான நிலம் பழங்குடி மக்களுக்கும் பூர்வகுடி கடலோர மற்றும் வேளாண் சமூகங்களுக்கும் சொந்தமானது. ஆனால் இதில் 18 சதவீதத்தை மட்டுமே அவர்கள் இன்றைக்கு உரிமை கொண்டாடுகிறார்கள். ஏனைய நிலங்களை ஆளுகிறவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் மேலாதிக்க அதிகாரத்தைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்துகிறார்கள். இந்த மேலாதிக்க அதிகாரம் என்பது பணத்தை மேலாண்மை செய்வது, அறிவை மேலாண்மை செய்வது என்பதாக சில வடிவங்களில் நிகழ்கிறது. இந்த விளையாட்டை மக்களுக்கானதாக மாற்றும் கருவியாக சில கதைகள் நிகழும். அதில் ஒன்றுதான் “மேற்குத் தொடர்ச்சி மலை.”

ரங்கசாமியும் சாக்கோவும் மீரா அத்தாவும் இங்கு சக மனிதர்கள்; ஈஸ்வரியும் பாக்கியமும் சுபேதாவும் சக மனுஷிகள்; எல்லோரும் இயற்கையின் பிள்ளைகள். இந்த மானுடத்தைப் பேராசையாலோ சூழ்ச்சியாலோ சிதைத்துவிட எத்தனிப்பதும் அதை இந்தச் சாதாரண மனிதர்கள் ஒன்றுகூடி வெற்றி கொள்வதும் ஒரு நம்பிக்கைக் கதை; மகாகவி பாரதியின் வரிகளில் சொல்வதானால் “அன்பென்று கொட்டு முரசே; ஒன்றென்று கொட்டு முரசே.” இதைத் தயாரித்த விஜய் சேதுபதிக்கும் இதில் பாத்திரங்களாகவே வாழ்ந்துவிட்ட ஆன்டனி, காயத்ரி போன்ற எல்லோருக்கும் மனசின் அடியாழத்திலிருந்து வணக்கங்களும் வாழ்த்துகளும்.

(செப்டம்பர் 16, 2018)

இயக்குனர் லெனின் பாரதியின் நேர்காணல் இங்கே:

இரு படங்கள்; ஒரு கதை

வடமாவுக்கும் பறையருக்கும் என்ன சம்பந்தம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here